Friday, 21 August 2015

இசை விரும்பிகள் - Exclusive 2: ​ நிசப்தமான நிஜங்கள்









       கடந்த  ஐந்து வருட காலத்தில் சென்னையில் பல மாற்றங்கள் சடுதியில் சத்தமில்லாமல் நிகழ்ந்து முடிந்து விட்டன.  சுரங்க ரயில், பறக்கும் ரயில், சுழல்  பாலங்கள், நவீனமான மரீனா கடற்கரை என மாற்றம் கண்ட அனைத்தையும் குறித்து எழுதமுடியாவிட்டாலும் என்னை பாதித்தவைகளை (குறிப்பாக இப்போது இல்லாமல் போய்விட்ட இசையகங்கள்) பற்றியே சொல்கிறேன்.

    ஸ்பென்சர்ஸ் பிளாஸா ஏறக்குறைய  நடைபாதைக் கடைகளின் அடுக்குமாடி  போல மாறிவிட்டது. அங்கிருந்த மியுசிக் வேர்ல்ட் இப்போது காணவில்லை. எக்ஸ்பிரஸ் அவென்யூ, பீனிக்ஸ் மால் என்று துடிக்கும் இளமைகளின் சங்கமம் வேறு இடம் பெயர்ந்துவிட்டது. நுங்கம்பாக்கத்தில் இயங்கி வந்த லேண்ட்மார்க் எனக்குத் தெரியாத ஒரு "நல்ல சுபயோக" தினத்தில் இழுத்து மூடப்பட்டுவிட்டது. அண்ணா நகரின் இருந்த இப்போது பெயர் மறந்துவிட்ட மற்றொரு சிடி கடையும், ஷாப்பர்ஸ் ஸ்டாப்பில் இருந்த இன்னொரு கடையும், சைட் எபக்ட்ஸ், ஆடியோ போர்ட், ஆழ்வார்ப்பேட்டையில் நான் அடிக்கடி செல்லும் ஒரு சிடி கடையும்   வெயில் கண்ட பனித்துளிகள்  போல மரணித்து விட்டன. சில வருடங்கள் வரை ஒளிர்ந்து கொண்டிருந்த சிடி விற்பனையகங்களின் நியான் விளக்குகள் நிரந்தரமாக அணைந்து விட்டன. 5 ரூபாய் காபி  10 ரூபாய்க்கு விற்கப்படும் இன்றைய  சூழலில்  இது பலருக்கு பெரிய விஷயமில்லைதான்.  ஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் அலைந்து திரிந்து ஆடியோ சிடிக்களாக வாங்கியபடி இருந்த எனக்கு இது மிகப் பெரிய இழப்பு.

   இரண்டாயிரத்தின் துவக்கத்தில்  கம்ப்யூட்டர் என் வீட்டுக்குள்  வந்தது,  அது இசையை நான் அணுகிய விதத்தை  முற்றிலும் மாற்றிப் போட்டது. கணினி என்ற அந்த விஞ்ஞான வியப்பு  வந்த  இரண்டு வருடங்களுப் பிறகு எனக்குத் தேவையான அனைத்து ஆங்கில இசைத் தொகுப்புக்களையும்  டாரென்டாக பதிவிறக்கம் செய்து அதை எம்பி 3 யாக எனது ஹார்ட் டிஸ்கில் பதிவு செய்துகொண்டேன்.  ஏறக்குறைய 5000க்கும் மேலான இசைத் தொகுப்புக்கள். எனக்குத் தேவையான அனைத்து ஆங்கில இசைத் தொகுப்புக்களும் என் வசம் வந்துவிட்ட நிம்மதி, களிப்பு,  திருப்தி  எனக்கு உண்டு.  இருந்தாலும் வசீகரம் குறைந்த அழகான ஓவியம் போல எங்கோ எதோ ஒன்று இல்லாத உணர்வு இருக்கிறது.

    எம்பி 3 என்று  ஒரு ஜிபி கொண்ட நினைவகத்தகட்டில்  ஐநூறு  பாடல்களை வெட்டி ,உடைத்து,  வதைத்து சிறகொடித்து மடக்கி குறுக்கி வைத்திருக்கும் அந்த புதிய இசை வடிவம் என் மனதில் நீண்ட நாட்கள் தங்கவில்லை. அற்புதமான பல பாடல்கள் தட்டையாக ஒலிக்கும்  இந்த திடீர் தொழில் நுட்பம் இசையை சிதைத்து  விடுகிறது. ஆனால் இந்த எண்ணம் எனக்கு வரும் முன் பெரும்பாலானவர்களைப் போலவேதான் நானும் இருந்தேன். விரல் நுனியில் மூன்று நிமிடத்தில் எனக்குத் தேவையான ஒரு பாடலை சட்டென களவாடிக் கொள்ளும் அறிவியல் நேர்த்தியை அதிசயித்தபடியே.

     ஒரு காலத்தில் உயர்ந்த வானத்தில் மிளிரும்  நட்சத்திரங்கள் போன்றிருந்த பல கனவுகள்  இன்றைக்கு நம் கை விரல்களின் நுனியில் மெய்ப்படக் காத்திருப்பது விஞ்ஞான வளர்ச்சியின் அசுர சாதனை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை  இசையைக் கேட்க வேண்டுமானால் ஒருவருக்கு  ஓப்ரா  ஷோ (Opera) ஒன்றுதான் ஒரே வழி. குரல்களை பதிவு செய்ய  முடியும் என்கிற சிந்தனையும் அதன் செயல் வடிவமும்   போனோக்ராபி (phonography ) வந்த பிறகே சாத்தியமாயின. தாமஸ் ஆல்வா எடிசனின் இந்த அற்புத கண்டுபிடிப்பு ஒரு ஆச்சர்யமான  மகா மகத்துவம். ஒருவரது இசை என்  ஆன்மாவுக்குள் சென்று எதோ செய்கிறது என்று இன்று பதிவுகளில் எழுதும் பலர் முதலில் நன்றி சொல்லகூடிய ஒரே நபர் தாமஸ் ஆல்வா  எடிசன்தான். ( தனிப்பட்ட விதத்தில் எனக்கு எடிசனை விட நிகோலஸ் டெஸ்லாவை அதிகம் பிடிக்கும்.) இவ்வாறாக கண்டுபிடிக்கப்பட்ட "இசையை பதிவு செய்து பிறகு கேட்கும் விஞ்ஞான வளர்ச்சி" பெற்ற பரிமாணங்கள் மனித சிந்தனை பெற்ற இறக்கைகள் எனலாம். வந்த புதிதில் மக்கள் அலையலையாக படையெடுத்து, பணம் கொடுத்து வரிசையில் நின்று கேட்டு ரசித்த  பதிவு செய்யப்பட்ட குரல்கள் பெரும்பாலும் தெளிவற்ற ஒரு மாதிரியான பிசிறடிக்கும் வகையையானவை. ஆனாலும் அந்த அதிசயம் மக்களை மெகா சைஸில்  கவர்ந்தது.

       முதலில் பதிவு செய்யப்பட்ட மனிதக் குரல்  Mary had a little lamb என்ற நர்சரி ரைம்ஸ். முதல் பாடல் என்று கூட சொல்லலாம். இது நிகழ்ந்த ஆண்டு 1877. இதை எடிசனே பாடினார். இன்றுவரை இது அமெரிக்காவில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு  வருகிறது. 2012இல் இதன் மற்றொரு நவீன வடிவம் வெளியிடப்பட்டது. துவக்கத்தில் இசைப் பதிவு என்பது துல்லியமற்றதாக இருந்தது.  பதிவு செய்யப்பட்ட குரல்கள் நாம் இன்று கேட்கும்படியான  தெள்ளத் தெளிவானவை அல்ல. பாடல்களுக்கு இடையே பயங்கர மழை பெய்யும் இரைச்சல் ஒரு கண்டிப்பான அம்சம்.

    கையால் லீவர் ஒன்றை சுழற்றினால் மேலே உள்ள அகன்ற ஸ்பீக்கரில் பாடல்கள் கேட்கும் படியான விஞ்ஞானம் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்  வந்தது. இந்த இசை முழுவதும் மோனோ எனப்படும் ஒரே  பக்கத்தில்  இசையை பதிவு செய்யும் பழைய யுத்தி.  1931ஆம் வருடத்திலேயே ஆலன் ப்ளம்லைன் என்பவரால்  ஸ்டீரியோ அப்போதைய ஹாலிவுட் படங்களில் அறிமுகம் செய்யப்பட்டாலும்  1958 ஆம் ஆண்டில்தான் முதல் ஸ்டீரியோ எல் பி ரெகார்ட் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. ஸ்டீரியோ இசையின் தரத்தை பன்மடங்கு உயர்த்தியது. அறுபதுகளில் மேற்குலகில் உண்டான இசைப் புரட்சி அந்த சமூகத்தின் வேர்களை தகர்த்தது. புதிய  சிந்தனைகளுக்கான நடைபாதையை இசை அமைத்துக்கொடுத்தது. இசையின் வீச்சு அதுவரை இல்லாத தூரங்களை அனாசயமாகக் கடந்து சென்றது.

      பெரிய அளவான கசெட் டேப் போன்ற ஸ்பூல், பிறகு எல் பி ரெகார்ட், கசெட் என உருமாறிய இசை எண்பதுகளின் இறுதியில் சி டிக்களாக டிஜிடல் அவதாரம் எடுத்தது. அப்போது அதை மிகத் தெளிவான இசை என்றார்கள். பத்து வருடத்தில் இசையின் அடர்த்தியை அங்கே இங்கே வெட்டி, அதை குட்டையாக மாற்றி இதுதான் புதிய இசை வடிவம் இதன் பெயர் எம் பி த்ரீ என்றார்கள்.  இசை இறந்தது.

       தீப்பெட்டி போன்ற வஸ்து ஒன்று  இன்றைக்கு வயர் மூலம் தொடர்ச்சியாக நூறு பாடல்களை நம் காதுகளுக்குள் அனுப்பிக்கொண்டிருகிறது. பாடலின் துவக்கத்திலேயே பிடிக்காவிட்டால் அடுத்த பாடலுக்கு தாவி விடக்கூடிய சௌகரியம், பாடலை முழுமையாக கேட்காமலேயே முழுவதும் கேட்டுவிட்ட திருப்தி, இசையைத் தேடிச் சென்ற காலங்கள் கரைந்துபோய் பாக்கெட்டுகளில் எடுத்துச் செல்லும் எளிமை  போன்ற வசதிகள் இந்த எம் பி த்ரீயின் கொடைகள்.  சுருக்கமாக சொல்வதென்றால் விரைவு இசை.

       ஆணும் பெண்ணுமாக இருவர் ஒரே ஹெட்போனை  ஒன்றை அவனும் மற்றொன்றை அவளும் காதில் பொருத்திக்கொண்டு பாடல்களை ரசித்துக் கேட்பது போல தற்போது சில விளம்பரங்களில் காண நேரும்போது, எனக்கு எழும் இயல்பான கேள்வி: "இவர்கள் ரசிப்பது இசையைத்தானா?"  டி வி விளம்பரம் என்றல்லாது பயணம் செய்யும் ரயில்களில், மாநகர பேருந்துகளில், நடைபாதைகளில் என இளமை ததும்பும் பல இடங்களில் இந்த இசைச் சேட்டை ஒரு இலவச காட்சி. இந்த மாதிரியான சமப் பகிர்வு ரசிப்பில்  எனக்கு இச்சை கிடையாது. ஆதரவும் இல்லை. ஒரே சமயத்தில் இரண்டு ஆசாமிகள் ஒரே பாடலை  சமமாகப் பிரித்துக் கொண்டு ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம்போல பாதி இசையை  கேட்பதை நான் ஒரு பொருட்டாகவே  எடுத்துக்கொள்வதில்லை.  இதெல்லாம் பதின்ம வயதின் உடல் நெருக்கத்திற்கான ஒரு புதிய தேடல்.  இது மட்டுமல்லாது இன்றைய சூழலில் பல இளைஞர்களும் நாகரிக நங்கைகளும் எப்போதும் ஒரு வெள்ளை அல்லது கருப்பு நிற வயரை காதில் சொருகிக்கொண்டு தங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டபடியே சாலையோரங்களில், சாலைக்கு குறுக்கே, ரயிலடிகளில், மழை நேரத்து மங்கலான மரத்தடிகளில், வீட்டு மொட்டை மாடிகளில் ஒரு விழா போல உலா வருவது இனிமேல் இப்படித்தான் நாம் இசையை மதிக்கப் போகிறோம் என்ற அபாய சங்கு.

    "ஏன்? நீ அப்படி கேட்டதில்லையா?" என்று என்னை வினவினால் எனது பதில் : "ஆம். உண்டு." ஒருமுறை சென்னையிலிருந்து மதுரை வரும் வரை இரவு நேர பேருந்து பயணத்தின்போது ஒரு சிறிய பேட்டரி அளவு  எம் பி த்ரீ ப்ளேயரில் ஏறக்குறைய 180 பாடல்களை விடாது கேட்டுக்கொண்டே வந்தேன். அப்போதுதான் முதல் முறையாக Outlaws என்ற எழுபதுகளைச் சேர்ந்த அமெரிக்க  கண்ட்ரி  ராக் இசைக் குழுவினரின் Ghost Riders In The Sky என்ற அபாரத்தைக் கேட்டேன். அப்போது திருச்சி பாலக்கரையில் பஸ் சென்றுகொண்டிருந்தது என் நினைவிலிருக்கிறது. 180 பாடல்களுக்கு மேலேயே கேட்டிருப்பேன். அதற்குள் மதுரை மாட்டுத்தாவணிக்குள் பஸ் நுழைந்து விட்டது. காதிலிருந்து அந்த பொத்தான் ஹெட்போனை நீக்கியபோது காதுக்குள்  மழை பெய்தது.

       ஐ பாட் போன்ற நவீனங்கள் ஒரு பாடலின் உள் இழைகளை அசாத்திய விதத்தில் விரித்து இசைக்குள் நாம் நடந்து செல்லும் போதையான கனவுகளை உயிர்ப்பிக்கின்றன.  காதுக்குள் இசை என்ற 1979 ஆம் ஆண்டின் சோனி வாக்மன் அதிசயத்தை ஆப்பிள் ஐ பாட் அட்லாண்டிஸ்  விண்கலம் விண்ணில் செங்குத்தாக பாய்வது போன்று ஒரே நொடியில் வேறு பரிமானத்திற்கு மாற்றிவிட்டது.  நீங்கள் ஒரு உண்மையான இசை விரும்பியாக இருக்கும் பட்சத்தில் வாழ்கையில் ஒரு முறையேனும் ஐ பாட் சாதனத்தில் உங்களுக்குப் பிடித்த பாடலை கேளுங்கள்.  எம் பி த்ரீ ப்ளேயர் போன்ற சக்கைகளுக்கு மத்தியில் ஐ பாட் ஒரு கனிந்த பழம். இசை இத்தனை அழகானதா என்ற பெரு வியப்புக்கான சாதனம்.

         இன்றைய தலைமுறையினர்  இவ்வாறான ஐ பாட் இசையையே பெரிதும் விரும்புகிறார்கள் என்கிறது ஒரு மேற்கத்திய ஆராய்ச்சி முடிவு. அவர்களிடம்  எழுபதுகளின் எல் பி ரெகார்ட் எனப்படும் இசைத்தட்டுக்கள், எண்பதுகளின் ஆடியோ கசெட்டுகள், தொண்ணூறுகளின் சிடிக்கள், இரண்டாயிரத்தின் ஐ பாட் வகை எம் பி த்ரீ இசை என விதவிதமாக போட்டுக் காண்பித்ததில் பெரும்பான்மையானவர்கள் '"இதான் எனக்குத் தேவை." என்று குறிப்பிட்டது ஐ பாட் இசையே. அவர்கள் பிறந்ததிலிருந்து அறிமுகமான இந்த தட்டை இசை (flat music) அவர்களுக்குப் பிடித்துப் போவதில் பெரிய ஆச்சர்யங்கள் எதுவுமில்லை.




      ஆனால் இவ்வாறு காதுக்குள் இசை கேட்பவர்களுக்கு  விரைவில் காதுக்குள் இரைச்சல் கேட்கக்கூடிய  ஆபத்து நிகழக்  காத்திருக்கிறது. ஒரு முறை காதுகள் பாதிக்கப்பட்டால் அதன் பின் உங்களால் மீண்டும் கேட்கும் சக்தியை திரும்பப் பெறவே முடியாது. இரண்டு வருடங்களுக்கு முன் என் காதுக்குள் சங்கு இல்லாமலே கடலோசை  கேட்டது. ஒரு விதமான உயர் ஒலி ஓசை. இதை டினைடஸ் (Tinnitus) என்பார்கள். சற்று அலட்சியமாக இருந்துவிட்டால், அதன் பின் நீங்கள் மற்றவர்களின்  உதட்டசைவை கவனித்துத்தான்    அவர்கள்  சொல்வதை அனுமானிக்க வேண்டும்.  அதுவரை நான்கு நிமிட நடையாக   தெரு திருப்பத்திலுள்ள மெஸ் ஒன்றுக்கு செல்ல நேரிட்டாலும் நான் ஐ பாட் கேட்டபடியேதான் நடைபயிலுவேன். ஒரு முறை அந்தக்  கடைக்காரர் என் மீது கொண்ட அக்கறையினால், "கொஞ்சம் அத எடுத்துடுங்க சார். காது போயிடும். என் தம்பிக்கு அப்பிடித்தான் ஆச்சு. அவனும் உங்கள மாறியே எப்பவும் காதுல வயற சொருகிகிட்டு பாட்டு கேட்டுகிட்டு இருப்பான்." என்று சொல்ல, எனக்கு காய்ந்துகொண்டிருந்த  அந்த அடுப்பின் தீக்கங்குகளை தோசைக்கு நடுவே மாசாலா போல வைத்து முழுங்கியது போலிருந்தது. இது ஒன்றும் புதிய செய்தியல்ல எனக்கு. அந்தக் கடைக்காரரின் அறிவுரைக்கு முன்னரே எனக்கு இது தெரிந்ததுதான். படித்திருக்கிறேன். ஆனால் இந்த அபாயத்தை ஒரு விதத்தில் நெருக்கமாக உணர்ந்த ஒரு அனுபவஸ்தர்  சொல்லும்போது உண்டாகும் அச்சம் நாம் அந்த கருத்துக்கு செய்யும் மரியாதை என்று நினைக்கிறேன்.

        டினைடஸ் என்ற அபாயத்தின் முதல் படியிலேயே நான் சற்று விழித்துக் கொண்டு, செவிக்குள் ஒலிக்கும்  இசைக்கு செவிசாய்ப்பதை அத்துடன் நிறுத்திக்கொண்டேன்.  இதைப் படிப்பவர்களில் யாரேனும் இந்த செவிக்குள் கேட்கும் இசைக்கு அடிமையாக இருந்தால் என் அறிவுரை இதுதான். நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் இசையை ரசிக்கவேண்டும் என்றால் இதைச் செய்யாதீர்கள். நாள்தோறும்  தொடர்ச்சியாக  இரண்டு மணிநேரம் உச்சஸ்தாயில் காதுக்குள் பாடல்களைக் கேட்டால் ஐந்து வருடத்திற்குள் ஐந்தடி தூரத்தில் வரும் கண்டைனர் லாரியின் அலறும்  ஹார்ன் கூட உங்களுக்குக் கேட்காது. அதிர்ஷ்டம் இருந்தால் அந்த லாரி ஓட்டுனர் உங்களைப் பார்த்து , "செவிட்டுக்...." என்று ஆரம்பித்து தமிழ் அகராதியில் தேடினாலும் கிடைக்காத "புனித" வார்த்தைகள் கொண்டு உங்களை அர்ச்சிப்பதோடு  நீங்கள் பிழைக்கலாம்.

