Sunday 29 March 2015

எதிர்பாராதவர்கள் -II

இசை விரும்பிகளின் இடையே இதுபோன்ற எதிர்பாராத பதிவுகளில் நான் சந்தித்த அல்லது கேள்விப்பட்ட ஆச்சர்யமான மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன். இதில் இசை கிடையாது. ஆனால் இசை தரும் அந்த உன்னதமான அனுபவம் உண்டு.




                      எதிர்பாராதவர்கள் -II 

     சில சமூக விழுமியங்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. அவை நம் மன ஆழத்தில் நமது டி என் ஏ அமிலங்களில் அமிழ்ந்திருந்து பிறகு ஏதோ சில   சந்தர்ப்பங்களில்  திடீரென்று தோன்றுவதற்காகக்   காத்திருக்கின்றன - ஒரு வானவில் போன்று
   
   இது நடந்தது வெகு சமீபமாகத்தான். கடந்த முறை மதுரை சென்றிருந்தபோதுதான் இது நிகழ்ந்தது. இதை விவரிக்கும் முன் இன்னொரு சம்பவத்தை குறிப்பிடவேண்டும். அது கீழே வருகிறது. பொதுவாக  நாம் சிலரைப் பற்றிய முன் முடிவுகளை சுத்தமான பொய்யினால் தயாரித்து வைத்துக்கொண்டு  "ஒன்னப் பத்தி எனக்குத் தெரியாதா?" என்ற திமிருடன் இருப்போம். ஆனால் நம் வாழ்வின் இயல்பான நகர்வில் தினமும் நாம் கவனிக்க மறந்த அல்லது விரும்பாத உண்மைகள்  கடந்து செல்லும்போது அவை நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. 

      ஒரு முறை சாலையோர அங்காடி ஒன்றில் நின்றிருந்தேன். அங்கே பொருட்கள் வாங்கியபடி இருந்த ஒரு பள்ளிச் சிறுமி தன் பின்னே சற்று தூரத்தில் நின்றுகொண்டு பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு தெரு ஓரத்து அழுக்கான பெண் குழந்தையை திரும்பித் திரும்பிப் பார்ப்பதும் சற்று அவசரப்படுவதாகவும் இருக்க இது எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. தொடர்ந்து கவனித்தேன்.  சிறுமியின் முகத் தோற்றம் அந்தக் குழந்தை தன்னருகே வந்துவிடும் அந்த நிகழ்வை விரும்பாததைப் போலவே எனக்குத் தோன்றியது. "கொஞ்சம் மேட்டுக்குடி வகையறா போல" என்று எண்ணினேன். அந்தச் சிறுமி எதோ கான்வென்ட் ஒன்றில் படிக்கும் பெண் போலவே இருந்ததும் இதற்கு ஒரு காரணம். சிறிது நேரம் கழித்து  எல்லாவற்றையும் வாங்கிய பின் கடையைவிட்டு வெளியே நகர்ந்து சென்ற சமயத்தில்  அந்தச் சிறுமி செய்தது என் எண்ணங்கள், மதிப்பீடுகள் எல்லாவற்றையும் ஒரே நொடியில் தகர்த்துப் போட்டது.   சிறுமி தன் கையிலிருந்த ஒரு பார் சாக்லேட் ஒன்றை அந்தக் குழந்தையிடம்  கொடுத்துவிட்டு, "இந்தா வச்சுக்கோ" என்று தனது  கனிவான  குரலில், ஒரு தாய் போல சொல்லிவிட்டுச்   செல்ல, என் மனதில் ஆயிரம் ஆனந்த ஏவுகணைகள் பாய்ந்தன.  யதார்த்தத்தின் திடீர் சுகம். Compassion at its best.