      இசையின் உண்மையான தோற்றத்தை நீங்கள் அனுபவிக்க விரும்பினால் அதை கண்டிப்பாக  இந்த எம் பி த்ரீ சமாச்சாரங்களில் தேடாதீர்கள்.  ஏனென்றால் அது அங்கே இல்லவேயில்லை. எத்தனைதான்  மயக்கம் கொடுத்தாலும் ஐ பாட் இசையில் கூட இசையின் அசாதாரண அனுபவம் அதன் உண்மையான தோற்றத்தில் நமக்குக் கிடைக்காது. வேறு எங்கே என்கிறீர்களா?  இருக்கிறது. ஆடியோ சிடிக்கள் மற்றும் மேற்குலகில் இப்போது புத்துயிர்ப்பு பெற்றுள்ள எல்  பி ரெகார்ட் என்னும் இசைத் தட்டுக்களில் இன்னும்   இசையின் அந்த  மாயாஜாலம் மறைந்திருக்கிறது.

     Denon, Yamaha, Marantz, Onkyo  போன்ற ஒரு தரமான ஆடியோ ப்ளேயரில் (குறிப்பாக சிங்கிள் சிடி ப்ளேயர். நோ டிவிடி, எம் பி த்ரீ, எட்செட்ரா) அதே தரத்திலுள்ள ஆம்ப்ளிபையரில்  Polk audio, Denon, Klipsch, Pioneer போன்றதொரு டவர்   ஸ்பீக்கர்களில் (floor standing speakers) ஒரு  கம்பெனி ஆடியோ சிடியை ஓடவிட்டுக் கேளுங்கள். இசை துளித் துளியாக உங்கள் மீது  தெறிக்கும். அதன் பிறகு எம் பி த்ரீயை இசை என்றே சொல்ல மாட்டீர்கள்.



 ஒரு லட்சம் அல்லது அதற்கும் மேலே பணம் செலவழிக்க நீங்கள் தயார் என்றால் இத்தகைய சாதனங்களை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வரலாம். விரல் நுனியில் எனக்குத் தேவையான பாடல்கள் காத்திருக்கும் போது இவ்வளவு பணம் கொடுத்து இசையை ரசிக்க நானென்ன முட்டாளா என்ற கேள்வி உங்களுக்கு ஏற்பட்டால் --கெடுதி இல்லை. இருக்கவே இருக்கிறது. கம்ப்யூட்டர் ஸ்பீக்கர்கள், யூ டியூப்.

     பொதுவாக என் வீட்டிற்கு வரும் நண்பர்கள் நான் வைத்திருக்கும் சிடிக்களைக் கண்டு என்னிடம் வழக்கமாக கேட்கும் கேள்வி "இதெல்லாம் என்ன சினிமா படங்களா?" கேட்கும் போதே பென் டிரைவ் வந்துருச்சு இப்ப போய் டிவிடியை வாங்கிட்டு இருக்கான் பாரு இந்த முட்டாள் என்ற தொனியை நான் புரிந்துகொள்வேன்.

  நான் சொல்லும் பதில் அவர்களை இன்னும் மிரள வைக்கும். "இதெல்லாம் டிவிடி இல்லை.ஆடியோ சிடி. வெறும் பாட்டு மட்டும்தான். படம் கிடையாது."

  "பாட்டா?" என்று அவர்கள் அதிர்ந்துபோய் என்னைப் பார்ப்பதில் நிறைய செய்திகள் உண்டு.

   "அதான் கம்ப்யூட்டரில் எம் பி த்ரீயா  எல்லாமே கிடைக்குதே? எதுக்கு சிடி வாங்கிகிட்டு?"

     "அப்படியா? எனக்குத் தெரியாதே."

எல்லோரிடமும் எதற்காக ஒரே பதிலை சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்?
     

     




அடுத்து; கொஞ்சம் நிலவு கொஞ்சம் புனைவு. 




Sunday, 9 August 2015

இசை விரும்பிகள் XXVII - வசந்தங்கள் வடிந்தன.


( நான் மிக மதிக்கும், திகைக்கும் இறவா இசையூற்று எம் எஸ் விஸ்வநாதனின் மரணத்திற்குப் பிறகு எழுதும் முதல் பதிவு இது.  ஆனால் இது அவரைப் பற்றியதல்ல. அது இனிமேல்தான்  வருகிறது. )




                      வசந்தங்கள் வடிந்தன.

        மன ஆழத்தில் நான் இசை குறித்த விவாதங்களை அதீதமாக விரும்புவதுபோலவே தோன்றுகிறது. எங்கேயாவது இசை பற்றிய பேச்சு அடிபட்டால் அதுவும் என் காதில் விழ நேரிட்டால், அங்கு நான் ஒரு வரிக் கருத்தையாவது உதிர்க்காமல் கடந்து செல்ல மாட்டேன். பலமுறை வார்த்தைகளில் உஷ்ணம் ஏறி, குரல்கள் உச்சம் தொட்டு, இறுதியில்,"உனக்குத் தெரிஞ்சது அவ்ளோதான்" என்று நான் நகர்ந்து போனதுண்டு. போன மாதம் ஒரு மதிய வேளையில் என் பணித் தோழர் ஒருவருடன் ஆன் லைன் ஷேர் மார்க்கெட் பற்றிய விபரங்கள் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு அதில் அதீத ஈடுபாடு.  எனக்கு பயங்கர  பயம்(!). ஆன் லைன் மார்கெட்டில் எவ்வாறு பங்குகள் எதிர்பாராத வினாடிகளில் எகிறும் அல்லது  கவிழும் என்று எனக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். கேட்டுக்கொண்டிருந்த எனக்கு  பாராசூட்டை கட்டிக்கொண்டு கீழே குதிப்பது போன்ற  உணர்வு வந்தது. (ஒரே ஒரு முறை விமானத்தில் பயணம் செய்திருக்கிறேன். அதுவும் முக்கால் மணிநேர பயணம்தான். இதில் இந்த பாராசூட் எல்லாம் கொஞ்சம் அதிகம்தான்.) அவர் சொல்லச் சொல்ல எனக்கு  இந்த விபரீத விளையாட்டு  எந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை. பேசிக்கொண்டிருந்த நண்பர் திடீரென  "எனக்கு பத்தாயிரம் வரை போச்சு." என்று வருத்தப்பட்டார். நான் அதைப் பற்றி கேள்விகள் வீச, அவர்  "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை" என்று தமிழ் நெஞ்சங்களில் உறைபனி போல  படர்ந்திருக்கும் என்றுமே மரணிக்காத  தத்துவப் பாடலை  ஒரு எதிர்பாராத நொடியில்  பாடினார்.  பேச்சு திசை மாறியது.

    "ஒரு பாடலை சிறப்பு செய்வது இசையா? கவிதையா?" என்று கேட்டேன்.

   அவர் சற்றும் யோசிக்காமல், "இசைதான்." என்றார் எதையோ எழுதிக்கொண்டே. சொல்லப்போனால்  இத்தனை நேரமும் எழுதியபடியேதான்  என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.  "நல்லா மெட்டு போட்டாத்தானே எந்த கவிதையுமே நிற்கும்?" என்றார் தொடர்ந்து.

     "அப்படியானால் இப்போது நீங்கள் பாடிய பாட்டு இசையின் தூண்டுதலா அல்லது அந்தக் கவிதையின் பாதிப்பா?" என்றேன் நான். மாற்றம் நிகழ்ந்தது. பேனாவை மூடி வைத்துவிட்டு நேருக்கு நேர் நிகழ்ச்சிக்கு வந்தவர் போன்ற பாவனையுடன் என்னைப் பார்த்தார். கொஞ்சம் யோசித்தார்.  பிறகு, "எல்லாப் பாடல்களுக்கும் இசை என்று சொல்ல முடியாது." என்றார் கொஞ்சம் தாழ்ந்த குரலில்.  அப்படி வா வழிக்கு என்று நினைத்துக்கொண்டேன்.

     "ஒரு பாடலை அழகு செய்வது இசை. ஆனால் அதன் தரத்தை நிர்ணயம் செய்வது கவிதை என்பது என் எண்ணம்." என்றேன் நான். "சரிதானே?"

      இருபது வினாடிகள் மௌனத்தில் கழிந்தன. அதன் பின்,  "சரியே. பாடல்களின் தரம் என்றால் அது பாடல் வரிகள்தான். பாடல்கள் என்று பேசினாலே நாம் அதன் கவிதையைத்தானே குறிப்பிட்டுப் பேசுகிறோம்?" என்று சேம் சைட் கோல் அடித்தார். நான் மேற்கொண்டு  அந்த விவாதத்தை தொடரவில்லை. பின்னர் எங்கள் பேச்சு பாபநாசம், த்ருஷ்யம், மோகன்லால், கமலஹாசன் என்று மற்றொரு அரிதாரம் பூசிக்கொண்டது.

  நான் என் நண்பரிடம் கேட்ட கேள்விதான்  இந்தப் பதிவின் இலக்கு. கவிதையும் இசையும் ஒரு பாடலின் சுவாசம் போன்றவை. இதில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பது சிரமம். மேலும் அது ஒரு ஆரோக்கியமற்ற தேர்வு. ஒரு இசையமைப்பாளரே கவிஞரை அடையாளம் காட்டுகிறார் என்று சொல்லப்படுவதில் உண்மைகள் இருந்தாலும், பாடலை நமது நினைவுகளில் படியச் செய்து அதை மீண்டும் மீண்டும் மனதுக்குள்ளே ஒலிக்கச் செய்து, நம்மை அடிக்கடி பாடச் செய்யும்  மந்திரம் கொண்டது கவிதையே.   ஒரு விருந்தின் சுவை துவங்கும் இடம் அதன் மணம் என்று சொல்லப்படுவதுண்டு. ஒரு பாடலின் மெட்டுக்கு நாம் இதை ஒப்பிட்டாலாம். ஆனால் அந்த நறுமணமான மெட்டின் மீது சவாரி செய்யும் கவிதை வரிகள் அழகின்றி அபத்தமாக, ஆபாசமாக,  அமைந்து விட்டால் பாடலின் மொத்த சுவையும் ஒரே நொடியில் குலைந்து விடுகிறது. கம்பன் ஏமாந்தான் என்றாலே மனதுக்குள் அந்தப் பாடல் வரிவரியாக விரிவதை மறுக்கமுடியுமா? மயக்கமா கலக்கமா என்ற முதல் வரியே  எத்தனை ஆறுதலான மருந்தை மனதில் தடவுகிறது?

    இளையராஜா இசையமைத்த காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா (சின்ன மாப்பிள்ளை) என்ற காதல் பாடலையும் ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் (கொம்பேறி மூக்கன்) என்ற பாடலையும் தொடர்ச்சியாக கேட்க நேர்ந்தால் எவ்வாறு நல்ல கவிதை ஒரு பாடலின்  உருவத்தை செழுமைப்படுத்துகிறது என்பது புலப்படும். நல்ல மெட்டு மட்டும் போதும் என்ற அழிச்சாட்டியம் அழகான பாடலை கொடூரமாக கொலை செய்கிறது.  எப்படி ஒரு அழகான மெட்டு அதன் வரிகளால் தன் பொலிவை இழந்தது என்பதற்கு முத்து மணி மால உன்ன தொட்டுத் தொட்டுத் தாலாட்ட  பாடலைக்  குறிப்பிடலாம். அசரடிக்கும் அற்புதமான மெட்டு. நீரோடை போன்ற துல்லியமான  இசைக்  கோர்ப்பு. இருந்தும் வெகு சாதாரணமான கவிதை வரிகள் அந்தப் பாடலுக்கான மரியாதையை மறுக்கின்றன.

    தமிழ்த் திரையின் பொற்காலம் என்று ஒரு சில இளையராஜா அபிமானிகளால் தவறாக சித்தரிக்கப்படும் எண்பதுகள் பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து கூட்டணிக்கே ஒரு பொற்காலமாக இருந்தது. தமிழில் ஒரு மாற்று சினிமாவுக்கான புதிய தேடல்களும் அவசியங்களும் அதை சாத்தியப்படுத்தும் முயற்சிகளும் சில இயக்குனர்களுக்கு வசப்பட்ட எழுபதுகளின் இறுதி, எண்பதுகளில் தமிழ்த் திரை ஏறக்குறைய வெகு ஜன சினிமாவை வெட்டிவிட்டு இயல்பான கதைக் களங்களை கையில் எடுத்துக்கொண்டது. பாரதிராஜாவின் வருகையில் மகேந்திரன், ருத்ரையா, மட்டுமல்லாது பல முகமில்லாத இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தமிழ்த் திரைக்குள் ஊடுருவ முடிந்தது. இவர்கள் கொண்டுவந்த மாற்று சினிமா அதற்கு முன்னிருந்த நாடகத்தனமான தமிழ்த் திரையின் அவலத்தை கேலி செய்தது. எனவேதான் இந்த காலகட்டத்தை சிலர் தமிழ்த் திரையின் பொற்காலம் என்று முடிவு செய்கிறார்கள். இருக்கலாம். உண்மையில் இந்த இயல்பான சினிமாவின் ஆயுள் சடுதியில் முடிந்தும் விட்டது. ஐந்தே வருடங்கள்தான். அதன் பின் மீண்டும் பார்க்கச்  சகிக்காத சக்கைகள் புதிய தோரணங்கள் கட்டிக் கொண்டு ஆட்டம் போட்டன. இந்த- தமிழ்த் திரையின் பொற்காலம்- என்ற சொற்றொடர் தமிழ் சினிமாவுக்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அது தமிழ்த் திரையிசைக்குமான சான்றிதழ் என்பதைத்தான் ஏற்க முடியவில்லை.

   சற்று ஆழமான பார்வை கொண்டு நோக்கினால், ஒரு உண்மை காணக் கிடைக்கும்.  தமிழ்த் திரையிசை தொட்ட உச்சம் அறுபதுகளில் நிகழ்ந்தது. அது எம் எஸ் வி - டி கே ராமமூர்த்தி இரட்டையர்களின் காலத்தில் தமிழ்த் திரை கண்ட மகா அதிசய நிகழ்வு. இதன் பின் ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டதாக சொல்லப்படும் எண்பதுகளில் தென்பட்ட  இந்த அடுத்த உச்சம் சூரியன்  மறைந்த பிறகு வெளிச்சம் கொடுக்கும் மின்சார விளக்குகள் போன்றது. ஒரு போலி வெளிச்சம்.

    ஆனால் இந்த செயற்கை ஒளியில் ஒரு நிஜம் ஒளிந்திருக்கிறது.எம் எஸ் வி- கண்ணதாசன் என்ற இணைப்புக்குப் பிறகு தமிழிசையில் ஏற்பட்ட அடுத்த மகா ஆளுமை கொண்ட கூட்டணி இளையராஜா-வைரமுத்து என்பது அதிகம் மிகைப்படுத்தப்படாத உண்மை. எண்பதுகளை இவர்கள் ஆட்சி செய்தார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மையே. சில அதிர்ச்சியான சம்பவங்களுக்குப் பிறகு இளையராஜா மட்டும் தனி ராஜாங்கம் நடந்தினார். பலருக்கு எண்பதுகள் என்பது இளையராஜாவின் காலம். மறுக்க முடியாத உண்மை.

     பாரதிராஜா படங்களுக்கு இவர்கள் படைத்த பாடல்கள் இன்றளவும் பலரால் பொக்கிஷங்களாக போற்றப்பட்டு வருகின்றன. நிழல்களில் துவங்கிய இந்த மூவரின் கூட்டணி அடுத்தடுத்து வேறு வேறு சங்கீதச்  சோலைகளை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தது. அலைகள் ஓய்வதில்லை இசையால் எழும்பியது. தமிழ் சமூகத்தை சீரழித்த படங்களில் மிக முக்கிய இடத்தில் இருக்கும் இந்தப் படத்தைப் பற்றி தனிப்பட்ட விதத்தில் நான் நல்ல அபிப்ராயம் கொண்டிராவிட்டாலும் அதன் பாடல்கள் அப்போது தமிழகத்தில் ஏற்படுத்திய அலை அசாதாரணமானது. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே அப்போது பள்ளிச் சிறுவர்களின் காதல் கீதம். காதல் ஓவியம் பாடல் ஏகத்தும் காதல் விஷத்தை சிறுவர்களிடம் ஏற்றியது. ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடல் கொடுத்த ஆனந்தம் வார்த்தைகளை மீறியது.  ஆனால் பின்னாளில் இந்தப் பாடலின் மெட்டு தேனிப் பக்கம் உள்ள ஒரு கோவில் திருவிழா பாடலின் மெட்டு என்று அறிந்தபோது இளையராஜா இதுபோன்று வேறு எங்கெல்லாம் கைவைத்திருப்பார் என்ற அதிர்ச்சியில் உறைந்துபோனேன்.  கீழே இருப்பது  இணையத்தில் ஒரு பதிவர் எழுதியிருந்தது.


கேட்கும் யாருக்குமே முதல் முறையிலேயே பிடித்துப்போகும் மெட்டு. என்னதான் மிருதங்கம், வீணை போன்ற உயர்குடி சமாச்சாரங்கள் இருந்தாலும், பாடலின் மெட்டு ஒரு நாட்டுப்புற கும்மிப்பாடலை சார்ந்திருக்கும். கங்கை அமரன் ராஜாவிடம் மனஸ்தாபம் கொண்ட காலங்களில், "அவர் என்ன பெரிய பாட்டு போட்டுட்டார், எங்க ஊருல முளைப்பாரி எடுக்கும்போது பாடுற கும்மி பாட்ட காப்பி அடிச்சார்.." என்று மூலத்தையும் பாடிக் காட்டினார். ராஜாவே இதை சொன்னாலும் இனி நம்மால் மனதை மாற்றிக்கொள்ள இயலாது தானே??

யான வர்றதப் பாருங்கடி
அது அசஞ்சு வர்றதப் பாருங்கடி
என்ற கிராமியப் பாடலைக் கூட இதே ஆயிரம் தாமரை மொட்டுக்களே மெட்டில் சில இடங்களில் பாடுவது உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  கர்நாடக சங்கீதத்தை கருப் பொருளாகக் கொண்ட  சங்கராபரணம் என்ற தெலுகு படம் 79இல் வந்து அசாதாரண வெற்றி பெற்று, கார்நாடக இசையை தமிழகத்தில் மீண்டும் உயிர்ப்பித்தது.  இந்தப் படத்தின் தாக்கம் பாரதிராஜாவை காதல் ஓவியம் என்ற "காதல்  காவியத்தை" எடுக்கத் தூண்டியது என்பது அந்த ஓவியத்தைப்  பார்த்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். பாரதிராஜா பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் நபர்களில் தனது கதாநாயகனைக் காண்பார்  என்பார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் அவர் தேனாம்பேட்டை சிக்னலிலிருந்து (அப்படித்தான் அன்று பேசிக்கொண்டார்கள்) அழைத்துவந்த மற்றொரு நடிகர்(!?) இந்தப் படத்தில் நடித்த (அப்படி கூட இவர் செய்தாரா?) கண்ணன் என்பவர். ராதா ஒரு பரதம் ஆடும் பெண். இவரோ கண் தெரியாத கர்நாடக இசைஞர். தமிழ் சினிமாவின் விசித்திர விதிப்படி இவர்கள் இருவரும் காதல் கொள்ள, பிறகு இன்னொருவனுடன் திருமணம் என்று அவள் பிரிய, இவர்கள் காதல் உடைய, இறுதியில் நாயகனுக்கு பார்வை வர, காதலியோ காதலன் நினைவிலேயே உயிரை விட, பாடியபடியே கண் கிடைத்த நாயகனும் உயிர் துறக்க .. சுபம் என்று சொல்ல இயலாத அபத்தம். படம் ஓடவில்லை. படுத்தே விட்டது.  ஆனால் இளையராஜாவும் வைரமுத்துவும் இந்தப் படத்தை  ரசிகர்களின் மனதில் நீங்கா வண்ணம் புதைத்து விட்டார்கள். அனைத்துப் பாடல்களும் தேனில் குழைத்த பலாச் சுளைகள் போன்ற  இனிப்புச் சுவை.

நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே, நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம், பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் (என்ன ஒரு  காவியக் கற்பனை!), அம்மா அழகே உலகின் ஒளியே, வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள், பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ (இந்தப் பாடலுக்குத்தான் மாநில அரசின் சிறந்த பாடகர் விருது கிடைத்தது. வாங்கியவர் பாடலின் அனைத்துப் பாடல்களையும் அற்புதமாகப் பாடிய எஸ் பி பி அல்ல. இந்தப் பாடலை சிறப்பாகப் பாடிய தீபன் சக்கரவர்த்தி.) இவை அனைத்தையும் விட சங்கீத ஜாதி முல்லை காணவில்லை (கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை) பாடலே என்னை வீழ்த்தியது. பாடலின்  இடையே வரும் விழியில்லை எனும்போது வழிகொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்?  படத்தின் கருவை இரண்டே வரிகளில் சொல்லிவிடுகிறது.

இதன் பின் வந்த மண்வாசனை மறைந்திருந்த பாரதிராஜாவின் கிராமியச் சுவட்டை புதுப்பித்தது. பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்துருச்சு வெக்கத்த விட்டு என்ற பாடல் வைரமுத்துவின் இருப்பை சொன்னது. பெண்களை விதம் விதமாக வர்ணிப்பதில்தான்  ஆணுக்கு எத்தனை ஆனந்தம்? நல்ல மெட்டு, இசை போன்ற  சிறப்பான தகுதிகள் இருந்தாலும் இது ஒரு ஆபாசமான பாடல். சற்று அபத்தமான வரிகள் கூட எட்டிப்பார்க்கும்.

எண்பதுகளில் பாரதியார் புயல் தமிழ் இயக்குனர்களை பிடித்து ஆட்டியது. பாரதியாரை மீண்டும் கண்டுகொண்ட பல படங்கள் வந்தன. பாரதிராஜாவின் புதுமைப் பெண் அந்த வகையில் வந்த வெகு சாதாரணமான படம். கஸ்தூரி மானே கல்யாணத் தேனே, ஒ ஒரு தென்றல் புயலாகி வருதே போன்ற பாடல்கள் அப்போது வானொலிகளில் சற்று பிரபலமாக இருந்தன.


    இரா-பாரா-வைரா கூட்டணியின் தவிர்க்க முடியாத ஒரு படம் முதல் மரியாதை, நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் படங்களுக்குப் பிறகு இந்த மூவரும் சேர்ந்து படைத்த அதி அற்புத -- குறிப்பாக ---- கிராமத்து விருந்து.  சிவாஜி என்ற மகா நடிகனை புதிய ஒளியின் கீழ் ரசிகர்கள் கண்ட வியப்பான வருகை. பாடல்கள் அனைத்தும் வானொலிகள், இசைப் பதிவகங்கள், திருவிழா மேடைகள், திருமண விழாக்கள் எங்கும் மஞ்சுவிரட்டு காளைகள் போல சீறிக்கொண்டு ஒலித்தன.  இத்தனை உயிர்ப்பான நாட்டார் இசையை இளையரஜா இந்தப் படத்திற்காகவே தன் ஹார்மோனியப் பெட்டிக்குள் பத்திரப்படுத்தியிருந்தது போல மெட்டுக்கள் கேட்டவர்களை மண் வாசனையால் நிரப்பின.  சொல்லப் போனால் அப்போது வந்துகொண்டிருந்த பல கிராமத்துச் சூழல் படங்களில் இருந்த இளையராஜா முதல் மரியாதையில் வேறு தளத்தில் புதிய உற்சாகம் காண்பித்தார். தன்னையே கிராமத்து மழையில் நனைத்து புதுப்பித்துக் கொண்டு அவர் அமைத்தது போல பாடல்கள் இயல்பான கிராமத்து நிறம் கொண்டிருந்தன.  குறிப்பாக ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்க, என்ற பாடல் எனக்கு கொஞ்சம் உன்ன நம்பி நெத்தியிலே பாடலை நினைவு படுத்தும். வேறு வேறு மெட்டுகளாக இருந்தாலும் இளையராஜா தான் வெகு தூரம் தாண்டி வந்துவிட்ட அந்த ஆரம்பகால நாட்டார் இசையை இங்கேதான் மீட்டெடுத்தார் என்பது என் எண்ணம். வைரமுத்துவின் வரிகள் பாடலுக்கு அதீத அழகைக் கொடுத்தன. தப்பான கருத்தா தண்ணீரில் அழுக்கா? போன்ற வரிகள் எளிமையான இருந்தும் சிலிர்ப்பூட்டும்  சொற்கள் கொண்டவை. வெட்டிவேரு வாசம் விடலப் புள்ள நேசம்  அடுத்த ஆனந்தம். தாலாட்டும் வசீகரம், கொஞ்சும் தீற்றல், தீண்டும்  துயரம், செதுக்கும் இசையனுபவம் கொண்ட பாடல் என நான் கருதுவது  பூங்காத்து திரும்புமா ஏ பாட்ட விரும்புமா,  ஒரே வார்த்தை; அற்புதம்.  யார் யாரை மிஞ்சுவது என்ற போட்டியில் இளையராஜாவும் வைரமுத்துவும் சேர்த்துப் படைத்த தங்க மின்னல். ஆத்தாடி மடியில் வச்சு தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா  என்ற வரிகள் துயரத்தை உங்களுக்குள் விதைக்கும். பாடலின் இடையில் வரும் உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும் எங்க சாமிக்கு மகுடம் ஏறனும் என்ற வரிகளை வைரமுத்து சிவாஜிக்காக பிரத்தியேகமாக எழுதியதாக சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிவாஜிக்கு மறுக்கப்பட்ட இந்திய அரசு விருதுகள் குறித்து வைரமுத்துவின் ஆதங்கம் பொங்கும் வரிகள் அவை. பாடலின் இறுதியில் வரும்
ஆத்தாடி 
மனசுக்குள்ள 
காத்தாடி 
பறந்ததே 
உலகமே 
மறந்ததே 
ஒரு எளிமைச்  செழிப்பு.   இதில் மற்றொரு பாடல் உண்டு. காதலர்களின் கீதமாக வந்த அந்த நிலாவதான் ஏங் கையிலே புடிச்சேன் என்ற பாடல். எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன் கண்ண மூடு கொஞ்சம் நா காட்டுறேன் என்று ஒரு மாதிரியாக போகும். வேறு விதமாக அர்த்தம் பண்ணிக் கொள்ள ஏதுவான வழக்கமான இளையராஜாவின் முத்திரையான நாலாந்திரப் பாடல். வைரமுத்து எழுதியதால் அவரை விட்டுவிடலாம் என்று நான் எண்ணியதேயில்லை.  சொல்லப் போனால் நல்ல கவிதைகளை எழுதினாலும் வைரமுத்து இடையிடையே பல அருவருப்புகளையும் விடாது இழுத்துக்கொண்டே வந்திருக்கிறார். இதெல்லாம் சங்க கால இலக்கியங்களிலேயே இருக்கும் ஒரு சங்கதி என்ற சப்பைக்கட்டு இதற்கு பதிலாக வரும் ஒரு பலவீனமான  பாதுகாப்பு. சங்ககால இலக்கியங்களில் இருப்பதால் ஒரு ஆபாசம் (ஆனால் அப்போது அது ஆபாசம் அல்ல) அழகாகி விடும் என்று எனக்குத் தோன்றவில்லை. இது பற்றி பேசினால் போக்கு திசை மாறிவிடும்.

   கடலோரக் கவிதைகள் இந்த இரா-பாரா-வைரா கூட்டணியில் வந்த இறுதிப் படம்.  படத்தைப் பற்றி சிலாகிக்கும் படியான எந்த அம்சமும் தேடினாலும் கிடைக்காத இன்னொரு பாரதிராஜா  படம். சத்யராஜின் செயற்கையான இயல்புத்தனம் படத்தின் பலம் என்றாலும் பாடல்கள் சிறகு கட்டிப் பறந்தன.  கொடியிலே மல்லிகப் பூ மயக்குதே மானே ஒரு அபாரமான பாடல். வைரமுத்து எழுதியதில்லை என்றாலும் இதை இங்கே  குறிப்பிட வேண்டும்.   அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்க கட்டி பறக்குது சரிதானா பாடலின் துவக்கமே பலருக்கு போதையேற்றும். கிராமத்து பின்னணியில் இளையராஜா சோடை போவதேயில்லை என்பதை நிரூபித்த இசை. அவருடைய மகுடத்தின் மற்றொரு வைரக்கல் இந்தப் பாடல். போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே என்ற பாடலும் சிறப்பானது.  அடி ஆத்தாடி என்று எஸ் ஜானகி அடிக்கடி  ஜோசப் கல்லூரி விடுதியில் இரவு நேர உணவின் போது பாடுவதைக்  கேட்டிருக்கிறேன். தமிழ்ப் பாடல்களை அதுபோல கேட்ட நாட்கள் அவை. சிலவற்றையே நண்பர்களிடமிருந்து கடனாகப் பெற்று விருப்பத்தின் பேரில் கேட்டதுண்டு. இளையராஜா அப்போது எங்கேயுமிருந்தார். அப்போது வந்த பத்துப் படங்களில் ஏழு படங்களின் இசை அவருடையது.  எனவே அவர் பாடல்களுக்காக நான் சிரமப்பட்டதேயில்லை. அவரது பல பாடல்களைப் போல இந்த அடி ஆத்தாடி விடுதி ஒலிபெருக்கிகளில் கேட்டே அலுத்துவிட்டது.

     அடுத்து நான்  இளையராஜா-வைரமுத்து உருவாக்கத்தில் பிறந்த சில பாடல்களை பட்டியலிட்டுள்ளேன். 80 முதல் 86 வரை ஏறக்குறைய 100 (சிலர் 110 அல்லது 120 இருக்கலாம் என்கிறார்கள்.) படங்களுக்கு மேலே இவர்களின்  இணைப்பில் பல  பாடல்கள் வந்துள்ளன. அவை அனைத்தையும் எழுதுவது சற்று சிரமமான காரியம். எனவே சிலவற்றையே  இங்கே தந்துள்ளேன். அதிலும் சில  பாடல்களின் அருகே ஒரு கேள்விக்குறி தொக்கி நிற்பது  அவை   வைரமுத்து எழுதியதுதானா என்ற எனது சிறிய சந்தேகத்தின்  வெளிப்பாடு,  தெரிந்தவர்கள் திருத்தினால் மகிழ்ச்சியே.

     இப்போது  எண்பதுகளின் இனிமைச் சாலையில் ஒரு ஒய்யார ஊர்வலம் போகலாம்.

பயணங்கள் முடிவதில்லை- இளைய நிலா பொழிகிறதே, சாலையோரம் சோலை ஒன்று வாடும், தோகை இள மயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ. இதிலுள்ள அனைத்துப் பாடல்களும் பட்டை தீட்டிய வைரங்கள் என்றாலும் வைரமுத்துவின் வரிகளில் வந்ததை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன். தோகை இளமயில் ஒரு சந்தனக் காற்றின் சங்கீதம். கேட்கக் கேட்க திகட்டாதது.

கொம்பேறி மூக்கன்- ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்,(தியாகராஜனுக்கு இந்த அற்புத மெலடி கொஞ்சம் அதிகம்தான்.)

கைராசிக்காரன்- நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்,   படத்தைப் பார்கவில்லை. படம் வந்து நீண்ட நாட்கள் கழித்து கேட்ட இந்தப் பாடல் அள்ளி வீசிய ஆனந்தம் ஏராளம். கை  வீசும் தாமரை கல்யாண தேவதை.(இரண்டுமே ஆகாயப் பந்தலில் பொன்னூஞ்சல் ஆடும் சுகமானவை.)

புதுக்கவிதை- வெள்ளைபுறா ஒன்று ஏங்குது? இது காதல் பாடலா அல்லது சோகப் பாடலா என்ற பட்டிமன்றமே நடத்தலாம்.  காதலர்களுக்கு மத்தியில் ஒரு டூயட் பாடும் நேரத்தில் எதற்காக இத்தனை துயரம் என்று தெரியவில்லை. வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே அப்போது பிடித்த பாடல். இப்போது கேட்கும்போது இதுதானா அது என்று என்னையே வியப்புடன் வினவிக்கொள்கிறேன். மலேஷியா வாசுதேவன் ஒரு பாடலின் ஜீவனை பாடிப் பாடியே துரத்தி வெளியே அனுப்பிவிடுவார். மெலடி என்றால் என்ன விலை என்று கேட்கும் சாரீரம் அவருடையது. இரண்டாவது சரணத்தில்   வலி, வழி என்று ஒரு வார்த்தை விளையாட்டு உண்டு.

மலர்கள் நனைகின்றன- கண்ணா வா வா அதிகம் அறியப்படாத  ஒரு பாடல்.

நிழல் தேடும் நெஞ்சங்கள்- இது கனவுகள் விளைந்திடும் காலம் (நீதானா நீதானா இது நீதானா?)  எத்தனை அருமையான கானம்! இசையின் போக்கும் அதை லயமாக இழுத்துச் செல்லும் மெட்டும் ...அபாரமான பாடல்.. மங்கள வானம் குங்குமம் தீட்டும் மன்மத நேரமிது,  பூக்கள் சிந்துங்கள் கொஞ்சும் தேவே சொந்தங்கள் (இதுவே தங்க மகன் படத்தில் வா வா பக்கம் வா பக்கம் வர வெக்கமா என்று மாறியது.)

ஈரவிழிக் காவியங்கள்- பழைய சோகங்கள் அழுத காயங்கள், என் கானம் இன்று அரங்கேறும்,  காதல் பண்பாடு யோகம் கொண்டாடு (ஒரு கார்காலத்தில் என் பூந்தோட்டத்தில் எதிர்பாராத மாறுதல், என் நெஞ்சின் பசி கண்ணீரின் ருசி அவை தீராத சாபங்கள் என்று பெட்ரோல் பூசிக் கொண்ட வரிகள் திடீர் திடீரென நம்மைச்  சுடும்.) இந்தப் பாடலை நான் கற்பனை செய்துவைத்திருந்த காட்சியில் அதே பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது போல மிக மோசமான காட்சியமைப்பு. யாராவது இந்தப் பாடலை ஒரு மேடைப் பாடல் என்று நினைத்திருப்பர்களா அதுவும் மேற்கத்திய ராக் கான்செர்ட் பாணியில்? அபத்தத்தின் உச்சம்.

ஆராதனை- ஒரு குங்கும செங்கமலம், வெகு தாமதமாக நான் கேட்ட பாடலிது. இளையராஜாவின் பட்டுபோன்ற மென்மையான இசைக் கோர்ப்பு. ஆர்ப்பாட்டங்கள் இல்லாத எளிமையின் அழகு. பலரின் கற்பனையில் இல்லாத அபூர்வமான கவிதை கானம்.

வாலிபமே வா வா - கண்ணே பலம் தன்னால் வந்தது, படத்தைப் போலவே அதிகம் பேசப்படாத ஒரு சராசரிப் பாடல். பாரதிராஜாவுக்கு தமிழ் ரசிகர்கள் மீது வந்த அசாதாரண கோபம் இந்தக் குப்பையை எடுக்கத் தூண்டியது என்பார்கள். காதல் ஓவியம் தோற்றதால் அவருக்கு இந்தக் கோபம் வந்ததாம். என்னைக் கேட்டால் அலைகள் ஓய்வதில்லை என்ற படமே ஒரு குப்பைதான். சமூகத்தை சீரழித்த படங்களின் துவக்கம் இதுதான்.

கோபுரங்கள் சாய்வதில்லை- பூ வாடைக் காற்று வந்து ஆடை தீண்டுமே, சந்தேகமேயில்லாமல் வைரமுத்துவின் பாடல் இது என்று சொல்லிவிடலாம். பாடலில் இடையே வரும் ஹம்மிங் ரம்மியமானது. இன்றுவரை ரசிக்கிறேன்.

ராணித் தேனீ- என்னசொல்லி நான் எழுத என் மன்னவனின் மனம் குளிர. பொதுவாக சுசீலாவின் இனிமை இளையராஜாவின் பாடல்களில் காணக் கிடைப்பது அபூர்வம். சுசீலாவை வெகு சாதாரணமாகவே பாடவைப்பார். அல்லது அந்தக் குரலுக்கான அற்புதமான ராக நெளிவு அவரிடம் கிடையாது என்று சொல்லலாம். ஆனால் இளையராஜாவின் இசையில் பி சுசீலா அற்புதமாகப் பாடிய வெகு சில பாடல்களில் இது ஒன்று. பாடலுக்கான மெட்டு அற்புதமாக செதுக்கப்பட்ட சிலை போல அத்தனை துல்லியம்.

மஞ்சள் நிலா- பூந்தென்றல் காற்றே வா, இளையராஜாவை வியக்காமல் இருக்கவே முடியாது என நான் எண்ணும் சில பாடல்களில் இதுவும் ஒன்று. பூந்தென்றல் காற்றே வா என்ற முதல் வரியின் பின்னே இளையராஜா அமைத்திருக்கும் இசைக் கோர்ப்பு ஒரு அதீத கற்பனையின் ஆச்சர்யமூட்டும் அழகு. பாடலின் பல்லவியுடன் அலை போல அசைந்துவரும் கிடார் இசையை தனித்துக் கேட்டபடியே இதை ரசித்தால் இப்பாடலின் வியப்பூட்டும் பரிமாணம் நமக்கு விளங்கும். ராஜா ரசிகர்கள் சிலாகிக்கும் பல வெற்றுப் பாடல்களை விட இது அதிகம் செழிப்பானது. தரமானது. இது போன்ற பெயரில்லாத படங்களில் இளையராஜாவின் இசை சில சமயங்களில் ஒரு  அதிர்ச்சியூட்டும் அழகு.

தூறல் நின்னு போச்சு- தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி பலரின் விருப்பப் பாடல்.  நான் அதிகம் கேட்டதில்லை.

கண்ணே ராதா- மாலை சூட கண்ணே ராதா நாள் வராதா ரசிக்ககூடிய மெட்டுடன் கூடிய துள்ளல் இசை.

கோழி கூவுது- எதோ மோகம் எதோ தாகம், இளையராஜா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த புள்ளி இதுதான். பாடலைக் கேட்டால் மனதுக்குள் விரியும் கற்பனைக் காட்சிகள் வார்த்தைகளை மீறிய வனப்பு கொண்டவை.  பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே. மலேஷியா வாசுதேவன் பாடிய பாடல்களில் என்னைக் கவர்ந்த வெகு சில பாடல்களில் ஒன்று.

மலையூர் மம்பட்டியான்- காட்டு வழி போகும் பெண்ணே கவலப் படாதே பாவலர் வரதராஜன் தான் சார்ந்திருந்த காம்யுநிஸ்ட் கோட்பாடுகளைப்   பாடிய பல மெட்டுக்களில் இதுவும் ஒன்று என விபரம் அறிந்தவர்கள் சொல்வார்கள். இதுபோல பாவலர் ஏற்கனவே மெட்டமைத்தவைகளை இளையராஜா சினிமாவில் பயன்படுத்திக்கொண்டதாக அப்போது ஒரு இயக்குனர் குமுதம் இதழில் எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது. அவர் வீட்டு சொத்து. அவர் எடுத்துக் கொள்வதில் தவறேதுமில்லை என்றே தோன்றுகிறது.