       போன முறை மதுரை சென்றிருந்தபோது  இன்னொரு மனதைத்  தொடும் சம்பவம் என்னை உலுக்கியது. தினமும் மாலை மழை பெய்துகொண்டிருந்த ஒரு நாளில்  எதோ ஒரு காரணத்திற்காக பந்த் அறிவிக்கப்பட்டு பஸ்களின்  ஓட்டம் முடக்கப்பட்டிருந்தது.  மஞ்சள் ஆட்டோக்கள்தான் ஹாரிஸாண்டலாக சீறிப் பாயும் தீபாவளி ராக்கெட்டுக்கள்  போல பறந்துகொண்டிருந்தன. அதிலும் எப்படி உட்கார்ந்தாலும் உடலின் எதோ ஒரு பாகத்தில் வலியை உணரும்  உபத்திரவமான ஆனால் பத்து ரூபாய் கொடுத்து எங்கும் ஏறி இறங்கக்கூடிய வசதியான ஷேர் ஆட்டோக்கள் என்ற வஸ்துக்கள் அதிகம் தென்பட்டன. 

     மாலை நேரம். வீடு திரும்பவேண்டிய சம்பிரதாயம் என்னை கண்ணில் சிக்கும் வாகனங்களை நிறுத்தச் செய்தது. ஆனால் எந்த ஆட்டோவுக்கும் இரக்கமில்லை. கருணை மாதா துணை என்று பெரிய எழுத்துக்களில் பவனி வந்த ஒரு வாகனம் கூட என்னைக்கண்டு கருணையில்லாமல்   தெறித்து ஓடியது.  அப்போது   நான் நின்றுகொண்டிருந்த டீக்கடையருகே அசந்தர்ப்பமாக ஒரு ஷேர் ஆட்டோ வர, நான் அந்த ஓட்டுனரை "சவாரி உண்டா?" என்று கேட்டேன். அவன் சொல்லக்கூடிய பதிலை நானே மனதில் தயாரித்துவைத்திருந்தேன். ஆனால் நடந்தது வேறு.  "எங்க?" என்றான் அவன். என்னை விட சிறியவன்தான். சொன்னேன். "கொஞ்சம் இருங்க. ஒரு தம் போட்டுட்டு வந்துர்றேன்.. காலைல இருந்து ஒரே சவாரி" என்று அலுத்துக்கொண்டான்.  ஒரு டீ சொல்லிவிட்டு   அந்த கடையில் ஒரு நீள் வெண்  குழல் வாங்கி அந்தக் கடைக்காரரிடம் புகை, புகையாக பேச ஆரம்பித்தான். எனக்கும் விரைவாகச் செல்லவேண்டிய அவசரமோ, அவசியமோ இல்லை என்பதால் அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தேன். ஏன் பந்த் என்ற புள்ளியிலிருந்து   அவர்கள் அரசியல் கட்சிகளைச் சாடி சினிமா என்று தாவி, பிழைப்பு என்ற யதார்த்தத்துக்கு வர ... 

      ஒரு வயதானவர் தன் குடும்பம் சகிதமாக நிழற் குடையின் கீழ் வந்து நின்றார். நின்றவர்  புகையையும் தேநீரையும் ஒரு சேர விழுங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்து ," ஆரப்பாளயத்துக்கு இங்கேருந்து எவ்வளவு ஆகும்?" என்றார். "ஒரு 120 ரூபா." என்றார்  கடைக்காரர். "அதுவும் இன்னைக்கு பந்த்னால 150 ரூபா கூட கேப்பானுக" என்றான் அந்த ஆட்டோக்காரன். "சரிதான். இவனும் என்னை கை கழுவப் போகிறான்" என்று என் உள்ளுணர்வு என்னக்கொரு அவசர  குறுஞ்செய்தி அனுப்பியது. 

      "சும்மா தெரிஞ்சுக்கறதுக்காகத்தான் கேட்டேன். அதிகமா குடுத்துறக் கூடாதுல்ல?" என்றார் அந்தப் பெரியவர் மிக முன்னெச்சரிக்கையாக. அடுத்து நடந்தது நானே எதிர்பார்க்காதது. அந்த ஆட்டோக்காரன் அவரிடம் சொன்னான்:"அதோ அங்க எதுத்தாப்ல ஒரு ஆட்டோ நிக்குது பாருங்க அதுல ஏறிக்கங்க. எனக்கு வேற சவாரி இருக்கு." இதைச் சொல்லிவிட்டு அவன் அந்த வெண் குழலை  இறுதியாக ஒரு இழுப்பு இழுத்துவிட்டு பணம் கொடுத்துவிட்டு,... "போடா முட்டாப்பயலே" என்ற கடைக்காரரின் குரல் அவனை சற்றும்  பாதிக்கவில்லை.  என்னைப் பார்த்து ,"வாங்க போலாம்." என்றான் எதோ திருமண விருந்துக்கு செல்லும் நண்பனைப் போல. 