மெல்லப் பேசுங்கள்- காதல் சாகாது ஜீவன் போகாது, கேளாதோ  காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ,  செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு மூன்றுமே தெவிட்டாத தென்றல் துளிகள்.

ஒரு ஓடை நதியாகிறது- தலையை குனியும் தாமரையே, தென்றல் என்னை முத்தமிட்டது, டிபிகல் வைரமுத்து-இளையராஜா படைப்பு.  இவர்களின் பாடல் இப்படித்தான் இருக்கும் என்றெண்ண வைத்த பாடல்கள்.

ஆனந்த கும்மி- ஒ வெண்ணிலாவே வா ஓடி வா, ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா, தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி, ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ,இந்தப் படத்திற்கு வசனம் எழுதியதும் வைரமுத்துதான். மிகைப் படுத்தப்பட்ட நாடகத்தனமான வசனங்கள் என்று விமர்சனம் எழுந்தது. ஆனால் பாடல்களில் தேன் வழிந்தது. குறிப்பாக ஒரு கிளி உருகுது பாடலின் மெட்டு மனதை சிறைபிடிக்கும்.

ராகங்கள் மாறுவதில்லை- என் காதல் தேவி நீ என்னில் பாதி, விழிகள் மீனோ மொழிகள் தேனோ, தென்றலோ தீயோ தீண்டியது நானோ அருமையாக வரையப்பட்ட நேர்த்தியான பொன்னோவியங்கள்.

ஆயிரம் நிலவே வா- அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே, தேவதை இளம் தேவி, இளையராஜாவின் 200 வது படம் என்று நினைவு. எப்படி எப்படி என்று எஸ் பி பி கேட்கும் அந்தரங்கம் யாவுமே அப்போது இளைஞர்களைக் கவர்ந்தது. படம் ... கேட்கவே  வேண்டாம்... அத்தனை சுத்தம்!

இன்று நீ நாளை நான்- மொட்டு விட்ட முல்ல கொடி?, பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம், துயரத்தின் நிழல் படிந்த சந்தோஷ கீதங்கள். அற்புதமான மெட்டுடன் மனதை ஆழமாகத் தைக்கும் சோக முட்கள்.

ஜோதி- சிரிச்சா கொள்ளிமல குயுலு ? அதிகம் வெளியே தலைகாட்டாத கானம்.  இது அத்தனை சிறப்பானதல்ல என்றாலும் கேட்கக்கூடிய பாடலே.

கண் சிவந்தால் மண் சிவக்கும்- மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்.  காம்யுநிஸ்ட் கொள்கைகளை வைத்து வீடு கட்டிய சிவப்பு மல்லி என்ற படத்தின் எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற பாடலின் தாக்கம் அதிகம் கொண்டது இது.

நீங்கள் கேட்டவை- பிள்ளை நிலா, கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் சோகங்கள்  (இதிலுள்ள வைரமுத்து எழுதாத அடியே மனம் நில்லுனா நிக்காதடி மற்றும் ஓ வசந்த ராஜா இரண்டும் பெரிய அளவில் இளைஞர்களை கவர்ந்தன.)

உயர்ந்த உள்ளம்- எங்கே என் ஜீவனே.  (இதிலுள்ள  என்ன வேணா தினுங்கடா டோய் இஷ்டப்படி வெட்டுங்கடா டோய் பாடல் பின்னர் வாழ வைக்கும் காதலுக்கு ஜே என்றானது. )

இங்கேயும் ஒரு கங்கை- சோலை புஷ்பங்களே என் பள்ளி நாட்களில் அதிகம் பேசப்பட்ட, விரும்பப்பட்ட, ஒலித்த பாடல் இது.  சோகத்தில் மூழ்கிய மெட்டு.

கீதாஞ்சலி- ஒரு ஜீவன் அழைத்தது,  துள்ளி எழுந்தது பாட்டு? கல்லூரி விடுதில் கேட்ட நினைவில் ஆடும் பல பாடல்களில் இவைகளும் உண்டு. இருந்தும் இளையராஜாவின் குரலை விட இசை கேட்க சற்று ஆறுதலாக இருக்கும். அவர் பாடியிருக்காவிட்டால் ஒருவேளை இந்தப் பாடல்கள் என்னை கவர்ந்திருக்கலாம்.

எனக்குள் ஒருவன்- முத்தம் போதாதே சத்தம் தீராதே, முத்தம் சத்தம் யுத்தம் எல்லாம் வைரமுத்துவின் பேனாவிலிருந்து தானாக உதிரும் வார்த்தைகள். நான்  அதிகம்  கேட்டதில்லை.   மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு.         ஜெனிசிஸ், ஆலன் பார்சன்ஸ் ப்ரொஜெக்ட், ஸ்டார்ஷிப், ஹூட்டர்ஸ், மிஸ்டர் மிஸ்டர், சர்வைவர்  என்று ஆங்கில இசைத் தொகுப்புகளை கடை கடையாக வேட்டையாடிக்கொண்டிருந்த  காலகட்டத்தில் வந்த இந்தப் பாடல் முதல் தடவையே ஒரு பரவச அனுபவமாக நெஞ்சத்தில்  அமர்ந்துகொண்டது. கொஞ்சம் அதிரடி, கொஞ்சம் மெலடி, கொஞ்சம் சரவெடி என்ற புது வடிவத்தில் இளையராஜா ஏகத்துக்கும் விளையாடிய இசைப் பெருமழை.   சற்று வேறு பக்கம் பார்க்கக்கூடிய சந்தர்ப்பத்தையே கொடுக்காது,  "அங்க என்ன பார்வை? என்னையே  கவனி" என்று தீர்க்கமாகச் சொல்லும் பொறாமைக் காதலி போன்ற பாடல். அத்தனை உயிர்ப்பான இசை, துடிக்கும் தாளம், மெய்மறத்தலுக்கு ஏற்ற இசை. நான் ரசிக்கும் இளையராஜா பாடல்களில் ஒன்று என்பதை சொல்லத் தேவையில்லை.

தர்ம பத்தினி- நான் தேடும் செவ்வந்திப் பூவிது? இளையராஜா பாடாமல் இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கும் பல பாடல்களில் ஒன்று. பரவலாக சிலாகிக்கப்பட்ட இசை. எனக்கு  அந்த அளவுக்கு எதுவும் தோன்றவில்லை. குறிப்பாக தொடர்பில்லாத இடையிசை  தான் பாட்டுக்கு வேறு எங்கோ சென்றபடி இருக்கும். அதை கட்டி இழுத்து வந்து சரணதிற்குள் அடைக்கும் பொருத்தமில்லாத இசையமைப்பு. முழுமையடையாத பாடல் போலவே ஒலிக்கும்.

கொக்கரக்கோ- கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம். பள்ளி தினங்களில் என் மனதை அள்ளிச் சென்ற பாடல். எஸ் பி பியின் குழையும் குரலில் இதைக் கேட்பதே ஒரு சுகம்தான். வெல்வெட் விரிப்பில் நடந்து செல்லும் மிருதுவான இசையமைப்பு.

உன்னை நான் சந்தித்தேன்- தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் என்னால் மறக்கவே முடியாத 85ஆம் ஆண்டின் கோடை விடுமுறை நாட்களை உயிர்ப்பிக்கும் பல பாடல்களில் ஒன்று. என் கசின் கூட்டம் சேர்ந்து அடித்த கூத்தும்,  பேனாசோனிக் டேப் ரெக்கார்டரில் எங்கள் குரலில் சினிமா பாடல்கள் பாடி பதிவு செய்த  குதூகலமும், அதற்குப் பிறகு அத்தனை கூட்டம் சேராமல்  காணாமல் போன களிப்பும்  என்னை மீண்டும் மீண்டும் அந்த தங்க துக்கத்தை அசைபோடச் செய்கிறது. அப்படி என் தங்கை பாடிய ஒரு பாடல் தேவன் தந்த   வீணை. முதல் வரியை பாடிவிட்டு அவள் எக்கோ எபெக்ட் கொடுத்து தன் தொழில் நேர்த்தியை தானே பாராட்டிக்கொண்டாள். எனக்கு இந்தப் பாடல் அவ்வளவாக பிடிக்காது. ஆனால் இந்தப்  பாடல் தரும் நினைவலைகள் விலைமதிப்பில்லாதவை.   தாலாட்டு மாறிப் போனதே? இளையராஜாவின் மோகனமான மனதை சொக்க வைக்கும் தாளம் இதன் உயிர்நாடி.

வாழ்க்கை- காலம் மாறலாம் நம் காதல் மாறுமா எதோ கமலஹாசன் பாடல் போல இருக்கும். படத்தில் சிவாஜி வாயசைப்பார் அம்பிகாவுடன் நடனமாடியபடியே. கோட் சூட் போட்ட கார் மெக்கானிக்கை நீங்கள் இந்தப் படத்தில்தான் பார்க்கலாம்.

முடிவல்ல ஆரம்பம்- பாடிவா தென்றலே ஜெயச் சந்திரனின் குரலில் எதோ ஒரு வசியம் இருப்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். சில சமயங்களில் இவர் ஜேசுதாசை விட நம் மனதை கொள்ளையடித்து விடுகிறார்.  தென்னகீற்றும் தென்றல் காற்றும் கைகுலுக்கும் காலமடி சுசீலா பாடிய சுவடே தெரியாது. யார் வேண்டுமானாலும் பாடியிருக்கக் கூடிய சாதாரணப் பாடல்.

சிந்து பைரவி- படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் அசுர வெற்றி பெற்றன. அப்போது ஒரு பதிவகத்தில் எடி கிராண்ட் இசைத் தொகுப்பை தேடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த கொஞ்சம் வயதான ஒரு மாமி' "சிந்து பைரவி கேசெட் கொடுங்கோ. பாட்டெல்லாம் பேஷா நன்னா வந்திருக்கு." என்று சொல்லி வாங்கிச் சென்றது நினைவிருக்கிறது. என் நண்பன் சொல்வதுண்டு; "இப்பதாண்டா இளையராஜாவ பிராமின்ஸ் ரசிக்கிறாங்க." கலைவாணியே உனைத்தானே அழைத்தேன், பூ மாலை வாங்கிவந்தேன், என்று இளையராஜா கர்நாடக ராகங்களில் தோய்ந்த இசையை பூப்  பூவாக தொடுத்திருப்பார். எனக்குத் தெரிந்த ஒரு கர்நாடக இசையறிந்த நண்பரொருவர் சிந்து பைரவி பாடல்கள் பற்றி  "பெரிய சாதனை பாடல்கள் ஒன்றும் கிடையாது. வெகு சாதாரணப் பாடல்கள்தான். இதை விட அபூர்வ ராகங்கள் படப் பாடல்கள் சிறப்பானவை" என்று சொல்வார்.  நானொரு சிந்து, பாடறியேன் படிப்பறியேன் இரண்டும் கர்நாடக ராகங்களில்  ஒளிந்திருக்கும்  நாட்டுப்புற மெட்டுக்களின் வேர்களை தேடிச் செல்லும் ராக பயணம்.  நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு, மாம வீடு மச்சு வீடு போன்ற இசை "ஆச்சர்யங்களை" அள்ளித் தெளித்த இளையராஜாவின் மற்றொரு அதிரடி"அற்புதம்" தண்ணித் தொட்டி தேடி வந்த கண்ணுக் குட்டி நான். பரிதாபம்.

  எண்பதுகளில் பலருக்கு கிடைக்காத ஒரு மெகா வெற்றி வெளிச்சம் இளையராஜா இசையினால் ஒரு நடிகரின் மீது படர்ந்தது. அவர்  நடிகர் மோகன். இவர் படங்கள் என்றாலே   இளையராஜாவின் இசையில் ஒரு தனி ரசிப்புக்கான பல அம்சங்கள் குவிந்துவிடும். மோகன் பாடல்கள் என்று ஒரு தனி பதிவே எழுதுமளவுக்கு இளையராஜா அவர் படங்களுக்கு அளித்த பல பாடல்கள்  என்றும்  பசுமையானவை.  சமீபத்தில் ஒரு டி வி  நேர்காணலில், நடிகர் மோகனை ஒரு நிருபர் "உங்களின் படங்களில் பாடல்கள் எல்லாமே சிறப்பாகவும் அருமையாகவும் அமைந்துவிட்டது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" என் கேட்க, அதற்கு   அவர்  சொன்ன பதில் அதிர்ச்சியூட்டியது. அவர் சொன்னது: "எல்லாம் கடவுளின் அருள்". நியாயமாகப் பார்த்தால் மோகன் இந்தக் கேள்விக்கு சொல்லியிருக்கக்கூடிய அல்லது வேண்டிய ஒரே வார்த்தை; " இளையராஜா".  எதோ இவரது வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட கடவுளின் ஆசீர்வாதம் போல தொனிக்கும் இந்த அபாண்டமான பதில் எனக்கே எரிச்சலூட்டியது.

     உண்மையில் இளையராஜா தன் படைப்பாற்றலின் உச்சத்தில் இருந்தபோது அதிர்ஷ்டவசமாக மோகன் அங்கே இருந்தார். கமல், ரஜினி என்ற ஒளிவட்டம்  சுழன்ற பெரிய நடிகர்கள்  அப்போது இருந்தாலும் அவர்களுக்கான பாடல்களில் இருந்த  ஒரு வர்த்தகக் கயிறு அவர் இசையை கட்டிப்போட்டிருந்தது எனலாம். ஆனால் இரண்டாம் மூன்றாம் கட்ட  நடிகர்கள் படத்தில் அவர் தன் புதிய பரிசோதனைகளை கட்டுப்பாடுகளின்றி செய்ய முடிந்தது. எந்த தனிப்பட்ட ஆளுமைக்கான நிர்ப்பந்தமும் அவரது இசையின்  பாதையை தீர்மானிக்கவில்லை. மோகன் என்றாலே இளையராஜா நம் நினைவில் வருவது இதனால்தான். பருவமே புதிய பாடல் பாடு என்று வைரமுத்துவுக்கு முன்பே இளையராஜா மோகனுக்காக அமைத்த ஒரு பாடல் என்னுடைய விருப்பதிற்குரியது.

   தென்றலே என்னைத் தொடு - இளையராஜாவின் சாதனை இசைப் படைப்புக்களில் ஒன்று  என்று தயங்காமல் சொல்லிவிடலாம். இன்றும் நவீன முகம் கொண்ட  அழகு. ஜேசுதாசை மூடுபனியின் என் இனிய பொன் நிலாவேவில் கூட நான் இந்த அளவுக்கு ரசித்ததில்லை.  கண்மணி நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலோரம் அமர்ந்திருக்கையில்  நம் முகத்தை வருடிச் செல்லும்  மென்மையான தென்றலின்  கூந்தல் . புதிய பூவிது பூத்தது இளையராஜா ஒரே வார்ப்பில் ஏகத்துக்கு  பாடல்கள் அமைத்திருக்கிறார். சில சமயங்களில் சரணத்தை மட்டும் கேட்டால் என்ன பாடல் என்பதே புரியாத புதிராக இருக்கும். ஆனால் இது போன்றதொரு இன்னொரு பாடலை அவர் அமைக்கவேயில்லை. வசீகர வனப்பில் வடித்தெடுத்த வசந்த இசை. உண்மையிலேயே புதிய பூவது. கவிதை பாடு குயிலே இனி வசந்தமே, தடதடக்கும் தாளம்  இந்தப் பாடலின் அடிநாதம். கொஞ்சமாக  ஒரு இழை பிசகியிருந்தாலும்  இப்பாடல் இளையராஜாவின் புளித்துப் போன வழக்கமான டப்பாங்குத்து வடிவத்துக்குள் சிக்கிக்கொண்டிருக்கும். தென்றல் வந்து என்னைத் தொடும்? தொடரும் தென்றல். வண்ண மயமான ஓவியத்தை அருகே ரசிக்கும் ஆனந்தம்.

உதய கீதம்- உதய கீதம் பாடுவேன்  தீண்டிப்பார்க்கும் துயரம்.   சங்கீத மேகம்?  சில பாடல்களின்   முன்னிசையே   ஒரு பெரிய ஆர்ப்பரிப்புக்கான அறிமுகமாக அமைவதுண்டு. ( அன்பே வா படத்தின் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலின் துவக்க இசையைக் கேளுங்கள். இதன் அர்த்தம் புரியும்.) அப்படியான ஒரு நீர்வீழ்ச்சி போல  கொட்டித் தெறிக்கும் இசையுடன் துவங்கும் இந்தப் பாடல்  அடுத்தடுத்து பல படிமங்களாக விரிவடைவது ஆச்சர்யமானது. இளையராஜாவின் பாடல்களின் இத்தனை குதூகலம் கொண்ட இசையை நான் இதற்கு முன் கேட்டதேயில்லை. அவருடைய டப்பாங்குத்து பாடல்களில் வரும் குதியாட்டதை நான் இங்கே கணக்கில் சேர்க்கமாட்டேன். சற்று கிருஸ்துவ  தேவாலயப் பாடல் சாயல் கொண்ட மெட்டு. சரசர வென்று விரைந்து செல்லும் இசையமைப்பு கேட்பவரை ஆக்கிரமித்து, ஒரு நொடி கூட தளராமல் பாடலின் இறுதி வரை ஆட்சி செய்யும். தேனே தென்பாண்டி மீனே. இது புலமைப்பித்தன் எழுதிய பாடல். சோகத்தை சுமந்த மெட்டு. மனதுள் பாடல் இறங்க இறங்க மெல்லிய வலியை உணரலாம். தாழம்பூவை தூர வைத்தால் வாசம் விட்டுப் போகுமா என்ற வரிகள் மிகுந்த ஆழமானவை. இதே போல குங்குமச் சிமிழ் படத்தில் வாலி எழுதிய நிலவு தூங்கும் நேரம் என்ற பாடல் அற்புதமான கானம். சோகம் போர்த்திய மென்மையான காதல் கீதம்.


நூறாவது நாள்- உலகம் முழுதும் பழைய ராத்திரி, விழியிலே மணி விழியிலே? கன்னடத்திலிருந்து தமிழுக்கு புலம் பெயர்ந்து பின்னர் ஹிந்திக்கு படையெடுத்த இளையராஜாவின் அபாரமான மெட்டு. சிலர் இளையராஜாவின் காதல் பாடல்கள் என்ற பேச்சில்  அக்னி நட்சத்திரம், அபூர்வ சகோதரர்கள், ராஜாதி ராஜா என்று கேட்கச் சகிக்காத  பாடல்களை விவாதத்திற்குள் இழுத்துக்கொண்டு வரும்போது நான் குறிப்பிடும் பல அரிதான பாடல்களின் ஒன்று இது.

அன்பே ஓடி வா- இப்படி ஒரு படம் வந்ததே எனக்கு படம்  வந்து காணாமல் போன இரண்டு வருடங்கள் கழித்துதான் தெரியவந்தது. என் அண்ணன் ஒரு கசெட்டில் எஸ் பி பியின் தனிப் பாடல்கள் என்ற தலைப்பிட்டு சுமார்  பனிரெண்டு பாடல்களை பதிவு செய்து வைத்திருந்தான். எம் சி சி கல்லூரிக் காலம் முடிந்த பிறகு மேகங்கள் பூசிய ஒரு மழைக்காலத்து அந்தி வேளையில் தமிழ்ப்  பாடல்களைக் கேட்கவேண்டும் என்றொரு இச்சை எழ, அப்போது கேட்ட பல அசாதாரணப் பாடல்களில் ஒன்று  ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.  வர்ணிக்க ஒரே வரிதான். திகைப்புச் சுவை. அரிதான பாடல்கள் வரிசையில் சிரமமில்லாமல் சேர்ந்துகொண்ட அற்புதப் பாடல். மகா பிரகாசமாக  ஒளிரும் மின் விளக்குகளை விட இது போன்ற சிறிய அகல் விளக்குகளின் அழகு என் மனதை கவர்வதுண்டு. அழகான பூக்கள் மலர்ந்தாடுமே அடுத்த அழகு.