       எனக்குத்  திகைப்பாக இருந்தது. "நீயே போகவேண்டியதுதானே? 150 ரூபாய வேணாம்ன்னு போறியே?" என்று அந்த கடைக்காரர் அவனைத் திட்டினாரா இல்லை வியந்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன். அவனிடம் கறாராக சொன்னேன்:"பத்து ரூபாதான்." அவன் என்னைப் பார்த்து, "ஆமா.பத்து ரூபாதான்" என்று எதிரொலித்தான்.  வண்டி கிளம்பியது.

        மற்ற ஷேர் ஆட்டோக்கள் போலில்லாமல் இது பிய்ந்து போகாத குஷன் சீட்டுகள், பிடிக்கும் கையை என்னைத் தொடாதே என்று கிழிக்காத இரும்பு கம்பிகள் என வேறு தரத்தில் இருந்தது. அவன் டேப் போன்ற எதோ ஒன்றில் ஒரு பட்டனைத் தட்ட, "நீ காற்று நான் மரம் நீ என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்" என்று ஹரிஹரன் அந்தச் சூழலுக்குப்   பொருத்தமில்லாமல் மனதுருகினார். நல்ல கவிதையான கானம்தான். சிறப்பான மெல்லிசை. ஆனால் அதை ரசிக்க முடியாத குலுங்கல்கள். 

        அடுத்து வந்த இரண்டு நிறுத்தங்களில் அவன் வண்டியை நிறுத்திவிட்டு அது போகுமிடத்தைச்  சொல்லி, இன்னும் சில ஆட்களை அழைத்தான். யாரும் ஏறவில்லை. அவன் செயல் எனக்கு  ஆச்சர்யம் அளித்தது. கடைசியில் அந்த ஆட்டோவில் என்னைத்தவிர வேறு எந்த நபரும் பயணம் செய்யவில்லை. எனக்குள் அந்தக் கேள்வி குடைந்தது.  அவனைக் கேட்டேன்: 
 "எதுக்கு அந்த ஆரப்பாளயம் சவாரிய வேணாம்னு சொன்னீங்க? 150 ரூபாய விட்டுட்டு வெறும் பத்து ரூபாய்க்கு என் இப்படி?"

     என் பக்கம் திரும்பாமலே வண்டியை ஒட்டிக்கொண்டே அவன் பேசினான்: "ஷேர் ஆட்டோ வந்ததுக்கப்பறம் எல்லாருமே எங்க வண்டியிலதான் ஏற்றாங்க. சாதாரண ஆட்டோல யாரும் போறதில்ல. இன்னைக்கு பாருங்க. பந்த். இன்னக்கும் எங்க ஆட்டோதான் ஓடுது. பாத்தீங்கல்ல எனக்கே சவாரி கிடைக்கல.  இன்னக்கு ஒரு நாளாவது மத்த ஆட்டோகாரங்க ஏதாவது சம்பாதிச்சுக்கட்டுமே. இன்னக்கு நாள் பூரா ஓடி பத்து பத்து ரூபாயா சம்பாரிச்சு அதுக்கு மேலயும் 150 ரூபாய்க்கு நான் ஆசப்பட்டா அது சரியா?" எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆச்சர்யம் மின்சாரம் போலத் தாக்கியது. பொதுவாக ஆட்டோக்காரர்களின் அட்டூழியங்கள் என்றே போதிக்கப்பட்டு வந்த நடைமுறை உலகில் அவன் சொன்னதும்  செய்ததும்  மிகக் கனமான போற்றுதலுக்குரியவை. இதையே சினிமாவில் நமது கதாநாயகர்கள் ஏகப்பட்ட ஆயத்தங்களுகுப் பிறகு எந்தவித மனித நேயமுமின்றி அந்த வாரத்தைகளின் பின்னாலிருக்கும் கைத்தட்டல்களை கணக்கிட்டு வரவிருக்கும் தங்களின் வணிக வெற்றியின் போதையில் சொல்லும்போது அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பை எண்ணிப்பார்த்தேன். 