ஒ மானே மானே - பொன்மானே தேடுதே என் வீணை பாடுதே? இது கமலஹாசன்  மோகனுக்காக பாடிய பாடல். பிரசாத்(?) ஸ்டூடியோவுக்கு எதேச்சையாக வந்த கமலஹாசனை இளையராஜா சும்மா பாடச் சொல்ல அவர் சும்மா பாடிவைக்க படத்தில் கமல் குரலுக்கு வாயசைத்தார் மோகன். உண்மை இப்படி இருக்க நாங்கள் மோகனுக்கு பாடுற லெவலுக்கு வந்துட்டாரப்பா கமல் என்று பேசிக்கொள்வோம். தரமான மேற்கத்திய பாணி இசை. கேட்க நன்றாக இருக்கும். வந்த புதிதில் பிரபலமாக இருந்தது.

அன்புள்ள மலரே- அலை மீது தடுமாறுதே  சிறு ஓடம்? ஒரே மாதிரியான இசைக் கோர்ப்பு என்றாலும் கேட்க அலுக்காத அழகிசை. 

உன் கண்ணில் நீர் வழிந்தால்- என்ன தேசமோ துக்கமா? துயரமா? தத்துவமா?  கூப்பிடு ஜேசுதாசை என்ற அப்போதைய காலத்தின் நிர்ப்பந்தம். கண்ணில் என்ன கார் காலம். பல்லவி மட்டும் ஆண் குரலில் வரும். இரண்டு சரணமும் பெண் குரலில் சற்று தாலாட்டும்.  முதல் சரணத்தில்
நான் உறங்கும் நாள் வேண்டும் 
சாய்ந்து கொள்ள தோள் வேண்டும் 
என் கண்ணில் நீர் வேண்டும் ...
சுகமாக அழ வேண்டும் என்ற கவிதை ஒரு மின்சார அழகு. எம் சி சி யில் நான் படித்தபோது அங்கிருந்த  ஒரு நண்பன் இந்தப் பாடலை ரிபீட் செய்து கேட்டுக்கொண்டே இருப்பான். சுகமாக அழவேண்டும் என்ற வார்த்தையை "பின்னீட்டான். அழறது கூட ஒரு சுகம்தான். இதச் சொல்ல ஒரு கவிஞன் வரான் பாரு" என்று சிகரெட்டின் கடைசி இழுப்பு வரை இழுத்துக்கொண்டே சிலாகிப்பான். உண்மையே. கண்ணீர்த் துளிகளின் கதகதப்பை கவிதையாக வடித்த அபார வரிகள் அவை.

நான் சிகப்பு மனிதன்- காந்தி தேசமே காவல் இல்லையா, பெண் மானே சங்கீதம் பாடி வா? இந்தப் பாடல் நடிகர் மோகனுக்கான  பாடல் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டதோ என்ற சந்தேகம் எனக்குண்டு.

படிக்காதவன்- ஊரத் தெரிஞ்சுகிட்டேன் இளையராஜா இசையில் வந்த வெகு சொற்பமான தத்துவப் பாடல்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பாடல். இதை புதுகை சக்தி மியூசிகல் பதிவகத்தில் முதலில் பெரிய ஸ்பீகர்களில் கேட்டபோது அங்கே தள்ளாடிக் கொண்டு வந்த ஒரு "குடி"மகன் பாடலை மீண்டும் ஒலிக்கச் செய்து கேட்டுவிட்டு "ராஜா ஒரு தெய்வம்டா. என்னாமா பாட்டு போட்டுருக்கான்!" என்று சிலாகித்தது ஞாபகத்தில் இருக்கிறது.  சோடிக்கிளி எங்கே சொல்லு சொல்லு. இதில் பல்லவிக்கு முன் வரும் அந்த திடீர் கிர்ர்ர் என்ற ஓசைக்கு அப்போது ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. என் ரஜினி நண்பன் சொல்வான்  "தலைவருக்கு ஏத்த மியுசிக்னா அது இதான்." நானோ அவனுக்குத் தெரியாமல் சிரித்துக் கொண்டிருப்பேன்.

உன்னைத் தேடி வருவேன்- ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே இதே போல இளையராஜாவிடம் டசன் கணக்கில் பாடல்கள் இருக்கின்றன. புதுமையான எதுவுமே இல்லாத சாதாரணம். என் அன்பே அன்பே என் மனம் உன் வசம்?  புதிய பாணி இசை என்று சொல்லலாம். இதில் வரும் அந்த பிசிறடிக்கும் கிடார் ஓசையே பின்னாட்களில் இளையராஜாவின் முத்திரை இசையாகிப் போனது துரதிஷ்டமே. அக்னி நட்சத்திர நாட்களின் முன்னோடி இந்தப் பாடல்.

பிள்ளை நிலா- ராஜா மகள் ரோஜா மகள்?

அன்பின் முகவரி - உயிரே உறவே ஒன்று  நான் சொல்லவா?  வான் சிவந்தது பூ மலர்ந்தது.

பாடும் பறவைகள்- நிழலோ நிஜமோ (அன்பின் முகவரி படத்தின் உயிரே உறவே பாடலின்  மறு பதிப்பு.) கீரவாணி?

அந்த ஒரு நிமிடம்- சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே படத்தின் ஒரே நல்ல அம்சம் இந்தப் பாடல்தான். எஸ் பி பியின் அழகான சிரிப்புக்கெனவே இதை அடிக்கடி கேட்ட நாட்கள் உண்டு.

இதயக் கோயில்- நான் பாடும் மௌன ராகம் வைரமுத்து எழுதிய ஒரே பாடல். பாடலின் தாளம் பாடலை வேறு தளத்திற்கு உயர்த்தி விடுகிறது. சொக்கவைக்கும் இசை. அசாதாரண மெட்டு. செவிகளை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு கடந்து செல்ல முடியாத துயரத்தின் உன்னதம். இந்தப் படத்தின் மற்ற பாடல்களான யார் வீட்டு ரோஜா பூ பூத்ததோ, இதயம் ஒரு கோவில், பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான், வானுர்யந்த சோலையிலே என அனைத்தும் தங்கத் துகள்கள். எண்பதுகளில் இளையராஜா என்றால் எனக்கு அப்போது மனதில் உதித்த  பாடல்கள் இவைதான்.

ஜப்பானில் கல்யாணராமன்- அப்பப்பா தித்திக்கும் இந்த முத்தம் சடசடக்கும் ரயில் போன்ற இசை கொண்ட தித்திக்கும் பாடல். தடா புடா என்று உருளும் ட்ரம்ஸ் அப்போதைய இளையராஜாவின் மேற்கத்திய percussion இசை. அவரது சில பாடல்களில் அந்த ஓசை நம்மை அதிகம் தொந்தரவு செய்யாமல் இனிமையாக இருக்கும்- இந்தப் பாடல் போன்று.

தாய்க்கு ஒரு தாலாட்டு- ஆராரிரோ பாடியதாரோ  துயரத் தாலாட்டு.

உனக்காகவே வாழ்கிறேன்- இளஞ்சோலை பூத்ததா ஒரு காலகட்டத்தில் எனக்கு இளையராஜா என்றாலே சற்று அலுப்பு ஏற்பட்டது. நியாயமாக சொல்லவேண்டுமென்றால் அந்த சமயத்தில் கூட என்னைக் கவர்ந்த ஒரு இளையராஜாவின் பாடல் எது என்று கேட்டல் பதிலாக வருவது இந்தப் பாடலே. கர்நாடக  சங்கீதத்தில் மூழ்கி எடுத்த முத்து. சிவகுமாரையும் நதியாவையும் நினைக்காமல்  இந்தப் பாடலைக் கேட்டால் அதன் அற்புதம் உங்கள் மனதைத் தொடும். நான் இளையராஜாவை வியந்த மற்றொரு பாடல்.  கண்ணா உனைத் தேடுகிறேன் வா நான்  அடிக்கடி குறிப்பிடும் என் நெருங்கிய நண்பன் பற்றிய செய்தி இதில் உண்டு. இந்தப் பாடலை அவன் அதிகமாக நேசித்தான். ரஜினி ரசிகனான அவன் பூவே பூச்சுடவா படத்திற்குப் பிறகு நதியாவின் தீவிர ரசிகனாகி விட்டான். இந்தப் பாடலைக் குறித்து," என் நதியாவே என்னைக் கூப்பிடுகிறாள்" என்று குதூகலிப்பான். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவன் பெயர் கண்ணன். இவனைப் பற்றி ஒரு முழு பதிவே எழுதக் கூடிய அளவுக்கு என் மனதையும் எண்ணங்களையும் பாதித்த என் நெஞ்சத்தில் ஆழ்ந்துவிட்ட என்னுடைய ஒரே நண்பன்.

விக்ரம் - வனிதாமணி வனமோகினி வந்தாடு சிலிர்க்கும் இசை. சிலர் இந்தப்  பாடலே தமிழில் வந்த முதல் ராப் பாடல் என்று சொல்கிறார்கள். எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை. அதே கண்கள் படத்தின் வேதாவின் இசையில் வந்த பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்த பாத்து பயந்தாளாம் என்ற பாடலில் கூட ராஜா ரசிகர்கள் பெருமைப்படும் இதே  ராப் அம்சங்கள் ஏகத்துக்கு உண்டு.  விக்ரம் விக்ரம் என்னை ஆச்சர்யப் படுத்தியப் பாடல். இந்தப் படம் வந்த 86இல் நான் பெட்ஷாப் பாய்ஸ், ஆஹா, என வேறு நடைபாதையில் சென்றுகொண்டிருந்தேன். சரியாக நினைவில்லாத ஒரு காலை நேரத்தில் திருச்சி ஜோசப் கல்லூரி பெல்லார்மின் ப்ளாக்கின் பின்னே உள்ள பர்மா பஜாரில் ஒரு பாடல் திடும் திடும் என துடித்தது.  அந்தத் தாளம் அதிரடியாக ஒலிக்க, சற்று என் செவிகளை அந்தப் பக்கம் திருப்பினேன். காதில் விழுந்தது தமிழ் வார்த்தைகள். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அது விக்ரம் என்ற புதிய கமல் படத்தின் விக்ரம் என்ற பாடல் என்பதை அறிந்தேன். இதில்தான் முதல் முதலில் எ ஆர் ரஹ்மான் இளையராஜாவுக்காக சிந்தசைசர் இசைத்தார் என்று ஒரு தகவல் உண்டு. இதை வைத்தே புன்னகை மன்னன் படத்தில் இந்த சிந்தசைசர் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல்கள் அமைக்கப்பட்டன என்று ஒரு நண்பர் தெரிவித்தார். இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. உண்மையில் இதன் பிறகு வந்த அந்த புன்னகை மன்னன் படப் பாடல்களைவிட இந்த விக்ரம் பாடல் வெகு நேர்த்தியானது. ஆனால் அதிகம் புகழ் வெளிச்சம் படாமல் அலட்சியப்படுத்தப்பட்ட பாடல். (பிறகு படத்தில் இல்லாத சிப்பிக்குள் ஒரு முத்து. நல்ல வேளை படத்தில் இல்லை. ஒருவேளை இருந்திருந்தால் கமல் தன் ட்ரேட் மார்க் ரொமாண்டிக் கோமாளித்தனத்துடன் செய்திருக்கக்கூடிய காட்சிகளை பார்ப்பதற்கே அதிக மன பலம் தேவைப்பட்டிருக்கும். )

ஆண் பாவம்-இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான், இந்தப் படத்தின் எந்தப் பாடலையும் நான் ரசித்ததே இல்லை. உபயோகித்து விட்டு நாம் தூக்கி எறியும்  பல பொருட்கள் போல  ஒரு முறை கேட்டுவிட்டு தாராளமாக மறந்துவிடக் கூடிய பாடல்கள். வெகு சாதாரண இசையமைப்பு. இதுவே போதும் என்று இளையராஜா எண்ணியிருப்பது போலவே தோன்றும்.

நட்பு- அதிகாலை சுபவேளை பத்தோடு பதினொன்று.

நானே ராஜா நானே மந்திரி- மயங்கினேன் சொல்லத் தயங்கினேன். வைதேகி காத்திருந்தாள் - காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி, தூங்காதே தம்பி தூங்காதே- நானாக நானில்லை தாயே இவை  அனைத்தும் வைரமுத்து எழுதிய பாடல்கள் அல்ல. வாலி இயற்றியது. எண்பதுகளில் தவிர்க்க முடியாத பாடல்களில் இவை அடக்கம். அதிலும் குறிப்பாக மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் பாடல் என்னை செயின்ட் ஜோசெப் கல்லூரி விடுதிக்கு அழைத்துச் சென்றுவிடும். அங்கு பரிமாறப்படும் மெகா சைஸ் சப்பாத்தியை நூறு துணுக்குகளாக பிய்த்துப் போட்டுவிட்டு அதன் மேலே ஊற்றப்பட வேண்டிய குருமாவுக்காக காத்திருக்கும் சமயங்களில் பெரும்பாலும் இந்தப் பாடல்தான் பின்னணியில் ஒலிக்கும். இன்று கூட இந்தப் பாடல் எனக்கு அந்த சப்பாத்தியின் சுவையை மீண்டும் உணர வைக்கத் தவறுவதில்லை.

நீதானா அந்தக் குயில்-  என் ஜீவன் பாடுது, பூஜைக்கேத்த பூவிது? இது கங்கை அமரன் எழுதிய பாடல் என்று எங்கோ படித்ததாக நினைவு. ஆனால் வைரமுத்துவிடமும் இதே விரசமான  பார்வை உண்டு.  எனவேதான் இந்த சந்தேகம்.

பூ விலங்கு - ஆத்தாடி பாவாட காத்தாட, என்ன ஒரு "காவியக்  கவிதை! " இந்தக் கண்றாவியை நான் முழுதாக கேட்டதேயில்லை என்பதை விட கேட்கவே விரும்பியதில்லை. இளையராஜா தமிழிசையை வேறு பக்கம் நகர்த்திக்கொண்டிருந்தார் என்பதன் அடையாளம். வைரமுத்து தன்  பங்குக்கு தன்னால் ஆன சேதாரத்தை ஒழுங்காக செய்தபடி இருந்தார்.

நான் பாடும் பாடல்- பாடவா உன் பாடலை இதில் ஜானகி பாடலை  என்பதில் உள்ள முதல் சிலபலை பா ஆ ஆ ஆ டலை  என்று நீட்டிப்பது கேட்க புதுமையாக இருக்கும்.  இது போன்ற extension of a  syllable மேற்கத்திய இசையின் மிக முக்கியமான அங்கம். சீர் கொண்டுவா வெண் மேகமே? மேகத்துனுக்கு போன்ற மிதக்கும் மெட்டமைப்பு. ரம்மியமான பாடல்.

பாரு பாரு பட்டணம் பாரு- யார் தூரிகை தந்த ஓவியம்? தென்றல் வரும் என்னை அழைக்கும்? இரண்டுமே அசாதாரண பாடல்கள்தான். நவீன சுழன்ற பாலங்களை விட ஒற்றையடிப் பாதைகள் சில சமயங்களில் நம் மனதை வென்றுவிடும். அப்படியான வெளியே அதிகம் தென்படாத இளையராஜாவின் அற்புதமான பாடல்களில் இவை அடங்கும்.

பூவே பூச்சுடவா- சின்னக் குயில் பாடும் பாட்டு, பூவே பூச்சுடவா, பட்டாச சுட்டுப் போடட்டுமா மகா வெற்றி கண்ட பாடல்கள். ஆனால் எனது பார்வையில் வழக்கமான தளத்தில் பயணித்த அலுப்பான சவாரி.

புன்னகை மன்னன்- இளையராஜா-வைரமுத்து  கூட்டணியின் இறுதிப்படம். என்ன சத்தம் இந்த நேரம் என்பதுபோல நீண்ட நாட்களாக புகைந்துகொண்டிருந்த திரி  ஒன்று சத்தமில்லாமல் வெடித்து இசை நண்பர்களை இரண்டாக உடைத்தது. ஆனால் பாடல்கள் மிகப் பெரிய வெற்றியைச் சுவைத்தன.  அனைத்துப் பாடல்களும் கொண்டாடப்பட்டன. இதில்தான் முதல் முறையாக கம்ப்யூட்டர் இசை என்ற புதிய வித்தையை இளையராஜா அரங்கேற்றினார். இந்த ஜிகினா அலங்காரம் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால்  பொதுவாக மேற்கத்திய  இசையின் ஒரு பரிமாணமான  சிந்தசைசர் வகைப்   பாடல்கள்   பரிச்சயம் கொண்டவர்கள் இந்த களேபகரத்தில் கலந்துகொள்ளவில்லை. சொல்லப்போனால் டும் டும் என்று தமிழுக்குத் தயாராகாத ஒரு ஓசை காதுகளை பாடாய்ப்படுத்தி எடுத்தது. தலைவலிக்கு உத்திரவாதமான தீம் மியூசிக் என்ற அவஸ்தையான இசையை முதல் முறை கேட்டபோது எனக்குத் தோன்றியது  "பனி விழும் மலர் வனம் என்ற அற்புதத்தை அளித்த இளையராஜாவா இது?".   படம் பற்றி எழும்பிய பிரமாண்டமான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத எங்கோ எதோ காணாமல் போனது போன்ற பிசிறடிக்கும்  இசையமைப்பு.  கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் நல்ல வார்த்தைகள் கொண்ட அடிதடி. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் தான் எழுதியதிலேயே மிகவும்  பிடித்த பாடல் என வைரமுத்து குறிப்பிடும் பாடல். டிபிக்கல் இளையராஜா எனலாம். காலம் காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்  புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது என்ற பழமொழியை ஞாபகப்படுத்தும் சராசரிப்   பாடல், இசை, குரல்கள், காட்சியமைப்பு என்ற ஒன்றில் கூட சற்றும் அழகுணர்ச்சி துளியளவும் தென்படாத கம்ப்யூட்டர் அபத்தம். ரசிக்க முடியாத வகையில் அதிக அலட்டலுடன் எஸ் பி பி பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று. சிங்களத்துச் சின்னக் குயிலே பல்லவிக்கும் சரணத்திற்கும் தொடர்பே இல்லாமல்  இரண்டும் முட்டிக்கொண்டு நிற்கும் வழக்கமான இளையராஜா பாடல். வான் மேகம் பூ பூவாய்  தூவும்  ஒரே மாதிரியான வார்ப்பில் வந்த ஏராளமான  இளையராஜாவின் பாடல்களை ஞாபகப்படுத்தும்.  இந்தக் கேட்க சகிக்காத இசையையெல்லாம்   மேற்கத்திய  பாணி என்று முத்திரை குத்தினால்  பராசக்தியின் ஓ ரசிக்கும் சீமானே பாடலை எங்கே வைப்பது? அல்லது சந்ரோதயத்தின் எங்கிருந்தோ ஆசைகள் பாடலை எப்படி வகைப்படுத்துவது? சாந்தியின் யார் அந்த நிலவு பாடலை என்னவென்று சொல்வது ? ஆனால் ஒரே ஒரு பாடல்  அத்தனை பாராட்டுகளையும் வாரிச் சென்றுவிட்டது. என்ன சத்தம் இந்த நேரம் இந்த கம்ப்யூட்டர் தூரிகைகள் கொண்டு வரையப்படாத அல்லது அந்த இயந்திர இரைச்சல்கள் இல்லாத ஒரு மௌனத்தின் இசை.

   வைரமுத்துவினால் இளையராஜா அதீத வெற்றிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டார் என்று எழுதுவது எனது நோக்கமல்ல. அது ஒரு குதர்க்கமான சிந்தனை. உண்மையில் இளையராஜா நூறு படங்களுக்கும் மேலாக இசை அமைத்து பல வணிக வெற்றிகளைப் பெற்று தமிழ்த் திரையிசையில் தன்னை அழுத்தமாக நிரூபித்த பிறகே வைரமுத்து இளையராஜாவுடன் இணைந்தார். இந்த நூறும் வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல. வரவேற்பு, அங்கீகாரம், பாராட்டு, வெற்றி என இளையராஜாவுக்குக் கிடைத்த மாபெரும் மகுடங்கள். அதேபோலே இந்த இருவரின் இணைப்பில் வந்த ஏறக்குறைய 100 படங்களுக்குப் பிறகு தோன்றிய வைரதுமுத்துவுடனான பிரிவுக்குப் பிறகும் இளையராஜா இன்னும் செங்குத்தான உயரங்களுக்குச் சென்றார். எனவே இளையராஜாவின் வணிகப் பாய்ச்சலுக்கு வைரமுத்துவை முன்னிறுத்துவது ஒரு தவறான முகவரி.  ஆனால் அதே நேரத்தில் வைரமுத்துவினால் இளையராஜாவின் பாடல்களுக்குக் கிடைத்த வசீகர வண்ணத்தை மறுப்பதிலும், அவரது தரமான கவிதையினால் இவரது பாடல்கள் பெற்ற வியப்பை அங்கீகரிக்காமல்  கண்களைச் சாய்த்துக் கொண்டு கடந்து செல்வதிலும் எனக்கு உடன்பாடில்லை.  

  இந்தப் பதிவில் நான் வைரமுத்து இளையராஜாவுக்காக இயற்றிய பாடல்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இது தவிர அவர் சங்கர் கணேஷ், எம் எஸ் வி, சந்திரபோஸ் சிவாஜிராஜா (ஒரே படம்) , ஹம்சலேகா, போன்றோருக்கு  எழுதிய பாடல்களை கணக்கில் கொள்ளவில்லை. 

   புன்னகை மன்னன் படத்திற்குப் பிறகு இந்த இருவரும் பிரிந்தார்கள்- மீண்டும் ஒன்றாக முடியாத அளவுக்கு அவர்களுக்கிடையேயான தூரம் அதிகரித்தது. பல காரணங்கள் இதற்கு சொல்லபடுகின்றன. கீழே இருப்பது ஒரு பதிவர் எழுதியிருப்பது. எதேச்சையாக காணக் கிடைத்தது. 


எந்த அளவு உண்மை என்பது எனக்கு இன்னமும் புரியவில்லை..!!!
இளையராஜா வைரமுத்து பிரிவுக்கு என்ன காரணம்?
என்று நிறைய நண்பர்கள் கேட்க நாங்கள் ஆராயந்ததில் எங்களுக்கு கிடைத்த சில தகவல் உங்களுக்காக. ஈகோ பிரச்சனையா? கொஞ்சம் அலசித்தான் பார்க்கலாமே!

இளையராஜாவின் இசையில் தொடர்ந்து பல பாடல்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு என பிஸியாக சென்று கொண்டிருந்த இந்த பயனத்தில் விரிசல் விழத்தொடங்கியது;

வைரமுத்து பிற இசையமைப்பாளர்களின் படங்களுக்கும் அதிகமாக எழுத்தொடங்கிய போதுதான். அதுவரை ஒலிப்பதிவின் போது சரியான நேரத்திற்கு வந்து தேவைப்பட்ட நேரத்தில் பாடல்வரிகளின் திருத்தத்திற்கு பெரும் உதவியாக இருந்த வைரமுத்துவால் சரியாக ஒலிப்பதிவிற்கு வரமுடியாமல் போனதால் உரசல் உண்டாகி அது நாளடைவில் ஒருவரை ஒருவர் சமயம் கிடைக்கும் போது தாக்கிக்கொள்ளும் அளவிற்கு பெரியதாகியது.

அடுத்ததாக பாடல் வரிகளில் இளையராஜா தலையிட்டு மாற்றச்சொல்வது; அந்த விரிசலை மேலும் பெரியதாக்கியது.

உதாரணமாக “சிந்து பைரவியில்” வைரமுத்து எழுதிய பல்லவியை மாற்றிவிட்டு கிராமிய பாடலில் இருந்து இளையராஜா எடுத்து போட்ட பல்லவிதான் “பாடறியேன் படிப்பறியேன்” என்ற பல்லவி. இந்த கிராமிய பாடலின் பல்லவியை “புதிய வார்ப்புகள்” படத்திலும் நீங்கள் கேட்கலாம்.

விரிசல் பெரிசாக பெரிசாக ஒருவர் பலவீனத்தை இன்னொருவர் இனம் கண்டு தாக்க அது மனஸ்தாபமாய் உருவெடுத்தது, உதாரணமாக வைரமுத்துவிற்கு எப்போதுமே ஒரு படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் தானே எழுதவேண்டும் (படத்தின் கேஸ்ட்/ரெக்கார்டில் போட்டோ, டைட்டில் கார்டு, போஸ்டர் விளம்பரத்தில் தனித்து தெரிவது) என்பது விருப்பமாய் இருக்கும். இதை அவரே பலமுறை தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் தாய்க்கொரு தாலாட்டு படத்திற்கு முழுப்பாடலையும் எழுத வைரமுத்து ஒப்பந்தமாகிறார் பாடல்கள் எல்லாம் ஒலிப்பதிவாகி படமாக்கப்பட்ட பின்னர்; ரீ-ரெக்கார்டிங்கின் போது மேலும் ஒரு பாடலை சேர்த்து அதை கவிஞர் வாலியை வைத்து எழுதச்சொல்லி; பாடல்கள் – வைரமுத்து என்ற டைட்டில் கார்டை பாடல்கள் – வாலி,வைரமுத்து (ஒரு பாட்டு எழுதினாலும் வாலி சீனியர் ஆச்சே வாலி பெயர்தானே முதலில் வரவேண்டும்) என்று மாற்றுகிறார் இளையராஜா. இளையராஜா இவ்வாறு நடந்து கொள்ள என்ன காரணம்? இந்த படத்தின் பாடல் கம்போஸிங்கின் போது “இளமைக்காலம் – என்ற புதியபறவை” பாடல் ரீமிக்ஸின் வரிகளில் “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று வரிகளில் வைரமுத்து வார்த்தை ஜாலம் புரிந்து இளையராஜாவை கோபப்படுத்தியதே காரணம்.

இதே போல்தான் சிந்துபைரவி டைட்டில் கார்டிலும் பிரச்சனை; “தென்றலது கண்டதுண்டு திங்களது கண்டதில்லை, மனம்தான் பார்வை” என்ற வாலி எழுதிய இரண்டு வரிகளுக்காக, வாலியின் பெயரை தியாகராஜசுவாமிகள், பாரதியார், ஆகியோருடன் சேர்த்து ஒரு டைட்டில் கார்டுடாகவும், பாடல்கள் – வைரமுத்து என்று வைரமுத்திற்கு தனி டைட்டில் கார்டு போட்டு பிரச்சனையை பாலச்சந்தர் சமாளித்திருப்பார்.

கடைசியாக இவை எல்லாம் சேர்ந்து ஒரு நாள் “இசை பாடும் தென்றல்” படப்பாடல் கம்போஸிங்கின் போது மோதலாக வெடித்தது. “எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது” பாடலுக்கு வரியை எழுதி வைரமுத்து இளையராஜாவிடம் காட்ட, “என்னய்யா பாட்டு எழுதச்சொன்னா, உரைநடை எழுதியிருக்க? இப்ப பாரு நான் எழுதுறேன்” என்று தான் எழுதிய பாடலை இளையராஜா வைரமுத்துவிடம் காண்பிக்க, வைரமுத்து “prose மாதிரி இருக்கு” என்று கூறிவிட்டு கோபமாக அந்த அறையில் இருந்து உடனடியாக வெளியேறிவிட்டார். அதன் பின்னர் எத்தனையோ போர் எவ்வளோவிதமாக சமாதானம் செய்தும் பலனேதும் இல்லை.

இப்போது கூறுங்கள் இளையராஜா வைரமுத்து பிரிவுக்கு என்ன காரணம்?


        ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்று வழக்கமாக சொல்லப்படுவதுபோல இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும்  இடையே உருவான ஆளுமை யுத்தம் அவர்களின் நிழல் நட்பை கொஞ்சம் கொஞ்சமாக தின்று தீர்த்தது. முடிவாக நண்பர்கள் என்று அறியப்பட்டவர்கள் இரு துருவங்களாக மீண்டும் இணைய முடியாத வெவ்வேறு தூரங்களை அடைந்தார்கள். ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரிவு என்ற புனைவு அதிக நாட்கள் நீடிக்கவில்லை. இளையராஜா தொடர்ந்து  தன் நீண்ட நாள் நண்பன் என்று சொல்லிக்கொள்ளும் பாரதிராஜாவுடனான நட்பையும் முறித்துக்கொண்டு தன் ஆளுமையின் அடுத்த பரிமாணத்திற்கு பயணித்தார். அதோடு நில்லாமல் கே பாலச்சந்தரின் நான்கு படங்களுக்கு இசை அமைத்த பின் அவருடைய மகா ஆளுமை விழித்துக்கொள்ள அங்கேயும் வெடித்தது இதே யுத்தம்.  இளையராஜாவின் அபிமான இயக்குனர்கள் என்றறியப்பட்ட பாலு மகேந்திரா, மணி ரத்னம் இருவரும் மட்டுமே இந்த ஈகோ அலையில் மாட்டிக் கொள்ளாதிருந்தார்கள். அதுவும் தளபதிக்குப் பிறகு இளையராஜா- மணி ரத்னம் ஒரு கடந்து போன நிகழ்வானது. அதன் பின் ஏற்பட்டது மணிரத்னம்- எ ஆர் ரஹ்மான் என்ற வரலாறு. 

    இப்போது இளையராஜா முட்டி மோதிக்கொண்டு பிரிந்து சென்ற கவிஞர், இயக்குனர்கள் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் அவரது ரசிகர்கள் தங்கள் குற்ற விரல்களை நீட்டுவது வைரமுத்து, பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம் இருக்கும் திசையை நோக்கியே. இது அவர்களுக்கு மிகச் சுலபமாக வாய்த்திருக்கும் சப்பைக்கட்டு.  இவரிடம் முறைத்துக்கொண்டு அவர்கள் சென்றதாகவும், இவருக்கு அவர்கள் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாகவும் வித விதமாக தங்கள் அபிமானவரை பாதுகாக்கும் பணியைச் செய்கிறார்கள். அதில் தென்படும்  பதற்றமே அவர்களின் கையறு நிலையின் உச்சமான சான்று. ஒரு வாதத்திற்காக மேலே குறிப்பிட்ட அனைவரும் இளையராஜாவுக்கு எதிராக சதி செய்து, நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள் என்று வைத்துகொண்டால் சில அடிப்படையான கேள்விகளுக்கு இதே ராஜா ரசிகர்கள் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் மாட்டிக்கொள்கிறார்கள். 

     தான் அறிமுகம் செய்த அபாரமான இசைஞரான வி குமாரை கை விட்டு  எம் எஸ் வி என தாவி, பற்பல சாகா வரம் பெற்ற கானங்களை அவரின் விரலசைவினில் பெற்றுக்கொண்டு   பிறகு அவரையும் துறந்து  கே பாலச்சந்தர் சிந்து பைரவிக்காக இளையராஜா வீட்டுக் கதவைத் தட்டியபோதும், தன் படங்களுக்கு எத்தனை காவியமான பாடல்களை அளித்திருந்தாலும், வணிக வெற்றியின் பால் ஈர்கப்பட்டு ஒரு பலவீனமான கட்டத்தில் இயக்குனர் ஸ்ரீதர் இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்காக இளையராஜாவை அணுகிய போதும், கே வி மகாதேவன் மட்டுமே இசை அமைத்து வந்த தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான இசைஞராக அவருக்குப் பின் மாறிய ஷங்கர் கணேஷை ஒதுக்கி விட்டு அன்னை ஓர் ஆலயம் படத்திற்காக தேவர் பிலிம்ஸார் இளையராஜாவிடம் ஒதுங்கியபோதும், கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன் என்று வரிசை கட்டி வந்த படங்களைத் தந்த தமிழின் தொன்மையான ஏ வி எம் நிறுவனம் எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு 80இல் தயாரித்த முரட்டுக்காளை படத்திற்கு இளையராஜாவை ஒப்பந்தம் செய்தபோதும்  இதே நம்பிக்கை துரோகம் என்ற சொல் எந்த நிலத்தின் கீழே ஒரு விதையாக உறங்கிக்கொண்டிருந்தது என்று தெரியவில்லை.

    இளையராஜாவின் இசை அவர்களை தன் பால் ஈர்த்தது என்றொரு அபத்தமான காரணம் கொண்டு இந்த "மேன்மையான நம்பிக்கை துரோகங்களை" புதைத்து விட்டால், அதே காரணம்  இளையராஜாவை விட்டு பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் விலகிச் சென்றதையும் நியாயப்படுத்தும்.  ஆனால் இந்த சுடும் நிஜத்தை ஏற்றுக்கொள்வதில் மட்டும் சில கடினமான ரசிக நெஞ்சங்கள் வறட்டுப்  பிடிவாதம் காட்டுகின்றன. அந்தந்த காலகட்டத்தின்  முரட்டு அலைகளில் கலங்காமல் பயணம் செய்த இசைப்படகுகளின் மாலுமிகளை   வணிக நோக்கத்திற்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நாடிச் செல்வது இயல்பான ஒன்று. இதில் ஒருவருக்கு நடந்ததை மட்டும் வினோத  புலனாய்வு செய்து, புனைவுகளைக் கலந்து  சதிச் சுவர்கள் எழுப்புவது உண்மைகளை உள்வாங்கிக் கொள்ள முடியாத இயலாமைதான். வேறென்ன சொல்வது?  ஆனால் உண்மை பல மாளிகைகளை எழுப்பியதுபோலவே அவற்றை சாய்த்துவிட்டு தன் பாதையில் அடுத்தடுத்த அஸ்திவாரங்களை அமைத்துச் சென்று கொண்டிருக்கிறது. சில வீடுகள், சில கட்டிடங்கள், சில மாளிகைகள், சில கோயில்கள் என காலம் அவற்றை வடிவமைக்கிறது. 

    80கள் தமிழிசையின் பொற்காலம் என்ற வேடிக்கையான  பொய்யைப் போன்று சிலரின் பார்வைகளில் எப்போதும்  இளையராஜா ஒருவரே  தென்படுகிறார்.  அதில் தவறேதுமில்லை. ஆனால் அவர்கள் தாங்கள் காணும் காட்சியை  மற்றவர்களுக்கும் ஒரு கோட்பாடாக நிறுவுவதில்தான் கோளாறுகள் உள்ளன. பரிதாபத்திற்குரிய பார்வை. எல்லோருக்கும் ஒரே இலக்குத்தான் குறிக்கோளாக இருக்கவேண்டுமா?

    எல்லா மரங்களும் ஒரே அளவில் ஒரே வடிவில் ஒரே நிறத்தில் ஒரே உயரத்தில் ஒரே பூக்களோடு ஒரே நறுமணத்துடன் இருந்தால் அது காடு இல்லை. இசையின் முகமே இவர்தான் என்று ஒரே ஒருவரை சுட்டிக்காட்டினால் அது உண்மையல்ல. எல்லாமே இளையராஜாவாக இருக்கவேண்டிய அந்த  மாயக் கண்ணாடிகள் ஆலிஸ் விழுந்த முயல் துளையின் கனவுலகில் மட்டுமே சாத்தியம்.









         


  அடுத்து : இசை விரும்பிகள் Exclusive 2 ​ நிசப்தமான நிஜங்கள் .
   
          







Wednesday, 15 July 2015

காலத்தை வென்ற இசை

இது ஒரு மீள் பதிவு.

   





     இசை விரும்பிகள் -  காலத்தை வென்ற இசை 



        24 காரட் சுத்தத்  தங்கத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்? அதை தூரத்திலோ அருகிலோ  வைத்துக்கொண்டு உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம். ஆனால் அது கழுத்திலோ,காதிலோ, மூக்கிலோ பளபளப்பாக வந்து அமர  சில நகாசு வேலைகள் அவசியப்படுகின்றன. தங்கத்தோடு கொஞ்சம் செம்பு வெள்ளி என்று கலந்தால்தான் அதன் நோக்கம் பூர்த்தி அடைகிறது. இப்படி உருமாறிய 22 காரட் தங்கமே நமது மெல்லிசை. இந்த மெல்லிசை இங்கே வந்த  பிறகுதான் ராகங்கள் மாறின. தமிழிசையின் எல்லைகள் விரிவடைய ஆரம்பித்தன. பலர் இதைப்  பற்றிய புரிதல் எதுவுமின்றி தனக்குப் பிடித்த இசைஞரின் பாடல்களை முன்னிறுத்தி தமிழ்த் திரையிசை இவரிடமிருந்துதான் புறப்பட்டது என்று முரட்டுத்தனமாக நம்புவதோடல்லாமல் மற்றவர்களையும் அப்படி நம்பத் தூண்டுவதால்தான் இங்கே  மெல்லிசையைப் பற்றி அதிகம் பேச வேண்டியதாக இருக்கிறது.

     தமிழ்த் திரையில்  மெல்லிசையை கொண்டுவந்தவர்கள் பொதுவாக எல்லோரும்  நினைப்பதைப் போல விஸ்வநாதன்-ராமமூர்த்தி அல்ல. பல இசைஞர்கள் ஆண்டுகாலமாக புதிய மெட்டுக்களையும் புதிய இசை அமைப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே நிறுவினார்கள் என்பதே உண்மை.இழை இழையாக நெய்யப்பட்ட ஒரு தரமான துணியைப் போல மேற்கத்திய இசை, மேற்கத்திய செவ்வியல் இசை மற்றும் நம் நாட்டுப்புற இசை போன்ற புதிய இழைகளைக் கொண்டு ஒரு நவீன இசைவடிவமாக இந்தப் புதிய இசை அமைப்பு உருவாக்கப்பட்டது.   இதில் பலரின் பங்களிப்பு இருந்தாலும்  மெல்லிசையை தமிழ்த் திரையின் மிகப் பிரபலமான இசையாக உருமாற்றியதன் பெருமை தமிழ்த்  திரையின் உன்னதமான இரட்டை இசைஞர்களான விஸ்வநாதன்- ராமமூர்த்தி அவர்களுக்கே உரியது.

  

    ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்து அதிகம் பேசப்படுபவர் அல்லது ஒரு சாதாரணனுக்கு உடனடியாக  நினைவுக்கு வருபவர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த். அதற்கு காரணம் இருக்கிறது.  அவரும் அவரது நண்பர் சாம்வெல் கோல்ரிட்ஜ்ஜும் இணைந்து ஆங்கில இலக்கியத்தில் ரொமாண்டிக் மூவ்மெண்ட் என்று சொல்லப்படும் ஆங்கில கவிதை உலகை வேறு வட்டத்தில் சுழற்றிய  ஒரு இயக்கத்தை தோற்றுவித்தார்கள். அதற்கு முன் ஆங்கிலக்  கவிதைகள்  கடவுளையும்,  மகான்களையும் சரித்திர நாயகர்களையும், ஐரோப்பிய புராண மாந்தர்களையும் தன் கருப்பொருளாகக் கொண்டு  படித்த மேல்தட்டு "நாகரிக" அடையாளம் கொண்டிருந்த அரச, மற்றும் பிரபு குலத்துக்கே எழுதப்பட்டு வந்தன.கவிதை ஒரு அறிவாளியின் தேர்வு என்றும் அதை புரிந்து கொள்ள ஒரு பாமரன் தன் அறிவை  வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறியீடாக உணர்த்தப்பட்டு அவனைத் தொடாமல் செல்லும் ஒரு மாயக் காற்று போலவே  அது  செயல்பட்டது.
    