    "வெரி குட்." என்றேன். அவனை மேலும்  பாராட்ட நான் வார்த்தைகளை சேகரிக்கும் முன்  அவன் சொன்னான்;  "அவங்களும்தான் பொழச்சுக்கட்டுமே சார்."

Compassion at its best. Life is made of small things, they say. No, not just small things but small good things.

    என் இடம் வந்ததும் இறங்கும்போது மேகம் சூழ்ந்த வானம் என் கண்ணில் பட்டது. அந்த பயணத்திற்கான பத்து ரூபாயை அவனிடம் தரும்பொழுது சொன்னேன்: "உங்களைபோல ஆளுங்களாலதான் இன்னும்  மழை  பெய்யுது."  மிக சம்பிரதாயமான வார்த்தைகள்தான். ஆனால் அதுதான் அப்போதைக்கு மிகவும் அர்த்தமுள்ளதாகத் தெரிந்தது எனக்கு. 



          
அடுத்து: இசை விரும்பிகள் XXV - உடைந்த ஒப்பனைகள்.

31 comments:

  1. இம்மாதிரியான ஆச்சரிய மனிதர்கள் எப்போதாவது நமக்குக் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அமுதவன் சார்,

      உண்மைதான். ஆனால் இந்த ஆச்சர்ய மனிதர்கள் அடிக்கடி தென்பட்டால் தேவலை.

      Delete
  2. நூற்றில் ஒன்று என்று சொல்லலாமா??? பத்தில் ஒன்று என்று சொல்லலமா???

    ReplyDelete
    Replies
    1. வாங்க வலிப்போக்கன்,

      நூற்றில் ஒன்று என்று சொல்லலாம். ஆனால் பத்தில் ஒன்று என்று நம்புவோம்.

      Delete
  3. இது போன்ற உண்மை மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
    வாழ்த்துவோம் அவர்களை

    ReplyDelete
    Replies
    1. வாங்க கரத்தை ஜெயகுமார்,

      கருத்துக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

      Delete
  4. காரிகன்

    சில நேரங்களில் சாதாரண மனிதர்கள் பெரிய செய்தியை நமக்கு தந்துவிட்டுப் போவார்கள் . வாழ்க்கை கடைசிவரை நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும் . நானும் இது போன்ற மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சால்ஸ்,

      முரண்படாத கருத்துக்கு நன்றி. சாதாரண மனிதர்கள்தான் இன்னும் எதிக்ஸ் என்னும் நெறி கோட்பாடு போன்ற சங்கதிகளில் உண்மையாக இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

      Delete
    2. இளையராஜா இசைக்கு ஒரு குறை சொல்லப்படும்போதுதான் முரண்படுவேன் . எப்போதும் என்னை அதே கண்ணோட்டத்தோடு பார்க்காதீர்கள் .

      Delete
  5. பல உண்மையான மனிதர்களும் இருக்கிறார்கள்... நினைத்தாலே கண்ணீர் வரவழைக்கும் மனிதர்களும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டி டி,

      உண்மையான மனிதர்கள் தங்களைப் பற்றிய விளம்பரம் செய்துகொள்வதில்லை. எனவே அவர்களின் இருப்பு பகல் நட்சத்திரங்கள் போல இருக்கின்றன.

      Delete
  6. மன்னிக்கவும்.
    சற்று மாற்றிச் சிந்தித்துப் பார்த்தால் அந்த ஆட்டோக்காரரின் இன்னொரு முகம் தெரிந்திருக்கும். இதுதான் மனிதர்களின் பலவீனம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சேகர்,

      நீங்கள் சொன்னபடி யோசித்துப் பார்த்தேன். உங்கள் கோணம் எனக்குப் புரியவில்லை. சற்று விளக்க முடியுமா?

      Delete
    2. ஒருவரின் பண்பை விளக்கும் போது அவரின் செயலைப் பாராட்டி பின்னூட்டம் இட்ட சிலருக்குச் சங்கடம் ஏற்படலாம் அதனால் வெளிப்படையாக வேண்டாம் என நினைக்கிறேன்.

      Delete
  7. வணக்கம்
    இந்த மாய உலகில் எத்தனை வகையான மனிர்கள் உள்ளார்கள் ஆனால் இப்படியான நல்ல உள்ளங்கள் எப்போது வழட்டும்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன்,

      கருத்துக்கு நன்றி. அவர்களை அவ்வவ்போது நினைத்தாலே போதும். பகிர்ந்து கொள்வது அடுத்த கட்டம். வாழ்த்துவது அதன் பின் வருகிறது.

      Delete
  8. தன்னைப் போல் பிறரை நேசி - இவ்வரிகளுக்கு முன்னுதாரணமாக தென்படுகிறார் இந்த ஆட்டக்காரர் . கலியுகத்திலும் ஓர் கருணையுள்ளம் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க அருள் ஜீவா,

      கருத்துக்கு நன்றி. அந்த ஆட்டோக்காரர் ஒன்றும் பெரிய ஞானி எல்லாம் இல்லை. அன்றைக்கு அவர் நடந்துகொண்ட விதம் என் மனதைத் தொட்டது. இவரே அடுத்த நாள் வேறு மாதிரி முகம் மாறலாம். யார் கண்டது? கலியுகம் போன்ற பழமைவாதிகளின் வார்த்தைகளை நான் நம்புவதில்லை. இது பற்றி பேசினால் நீங்கள் இன்னும் பத்து பதினைந்து பின்னூட்டம் போட வேண்டியிருக்கும்.

      Delete
  9. அன்பு காரிகன்,
    ஒரு நேர்மையான ஆட்டோ ஓட்டுனரை சந்திக்கும் பாக்கியத்தை இறைவன் உங்களுக்கு தந்தமைக்கு உங்கள் பூர்வ புண்ணியமே காரணம். மனிதர்கள்
    தாங்கள் அணிந்திருக்கும் முகமூடியை சில கண நேரம் நழுவவிடும் இது போன்ற தருணங்களில் அவர்களுக்குள் மறைந்துள்ள இறை நிலை வெளிப்படும் .
    ஆனால் ஏமாளி, இளித்தவாயன் போன்ற (அவப்பெயர் ?) பட்டம் கிடைத்துவிடக்கூடாதே என்ற பயத்திலேயே அவசர அவசரமாக சொரூபத்தினை மறைத்துக்கொள்கிறார்கள்.
    அன்புடன் ரவி.

    ReplyDelete
  10. எதிர்பாராதவர்கள் அளித்த அதிர்வு இன்னும் அடங்க வில்லை..
    நானும் ஒரு ஆட்டோ ஒட்டுனரைச் சந்தித்தேன். மாட்டுத் தாவணியில் ரஜினி படம் முகப்பு கண்ணாடியில் ஓட்டப் பட்டிருக்க சீண்டினேன் ... அண்ணே இது ஆரு ? சாரி தெரியலையா ரஜனி சார்.
    இப்படி எசகுபிசகாக தொடர்ந்த உரையாடல் ஒரு அதிர்ச்சி திருப்பத்தில் ... சார் எனக்கு ரெண்டும் பெண் பிள்ளைகள் அண்ணே குழந்தைகள் பேர்ல டெபாசிட் பண்ணறேன்னு சொல்லிருக்கார் ...
    எனக்கு தலை சுற்றியது உண்மையா பொய்யா?
    மேலும் பேசியதில் ரஜனி இப்படி செய்துவருவதாக தெரிவித்தார்.
    உண்மையாக இருந்தால் இது ஒரு பெரும் சேவைதானே..
    அப்புறம்
    ஏன் படிக்கல என்றதற்கு பள்ளிகூடம்னா பயம்னா என்றார் ...
    வாத்திப்பயகா அந்த அடி அடிச்சாங்கள என்றேன் ..
    இல்ல சார் நான் படித்த பள்ளிக்கூடம் ரயில் போன அதிர்ச்சியில் அப்படியே விழுந்துவிட்டது. கேள்விப்படலயா நீங்க என்றார்.
    சில வாரங்களில் ஒரு பத்திரிக்கையில் இந்த சம்பவம் குறித்து ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது.
    பயணங்களில் ஏற்படும் எதிர்பாராத உரையாடல்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை ...
    நன்றி காரிகன்..
    உங்கள் ஆட்டோக்காரர் நெகிழ வைத்துவிட்டார் ...
    அவருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் ஒரு போக்கே