     இந்நிலையில்தான் வோர்ட்ஸ்வொர்த் ஒரு வெற்றுக் காகிதத்தில் தான் உணர்ந்த சில ரம்மியமான உணர்வுகளை கவிதையாகப்  புனைய  தன் பேனாவில் இயற்கையை நிரப்பிக் கொண்டு உட்காருகிறார். அவர் கவிதையின் கரு ஒரு சிறிய மலரை, சுழன்று வீசும் காற்றை, பனி படர்ந்த மலைகளை, ஒய்யாரமாகப் பாடும்  பறவைகளைச்   சுற்றியே இருந்தது. இந்த எளிமையான கவிதைப்போக்கு அவருக்கு முன் யாருக்கும் பொறி தட்டவில்லை. எளிமையும் ரம்மியமும் எல்லோரும் புரிந்துக் கொள்ளக்கூடிய வார்த்தைகளும் கொண்ட அவரது  கவிதைகள்  அவரை ஆங்கில இலக்கியத்தில் அதுவரை இல்லாத ஒரு புதிய சிம்மாசனத்தில் அமர்த்தியது. அவரைப் பின்பற்றியே அதன் பின் வந்த மற்ற கவிஞர்கள் இயற்கையை முன் நிறுத்தி தங்கள் கவிதைகளைப் புனைந்தனர்.வோர்ட்ஸ்வொர்த் மற்றும் கோல்ரிஜ் இருவரின் இந்த சம்பிராதய உடைப்பு எனக்கு விஸ்வநாதன்  ராமமூர்த்தி  இரட்டையர்களை ஞாபகப்படுத்துகிறது. இவர்கள் வேறு வேறு காலங்களில், வேறு வேறு மக்களிடையே, வேறு வேறு படைப்புக்களில்  செயல்பட்டாலும் அவர்களின் கலைகள் வேறுபட்டாலும்  அவர்கள் செய்தது ஒன்றேதான்.  ஒரு கசப்பான மாத்திரையை உடைத்து தேனில் கரைத்துக் கொடுக்கும் யுக்தியையே அவர்கள் செய்தார்கள்.

     முன்பு வானொலியில் முக்கியமான நிகழ்சிகளுக்கு இடைப்பட்ட ஒரு குறுகிய நேரத்தை " இப்போது மெல்லிசை கேட்கலாம்" என்று சொல்லி நிரப்புவார்கள்.இது பொதுவாக ஐந்து முதல் பத்து நிமிடங்கள் நீடிக்கும்.இரண்டு மூன்று இசைக் கருவிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட அவ்விதமான இசை  என் மனதில் மெல்லிசை என்பது சினிமா இசைக்கு முரணானது என்ற எண்ணத்தை விதைத்தது. இந்த எண்ணமே  மெல்லிசை மன்னர்கள் என்று அழைக்கப்படும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பாடல்களில் ஈடுபாடு காட்டமுடியாமல் செய்து அவற்றை புறக்கணிக்கவும் தூண்டியது.சினிமா இசை, மெல்லிசை என்று எனக்கு நானே இரண்டு கோடுகளைப் போட்டுக் கொண்டு முன்னதையே விரும்பினேன். ஒரு தவறான புரிதல் எப்படி வேறு முடிவுகளுக்கு நம்மை இட்டுச் செல்கிறது என்ற வருத்தம் பின்னர் எனக்கு ஏற்பட்டது.

     ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக தமிழ்த் திரையிசையை வெற்றிகரமாக முன் நடத்திச் சென்ற  விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்  (வி-ரா)இசைத் துவக்கம் ஒரு விபத்து போலவே நிகழ்ந்தது. சி ஆர் சுப்புராமன் 52இல் மரணித்த போது அவருடைய உதவியாளர்களாக இருந்த  இவர்கள்  இருவரும் தடைபட்ட அவரது  இசைப் பணிகளை  தொடர்ந்து செய்து  முழுமையாக்கினார்கள். இந்தப் புதிய உறவு இருவரிடமும் நீடிக்க என் எஸ் கிருஷ்ணன் முக்கிய காரணமாக இருந்தார். அவரே இந்த இரட்டையர்களை சேர்ந்து பணியாற்றும்படி வற்புறுத்தி தன் படத்திலேயே அவர்களை முதன் முதலாக இசைஞர்களாக அறிமுகப்படுத்தினார். 52 இல் பணம் என்ற படத்தில் இவர்கள்  தங்களது திரையிசையை  துவங்கினார்கள் .(எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்? என்ற என் எஸ் கிருஷ்ணனின்  பாட்டு இதில்தான் உள்ளது.)

        50 களில் ஜி ராமனாதனின் ஆளுமை உச்சத்தில்  இருந்தது. இதே சமயத்தில்தான் திரையிசைத் திலகம் என்று அழைக்கப்படும்   கே வீ மகாதேவனும் இங்கே இசைப் பிரவாகம்  செய்து கொண்டிருந்தார். இவற்றுக்கிடையில் ஹிந்துஸ்தானி இசையின் பாதிப்பும் தமிழ்த் திரையிசையை    கட்டிப்போட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் வி-ரா  தங்கள் இசையை நிரூபிக்க முயன்றார்கள். சொல்லப்போனால் ஹிந்தி இசையின் பாதிப்பை மீறி அப்போது பாடல்கள் அமைப்பது ஒரு சவாலான காரியம். ஏனென்றால் படத் தயாரிப்பாளர்களும் ஏற்கனவே பிரபலமாக இருந்த ஹிந்தி இசையையே தமிழில் கொண்டுவர பெரிதும் விரும்பினார்கள். அந்தக் காலத்தின் புகழ் பெற்ற பல ஹிந்திப் பாடல்களை தமிழில் உருமாற்றி ஹிந்துஸ்தானி மெட்டில் தமிழ் வார்த்தைகளைப்  பிணைத்து  பாடல்கள் அமைப்பது அப்போது ஒரு சம்பிரதாயமாகவே இருந்து வந்தது. இந்தக் கட்டுகள் தளர  பல புதிய முயற்சிகள் தேவைப்பட்டன.

   கர்நாடக சங்கீதத்தில்  புலமை பெற்ற டி கே ராமமூர்த்தி அடிப்படையில் ஒரு வயலின் வித்வானாக இருந்தாலும், அவருக்கு மேற்கத்திய செவ்வியல் இசையில் மிகுந்த ஈடுபாடு இருந்தது.  விளைவு கர்நாடக ராகங்களும் மேற்கத்திய செவ்வியல் இசையும் பாலும் தேனும் போல கலந்தன. தமிழில் முன்னரே மேற்கத்திய செவ்வியல் இசையின் பாதிப்பும் நவீன மேற்கத்திய இசையின் தொடுதலும் இருந்தாலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவற்றை தங்கள்  பாடலில் சரியான அளவில்  கலந்து  அதேசமயம் நம் nativity அதனால் சற்றும் திரிந்து விடாமல் இந்தப் புதிய  கலப்பிசையை  (fusion)அவர்களின் முத்திரை இசையாக மாற்றிக்காட்டினார்கள். கர்நாடக ராகங்கள் என்னும் சுவற்றின் மீது தங்கள்  மெல்லிசையை மேற்கத்திய இசையின் தீற்றலோடும்  எளிமையும் புதுமையுமான மெட்டுக்களோடும் இழைத்துத்   தங்கள் இசை வண்ணத்தைத்  தீட்டினார்கள். இந்த இசையோவியங்கள்  அறுபதுகள் முழுவதும் அனாசயமாக ஆட்சி செய்தன. இப்படிப்பட்ட இசைப் பரிசோதனைகள் அப்போதே செய்யப்பட்டதாலேயேதான்  அதன் பின் வந்த பல இளம் இசைஞர்களுக்கு பின்னர்  விசாலமான  பாதை கிடைத்தது. அவர்களால்  பெரிய சிரமங்களின்றி பாடல்களும்  அமைக்க முடிந்தது.  இந்த உண்மை தெரியாத பலர் இணையத்தில் உளறிக்கொட்டுவதை படிக்க நேரிடும் போது அசதியாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது..உண்மை   இதுதான் என்று அவர்களுக்கு எழுதினாலும் அவர்கள் அதை வசதியாக தவிர்த்துவிடுகிறார்கள்.

       இதன் தொடர்ச்சியாக  இணையத்தில் உலாவரும் சில தவறான புரிதல்களை நான் நினைத்துப் பார்க்கிறேன்.  அவற்றில் ஒன்று  தமிழில் முன்னிசை(prelude), இடையிசை(interlude) இரண்டும் இளையராஜாவுக்குப்  பிறகே ஏற்பட்டது என்பது.இது ஒரு மகா அபத்தமான சிந்தனை என்பதைத் தாண்டி   எப்படி ஒரு தீவிர இசை ரசனை சில உண்மைகளை மறுக்கிறது என்ற கருத்தை  படிப்பவர்களுக்கு உணர்த்தவே  இதை எழுதுகிறேன். இது போன்ற இன்னும் பல போதையேறிய  கருத்துக்கள் உண்மையான இசைத் தேடலை என்னுள் வலிமையாக்கின.அதன்  விளைவாகவே இந்த இசை விரும்பிகள் என்னும் நீண்ட பதிவை ஆரம்பித்தேன்.

          52 இல் துவங்கி 50 களின் இறுதியில் அதி  வேகம் பிடித்து,  புதிய சாலைகளில் 65 ஆம் ஆண்டு வரை பயணித்த  இந்த இரட்டையர்களின் இசைப் பாய்ச்சல் படத்திற்கு படம் மெருகேறி புதிய   எல்லைகளை தமிழ்த்திரையிசைக்கு அறிமுகம் செய்தது.  மெல்லிசையை ஒரு இனிய இசை அனுபவமாக இவர்களின் பாடல்கள் மாற்றின. இசையின் ரசனையை இந்த இரட்டையர்கள் அடுத்தடுத்த  கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்கள். 

    குறிப்பாக அறுபதுகளில் வந்த அவர்களின் ஒவ்வொரு பாடலும் வீரத்தை வீரியமாகச் சொல்லும் தன்னம்பிக்கை தரும் தாளங்களாக,  தாய் மொழியைப் போற்றும் தமிழின் தங்கக்குரலாக, பண்பாட்டை வீண் பெருமைகளின்றி பாடும் பண்பட்ட பாட்டாக,குழந்தைகளுக்கு இசையோடும்  தாலாட்டாக, உறவைப் போற்றும் மக்களின் உன்னத  உணர்ச்சியாக ,காதலை அதன் எல்லைகள் தாண்டாது நளினமாகச் சொல்லும் காதலர்களின் கீதமாக, வாழ்க்கையை வாழ்ந்துவிட்ட மனிதர்களின்  தத்துவ கானமாக, வீழ்ந்த  நெஞ்சங்களின் வேதனையை வெளிப்படுத்தும் துயர இசையாக,  தம்பதிகளின் ஆத்மார்த்தமான அன்பை விரசங்களிலாமல்  பண்பாகப் பாடும் பாடல்களாக, எதிர்பாலினரை விகாரங்களின்றி பகடி செய்யும் துள்ளல் இசையாக,இளைஞர்களின் குதூகலத்தை குறைவின்றி கொடுக்கும் கும்மாளப் பாடல்களாக,  பிரிவைச் சொல்லும் மனைதை பிழியும் சோக ராகங்களாக, காதல் தோல்வியை போதையின்றி நாகரீகமாக உணர்த்தும் நல்லிசையாக, காதல் கைக்கூடிய காதலர்களின் உணர்ச்சியை காமமில்லாமல் காட்சிப்படுத்தும்  களிப்பான கானமாக ஒலித்தன.

     மேற்குறிப்பிட்ட பத்தியோடு கீழே உள்ள பாடல்களை பொருத்திப்பாருங்கள்.இது உங்களுக்கே புரியும்.
    
    அச்சம் என்பது மடமையடா- மன்னாதி மன்னன்,60
தமிழுக்கும் அமுதென்று பேர்- பஞ்சவர்ணக்கிளி,65(இது எம் எஸ் வி தனியாக இசை அமைத்தது)
    கண் போன போக்கிலே கால் போகலாமா?- பணம் படைத்தவன்,65
   அத்தையடி மெத்தையடி- கற்பகம்,63
   மலர்ந்தும் மலராத பாதி மலர் போல - பாசமலர்,61
   அனுபவம் புதுமை  அவனிடம் கண்டேன் - காதலிக்க நேரமில்லை,64
   சட்டி சுட்டதடா கை விட்டதடா - ஆலயமணி,62
   மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா - சுமை தாங்கி,62
   வளர்ந்த கலை மறந்துவிட்டாள்-காத்திருந்த கண்கள், 62
 ஆஹா மெல்ல நடமெல்ல நட மேனி என்னாகும்  புதிய பறவை,64,
  ஏய் நாடோடி- அன்பே வா,66     (இசை-எம் எஸ் வி)
   ஆண்டவன் படச்சான் என்கிட்டே கொடுத்தான் - நிச்சய தாம்பூலம்,61
   நினைக்கத் தெரிந்த மனமே- ஆனந்த ஜோதி, 63
   எங்கிருந்தாலும்  வாழ்க- நெஞ்சில் ஓர் ஆலயம், 62
   கொடியசைந்ததும் காற்று வந்ததா- பாரத்தால் பசி தீரும்,62

   இதே போல ஒரு பட்டியலை இவர்களுக்கு பின் வந்த இசைஞர்களின் பெயருக்கு கீழேயும் தயாரிக்கலாம். ஆனால் அவற்றில் எத்தனை கண்ணியமான, தரமான பாடல்கள் என்பது கேள்விக்குரியது. மேலும் அது போன்ற ஒரு ஒப்புமை இவர்களுக்கு நாம் செய்யும் அநீதி என்று நான் கருதுகிறேன்.

      அறுபதுகளில் எப்படி நமது மக்கள் இசையை ரசித்தார்கள் என்பது ஆய்வுக்குரியது. அப்போது ரெகார்ட் பிளேயர் என்று சொல்லப்படும் இசைத் தட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. ஆனால் வெகு சிலரே அதை தங்கள் வீடுகளில் வைத்திருந்தார்கள். வானொலியே பெரிதும் எல்லோரிடமும் இருந்தது. இந்த வானொலியே இசையை எல்லோரிடத்தும் கொண்டு சேர்த்தது. வானொலியில் சினிமாப் பாடல்கள் தற்போதைய எப் எம்  போலில்லாமல் குறிப்பிட்ட கால அளவிலேயே ஒலிபரப்பு செய்யப்பட்டன. கதைப் புத்தகம், வானொலி இசை இது  இரண்டும்தான்  அப்போது பெரும்பான்மையான மக்களிடம் இருந்த பொழுதுபோக்குகள்.பாடல்களை பாக்கெட்டுக்குள் வசதியாக வைத்துக்கொள்ளும் தொழில்நுட்பம் எவரின் கற்பனையிலும் கூட உதிக்காத அந்தச் சூழலில் ஒரு ரசிகனின் ஆவலை சற்று எண்ணிப்பாருங்கள். பலநாட்கள் காத்திருந்து பின் திடீரென வானொலியில் தனக்கு பிடித்த பாடல் ஒலிக்கும் போது அந்த ரசிகன் அடைந்த ஆனந்தம் அளவில்லாதது. திரையிசைப் பாடல்கள் வெறும் மூன்று நான்கு நிமிட கால நகர்ப்பாக (time pass) இல்லாமல் அவை வாழ்க்கையின் ஒரு கூறாகவே   இருந்தன. அவ்விசை அவர்களின் மூச்சில் சுவாசமாக கைகளில் உணவாக  இருந்து அவர்களை வழிநடத்தியது.அவர்கள் அந்தப் பாடல்களில் தங்கள் வாழ்கையின் ருசியையும், வலியையும் ஒரு சேர அனுபவித்தார்கள்.வெறும் விடலைப் பையன்கள் மட்டும் கேட்கும் இசையாக இல்லாமல் ஒரு பொது ரசனைக்கான அழகியலாக எல்லோரும் காதலிக்கும் கலையாக  அவை  ஆட்சி செலுத்தின.  எனவேதான் அப்பாடல்கள் கண்ணியமாகவும்,தரமாகவும், பண்பாகவும் இருந்தன.

    மேலும்  காமத்துக்கான சூழல் இருந்தாலும் விரக தாப முனங்கல்கள் இல்லாமல் மிகவும் கவித்துவமாக பாடல்களை அவர்கள் அமைத்தார்கள். உதாரணத்திற்க்கு " அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்"(பாவமன்னிப்பு ,61) என்ற பாடலை ஆராய்வோம். ஒரு முறை என் நண்பன் ஒருவன் அந்த காலத்துப் பாடல்களிலேயே விரசம் இருப்பதாக் கூறி இந்தப் பாடலை குறிப்பிட்டான்.அப்போதைக்கு நானும் அதை வழி மொழிந்தேன். ஆனால் உண்மையில் இது காமத்தை விரசமின்றி உணர்த்தும் ஒரு எழில் கொண்ட பாடல். சுசீலாவின் குரலில் ததும்பும் மிச்சமிருக்கும் இச்சை இங்கே கேட்பவரை எவ்விதத்திலும் முகம்  சுளிக்க வைப்பதில்லை. "அவர் என்னைத்தான்".. என்று குரலை நீட்டிப்பதிலும் பின் வரும் ஒரு நொடி நிசப்ததிலும் அதன் பின் தொடரும் "எப்படிச் சொல்வேனடி" என்ற வெட்க மறுத்தலிலும்  தெரிவது ஒரு பெண்ணின்  இனிமையான உணர்ச்சியே அன்றி காமம் இல்லை. இந்தத் தரம் இவர்களின் அடுத்த தலைமுறை இசையில் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கிப் போனதையும் இங்கே நான் நினைவூட்ட விரும்புகிறேன்.காமத்தை வைத்து இதயத்தை வருடும் இசையாக இல்லாமல் இச்சையை தூண்டும் இசையாகவே பின் வந்தவர்களின் பாடல்கள் அமைந்தன.இளையராஜாவின் பிரபலமான "நிலா காயுது"(சகலகலாவல்லவன்,82) இதற்கு மிகச் சரியான உதாரணம்.

       எந்த நதியும் ஒரு இடத்தில் மிக அகலமாக விரிவடைந்து செல்வதைப் போல, எந்த மழையும் ஒரு இடத்தில் அதிகமாகப் பொழிவதைப்போல, எந்த மலையும் ஓரிடத்தில் உயரமாக இருப்பது போல,எந்த விளக்கும் ஒரு சமயத்தில் மிகப் பிரகாசமாக எரிவதைப் போல, எந்தக் கலைஞனுக்கும் ஒரு உயர்ந்த காவியம்   அமைவதைப்போல தமிழ்த் திரையிசையும்  அதன் உச்சத்தைத் எட்டியது.அந்த உச்சம்  நிகழ்ந்தது இந்த அறுபதுகளில்தான்.இசை விமர்சகர்கள் முதல் ஒரு சாதாரன   ரசிகன் வரை இன்றைக்கும் தமிழ்த் திரையிசையின் பொற்காலம் என்று  வர்ணிப்பதும் சுட்டிக்காட்டுவதும்  கே வி மகாதேவன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன்,டி எம் எஸ், சுசீலா,எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் போன்ற கூட்டணி திரையில் ஆட்சி செய்த இந்த அறுபதுகளைத்தான். It's a very profound statement of truth. இதை மறுப்பதற்கு மனசாட்சியை சற்று மறந்துவிட வேண்டும்.