    ReplyDelete
  11. வாருங்கள் ரவி,

    கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ஒரு சிறிய முரண். நான் இந்த பாவ புண்ணியம் பூர்வ ஜென்மம் போன்ற சங்கதிகளில் நம்பிக்கை கொண்டவன் கிடையாது. அதைத் தவிர மற்ற எல்லா உங்களின் கருத்துக்களோடு எனக்கு உடன்பாடே.

    ReplyDelete
  12. வாருங்கள் மது,

    நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் பின்னூட்டம் மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து வரவும்.

    நானும் சில ரஜினி நண்பர்கள் மூலம் நீங்கள் பதிவிட்ட அந்த ஆட்டோக்காரர் கூறிய கருத்தை அறிந்திருக்கிறேன். ரஜினி இதுபோன்று வெளியே தெரியாமல் சில உதவிகள் செய்வதாக அவர்கள் என்னிடம் சொன்னபோது நான் அதை நம்பவில்லை. எதுவாக இருப்பினும் நல்லது நடந்தால் நல்லதே.

    எனக்கு எதற்கு போக்கே? நான் வெறுமனே பதிவு மட்டும்தான் செய்கிறேன். உண்மையான பாராட்டுதலுக்கு உரியவர்கள் எங்கோ முகமில்லாமல் இருக்கிறார்கள். அவர்களை வாழ்த்துவோம்.

    ReplyDelete
  13. நல்ல அனுபவ பகிர்வு

    ReplyDelete
  14. அன்பு
    காரிகன்
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
  15. சில நேரங்களில் இந்த உலகம் நம்ப முடியாத அளவுக்கு நல்ல மனிதர்களை அடையாளம் காட்டிவிட்டுச் செல்கிறது.நெகிழவைக்கும் சம்பவங்கள், நம்மையும் மதிப்பீடு செய்து கொள்ள தூண்டுபவை

    ReplyDelete
  16. நீங்கள் ஏன் தமிழ் மணத்தில் இணைப்பதில்லை? இணைப்புப் பட்டையையும் காணவில்லையே

    ReplyDelete
  17. காரிகன். தங்களின் இசை சார்ந்த அடுத்த பதிவு எப்போது ?

    ReplyDelete
  18. வாங்க வலையுகம் நண்பரே,

    வருகைக்கு நன்றி. தொடரவும்.

    ReplyDelete
  19. வாருங்கள் யாதவன் நம்பி அவர்களே,

    புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் அதை தெரிவிக்கிறேன் ஆனால் என்ன சற்று தாமதமாகிவிட்டது. மன்னிக்கவும்.

    ReplyDelete
  20. வாங்க மூங்கில் காற்றே,

    --சில நேரங்களில் இந்த உலகம் நம்ப முடியாத அளவுக்கு நல்ல மனிதர்களை அடையாளம் காட்டிவிட்டுச் செல்கிறது.-----

    சரியாக சொன்னீர்கள். அதுதான் எதிர்பாராதவர்கள் என்ற தலைப்பு.

    தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லை. டாட் காம் என்று எனது வலைப்பூவை மாற்றவேண்டும். மேலும் இந்த தமிழ்த் திரட்டிகள் பல இப்போது காணவில்லை.

    ReplyDelete
  21. வாங்க அருள் ஜீவா,

    அடுத்த பதிவு ஏறக்குறைய முடிந்துவிட்டது.

    ReplyDelete