        வி-ரா தமிழில் கூட்டிசையை(chorus) வெற்றிகரமாக பயன்படுத்தியவர்கள் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். இதுவும் மேற்கத்திய பாணி இசைதான். பொதுவாக இவர்கள் பாடலின் இடையே வரும் இடையிசையில் (interlude) இவ்விதமான கூட்டிசையை அறிமுகப்படுத்தினர். இதற்கு உதாரணமாகப் பல பாடல்களை சுட்டிக்காட்ட முடிந்தாலும் இரண்டு பாடல்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது  பணம் படைத்தவன்(65) என்ற படத்தில் வரும் "கண் போன போக்கிலே" என்ற பாடல். மேற்கத்திய இசையின் நிழல் அந்தப் பாடல் முழுவதும் படிந்திருந்தாலும், மெல்லிசையை விட்டு அது கொஞ்சமும் மீறிச் செல்லாமல், இரண்டும்  ஒன்றோடொன்று சுகமாக கை கோர்த்துச்  செல்வதை உணரலாம்.இரண்டாவது புதிய பறவை படத்தில் வரும்  "பார்த்த ஞாபகம் இல்லையோ?" பாடல்.இந்தப் பாடலின் மிகப் பெரிய பலமே ஆரம்பத்திலும் இடையிலும்  வரும் கூட்டிசைதான்.

 










இதைத்  தாண்டி இடையிசையை பிரபலமாகிய பெருமையும் இவர்களுக்குண்டு.  இடையிசை  இவர்களின் பாடல்களில் அன்னியமாக ஒலிக்காமல் பாடலின் வேகத்தையும்  நளினத்தையும் குலைத்து விடாமல் பாடலின் போக்குடனே சென்று சரணத்தோடு இணையும்.இந்த இடையிசை இளையராஜாவின் காலத்தில் உச்சத்திற்கு சென்று தற்போது காணாமலே போய்விட்டது.

           இதைத் தவிர இவர்களின் பாடல்களில் வரும் ஹம்மிங் சிறப்பு பெற்றது.நெஞ்சம்  மறப்பதில்லை பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் அந்த பிரபலமான  ஹம்மிங் கேட்பவரை ஒரு இசை அனுபவத்திற்கு தயார் செய்துவிடுகிறது. இந்த கோரஸ் மற்றும் ஹம்மிங் ஒரு மேற்கத்திய இசை அமைப்பாக இருந்தாலும் அவற்றை இவர்கள் மெல்லிசையோடு துல்லியமாகக் கலந்து நம் இசைக்கு  இன்னொரு  பரிமாணம் சேர்த்தார்கள்.

    மேலும் விஸ்வநாதன் பாடல்களுக்குள்ளே இனிமையாக மெட்டுக்களை  மாற்றுவதில் கை தேர்ந்தவராக இருந்தார். புதிய பறவை(64) யின் மிகச் சிறப்பான பாடலான "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து" என்ற பாடலில் சுசீலாவின் குரல் தொட்டுச் செல்லும் பல  ஏற்றங்களும் இறக்கங்களும் கேட்பவரின் மனதில் அந்தப் பாடலை உறையச் செய்துவிடுகிறது. பாடியவர் இதைச்  செய்தாரா அல்லது இசை அமைத்தவர் அப்படிச் செய்யப் பணித்தாரா என்பதை நான் எப்போதும் எனக்குள்ளே கேட்டுக்கொள்வதுண்டு.

       61 ஆம் ஆண்டு இவர்களின் இசைக்கு ஒரு மிக முக்கியமான வருடம். அந்த வருடத்தில் வந்த இவர்களின்  படங்களைப் பாருங்கள்.
பாக்கியலக்ஷ்மி- மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நிச்சய தாம்பூலம்- பாவாடை தாவணியில் பார்த்த உருவமா,
படைத்தானே மனிதனை ஆண்டவன் படைதானே 
பாலும் பழமும்,-ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் ,
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் , 
காதல் சிறகை,
போனால் போகட்டும் போடா
பாசமலர்,- எங்களுக்கும் காலம் வரும், 
மலர்களைப் போல் தங்கை, 
மலர்ந்தும் மலராத,
யார் யார் யார் அவர் யாரோ, 
வாராயென் தோழி
பாவமன்னிப்பு- எல்லோரும் கொண்டாடுவோம், 
வந்த நாள் முதல், 
அத்தான் என்னத்தான்,
பாலிருக்கும் பழமிருக்கும், 
காலங்களில் அவள் வசந்தம்

   மேற்குறிப்பிட்ட  பாடல்களுக்கு அறிமுகமோ அல்லது விளம்பரமோ தேவையில்லை.பாடலின் முதல் வரியே பலருக்கு அந்தப் பாடல்களின் வழியே அவர்கள் உணர்ந்த பல்வகை உணர்சிகளை ஒரே நொடியில் மீட்டுவிடும்.

         62 ஆம் வருடம் இவர்களின் இசை இன்னும் பல இலக்குகளை எட்டியது.
 
ஆலயமணி,-கண்ணான கண்ணனுக்குஅவசரமா ,
பொன்னை விரும்பும் பூமியிலே,
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா,
சட்டி சுட்டதடா,
பலே  பாண்டியா, -அத்திக்காய் காய் காய் , 
வாழ நினைத்தால்வாழலாம் 
பந்த பாசம், - இதழ் மொட்டு,
காத்திருந்த கண்கள்,-வளர்ந்த கலை மறந்துவிட்டாள் ,
காற்று வந்தால் தலை சாய்க்கும் நாணல்,,
நெஞ்சில் ஓர் ஆலயம்,-நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், 
சொன்னது நீதானா,
முத்தான முத்தல்லவோ
பாதகாணிக்கை,- வீடு வரை உறவு,
உனது மலர் கொடியிலே 
பாசம்,-பால் வண்ணம் பருவம், 
உலகம் பிறந்தது,
என்னருகில் நீ இருந்தால்
படித்தால் மட்டும் போதுமா,-பெண் ஒன்று கண்டேன்
நான் கவிஞனுமில்லை,
பார்த்தால் பசி தீரும்,-யாருக்கு மாப்பிள்ளை யாரோ, 
கொடி அசைந்ததும் காற்று வந்ததா,
போலீஸ்காரன் மகள்,-நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ,
இந்த மன்றத்தில் ஓடி வரும்
சுமைதாங்கி,-மயக்கமா கலக்கமா, 
மனிதன் என்வபன் தெய்வமாகலாம்
வீரத்திருமகன்-ரோஜா மலரே ராஜ குமாரி , 
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் 

        63 ஆம்  வருடம் வந்த படங்களைப் பார்ப்போம்.

ஆனந்த ஜோதி,நினைக்க தெரிந்த மனமே,
ஒரு தாய் மக்கள், 
பனி இல்லாத மார்கழியா
இதயத்தில் நீ,-பூ வரையும் பூங்கொடி ,சித்திரப் பூவிழி,
கற்பகம், -மன்னவனே அழலாமா,
அத்தைமடி மெத்தையடி ஆடி விளையாடம்மா,
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு,
மணியோசை,தேவன் கோவில் மணியோசை,
நெஞ்சம் மறப்பதில்லை,-நெஞ்சம் மறப்பதில்லை, 
அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை 
பார் மகளே பார், -நீரோடும் வைகையிலே, 
அவள் பறந்து போனாளே, 
மதுரா நகரில்
பணத்தோட்டம்,-பேசுவது கிளியா,
ஒருவர் ஒருவராய்
பெரிய இடத்துப் பெண்-கட்டோடு குழலாட,
அன்று வந்ததும், 
பாரப்பா பழனியப்பா

      64 இல் வந்த படங்கள்.

ஆண்டவன் கட்டளை,-அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ,
உள்ளம் என்பது ஆமை, 
அழகே வா அருகே வா ,
ஆறு மனமே ஆறு
தெய்வத்தாய்,-வண்ணக்கிளி சொன்ன மொழி ,
ஒரு பெண்ணைப் பார்த்து, 
இந்தப் புன்னகை
என் கடமை,-ஹலோ மிஸ் எங்கே போறிங்க 
இரவினில் என்ன
கை கொடுத்த தெய்வம்,-சிந்து நதியின் மிசை,
 ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ,
கர்ணன், -  உள்ளத்தில் நல்ல உள்ளம், 
கண்கள் எங்கே,
என்னுயிர் தோழி
கறுப்புப் பணம்,-எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் , 
ஆடவரலாம்
காதலிக்க நேரமில்லை,-நாளாம் நாளாம்,
மலரென்ற முகமொன்று, 
அனுபவம் புதுமை
,நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா,
என்னப் பார்வை, 
உங்கள் பொன்னான கைகள்,
பச்சை விளக்கு,-ஒளிமயமான எதிர்காலம்,
கேள்வி பிறந்து அன்று
படகோட்டி,-தரைமேல் பிறக்க வைத்தான், 
தொட்டால் பூமலரும்,
பாட்டுக்கு பாட்டெடுத்து, 
என்னை எடுத்து
பணக்கார குடும்பம்,- அத்தை மகள் ரத்தினத்தை, 
ஒன்றுஎங்கள் ஜாதியே,
பறக்கும் பந்து பறக்கும் , 
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக 
புதிய பறவை,- உன்னை ஒன்று கேட்பேன், 
எங்கே நிம்மதி,
பார்த்த ஞாபகம் இல்லையோ , 
சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சர்வர் சுந்தரம்,-அவளுக்கென்ன அழகிய முகம் ,
போகப் போக தெரியும்,
சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு 

       65 இல் வந்த படங்கள்.

எங்க வீட்டுப் பிள்ளை,-நான் ஆணையிட்டால், 
நான் மாந்தோப்பில்,
குமரிப்பெண்ணின், 
மலருக்குத் தென்றல் பகையானால்
பணம் படைத்தவன்,-கண் போன போக்கிலே,
மாணிக்கத் தொட்டில்
சாந்தி,-யார் அந்த நிலவு, 
வாழ்ந்து பார்க்கவேண்டும்
வெண்ணிற ஆடை,-அம்மம்மா காற்று வந்து,  
கண்ணன் என்னும் மன்னன்,  
என்ன என்ன வார்த்தைகளோ,
சித்திரமே சொல்லடி
ஆயிரத்தில் ஒருவன்.-உன்னை நான் சந்தித்தேன்,
அதோ அந்த பறவை,
ஓடும் மேகங்களே,
ஏன் என்ற கேள்வி,
நாணமோ இன்னும் நாணமோ ,
பருவம் எனது பாடல்,
ஆடாமல் ஆடுகிறேன்.

                   ஒரு படத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் சிறப்பாக இருப்பது இயல்பானதே.மாறாக அனைத்துப் பாடல்களையும் அபாரமாக அமைப்பதென்பது ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும். எந்தப் பாடலை எடுப்பது எதை வைப்பது என்ற குழப்பம் இதை எழுதும் போது எனக்கு ஏற்பட்டது. மேலும் இவர்களின் பல படங்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. இருந்தும் மேற்குறிப்பிட்ட பாடல்களை வாசிக்கும் போதே அவற்றின் இனிமை நம்மை ஒரு சுகமான வாசம் போல குதூகலிக்கச் செய்கிறது.இந்தப் பாடல்களின் சுகம் தமிழ்த் திரையிசை இருக்கும் வரை இறவாமல் இங்கே தங்கி இருக்கும் என்பது உறுதி. ஒரு பாடல் எத்தனைப் பேரால் கேட்கப்படுகிறது என்ற பொருந்தாத வரைமுறையை வைத்துக் கொண்டு அந்தப் பாடலின் சிறப்பை தீர்மானிக்கும் முட்டாள்தனமான மனப்போக்கு நம்மிடம் வெகு அதிகமாக் காணப்படும் பொது புத்தி. உண்மையில் ஒரு பாடல் எத்தனை காலம் இங்கே கேட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதைக் கொண்டே நாம் அதன் சிறப்பை வரைய முடியும். அப்படிப் பார்த்தால் 50 களிலும் 60 களிலும் வந்த பல பாடல்களே அந்தச் சிறப்புக்குரியவை என்பது தெளிவு.

      புதிய பறவை, வெண்ணிற ஆடை, காதலிக்க நேரமில்லை, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி,ஆனந்த ஜோதி, கர்ணன் போன்ற படங்களை எடுத்துக் கொண்டால் அவற்றின் அத்தனைப் பாடல்களுமே தங்கச் சுவை கொண்டவை. குறிப்பாக (என்னுடைய தனிப்பட்ட விருப்பமான)வெண்ணிற ஆடை படத்தின் எல்லா பாடல்களும் வெகு நேர்த்தியானவை. கேட்பவரை ஒரு கணம் உறைய வைக்கும் குரலும், வியப்பூட்டும் மெட்டும்,தாலாட்டும் இசைக் கோர்ப்பும், பண்பட்ட கவிதை வரிகளும் "கண்ணன் என்னும் மன்னன் பேரை", "அம்மம்மா காற்று வந்து ஆடை", "என்ன என்ன வார்த்தைகளோ", "சித்திரமே சொல்லடி" போன்ற பாடல்களை நோக்கி மீண்டும் மீண்டும் செல்லத் தூண்டுகின்றன. ஒரு ரசிகனின் மனதில் பற்பல வண்ணக் கோடுகளைத் தீட்டி ஒரு வானவில்லின் அனுபவத்தை அவனுக்கு கொடுக்கின்றன.படகோட்டி, ஆயிரத்தில் ஒருவன் படப் பாடல்களை கேட்கும் எவருமே ஒரு மவுனமான தலை அசைப்பின் மூலம் அவற்றின் பெருமையையும் சிறப்பையும் தெரிவித்து விடுகிறார்கள். இங்கே குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு சிறப்பு என்னவென்றால் இத்தனை ஆயிரம் பாடல்களில் எந்த இரண்டு பாடலும்  ஒரே மாதிரி ஒலிப்பதில்லை. ஒவ்வொரு பாடலும் வெவ்வேறான மெட்டில் அமைக்கப்பட்டு ஒரு  புதிய இசை  அனுபவத்தை கேட்பவருக்கு அளிக்கிறது.

   தமிழ்த் திரையிசையின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படும் 60களை விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையாக மட்டும் பார்ப்பது முரணானது.மேலும் இது அப்போது தமிழ்த் திரையிசையில் இருந்த பல இசை மேதைகளுக்கு நாம் செய்யும் அநீதி. கே வி மகாதேவன், ஜி ராமநாதன்,எ எம் ராஜா, சுதர்சனம், சுப்பையா நாயுடு இன்னும் பல இசைஞர்களும் இதே பொற்காலத்தைச்  சேர்ந்தவர்கள்தான். வசதியாக அவர்களை நாம் மறந்துவிடலாகாது.

    பணத்தில் துவங்கி ஆயிரத்தில் ஒருவனில் தமிழ்த் திரையிசையின் ஒரு மாபெரும் இசைப் புரட்சி முடிவு பெறுகிறது.விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் பிரிகிறார்கள். இதற்கு பல காரணங்கள் யூகமாக இன்றுவரை சொல்லப்பட்டு வருகின்றன. ஸ்ரீதர் மற்றும் கண்ணதாசன் இருவருமே இந்தப் பிரிவுக்கு காரணம் என்று கூட ஒரு கருத்து உண்டு.  ஆனால் அந்தப்  பதினைந்து ஆண்டுகள் தமிழ்த் திரையிசையில் அவர்கள் எடுத்தவைத்தச் சுவடுகள் எல்லாம் ஒரு தங்க  இசையாக காற்றில் தவழ்கின்றன. இந்தச் சாதனை முறியடிக்கப்பட தமிழ்த் திரையிசை இரண்டாவது பொற்காலத்தை அடையவேண்டும். Good things might recur. But the best things never.

  மற்றொரு கவனிக்கத்தக்க அம்சத்தைப் பற்றி நாம் இங்கே பேசவேண்டும்.அது இவர்கள் தங்கள் இசையை மட்டும் முன்னிலைப் படுத்தாமல் பாடலைப் பாடியவர்களையும், அதை எழுதிய கவிஞனையும் மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள். ஒரு பாடலை  உருவாக்குவதில் தன் பங்களிப்பைச் செய்யும் எல்லோருக்கும் உரிய  இடம் கொடுத்து அவரவர் தன் பாதையில் பயணிக்கும் உரிமையை பறித்துக் கொள்ளாமல் ஒரு பண்பட்ட நாகரீகத்தை காப்பாற்றினார்கள். இதனாலேயே இன்று பலர் அவர்களின் பாடல்களில்  டி எம் எஸ், சுசீலா, பி பி ஸ்ரீனிவாஸ்,டி ஆர் மகாலிங்கம், எல் ஆர் ஈஸ்வரி, எஸ் பி பி,  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,மருதகாசி,கண்ணதாசன்,வாலி, எம் ஜி ஆர்,  சிவாஜி, ஜெமினி, நாகேஷ், சந்திரபாபு போன்றவர்களை அடையாளம்  காண முடிகிறது.அவரவர்க்கு செல்ல வேண்டிய சிறப்பை உரியவர்களுக்கு கொடுத்துவிடுவது ஒரு உன்னதமான இசையின் நற்குணம். அது அவர்களிடம் இருந்தது. இந்த மேன்மையான பண்பாடு அவர்களுக்கு அடுத்து வந்த இசைஞர்களிடமிருந்து விடை பெற்றுச் சென்றுவிட்டது. "இது என் இசை" என்று கர்வம் மிளிர மேடையில் சுயபுராணம் செய்துகொள்ளும் ஒரு புதிய சீர்கெட்ட, தரங்கெட்ட கலாச்சாரம் அதன்பின்  தோன்றியது.

     " பாசம்"(62)படத்தில் வரும் "உலகம்  பிறந்தது எனக்காக"என்னும் ஒரு அற்புதமான பாடலை குறித்து இப்போது பேசலாம். இந்தப் பாடலின் வரிகள் ஒரு சுயநலவாதியின் குரல் போல இருந்தாலும் பாடலை கேட்கும் போது இது சுயநலமில்லை, மாறாக தன்னம்பிக்கை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இந்தப் பாடலில் விஸ்வநாதன் ராமமூர்த்தி மட்டும் நமக்குத் தெரிவதில்லை . கண்ணதாசன் துடிப்பாகத்  தெரிகிறார். டி எம் எஸ் குதூகலமாகத் தெரிகிறார்.எம் ஜி ஆர் பரவசமாகத் தெரிகிறார்.இதுவே ஒரு உண்மையான இசையின் முகம்.

        இன்றோ நாம் எதோ ஒரு இசை அமைப்பாளரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு இது அவர் பாடல் என்று அழைப்பதோடு நின்றுவிடுகிறோம்.வேறு  சிலரோ  ஒரு பாடலை ஒரு குறிப்பிட்ட இசைஞரின் பாடலாக மட்டுமே பார்க்கவேண்டும் என்று சொல்வதுண்டு.அது உண்மையில்லை.மேலை நாட்டு இசைவிரும்பிகளிடம் இது போன்ற அபத்தமான இசைப் பார்வை கிடையாது. Pink Floyd, Led Zeppelin, The Who, Rolling Stones, Deep Purple, The Beatles, The Cars, Alan Parsons Project,   போன்ற  குழுக்களின்  பாடல்களை  அவர்கள் அந்தக் குழுவினரின் ஒருங்கிணைந்த இசையாகவே  எடுத்துக் கொள்கிறார்கள்.அவர்கள் எப்போதும் ஒரே ஒருவரை மையப் படுத்தி மற்றவர்களை பின்னுக்குத் தள்ளுவதில்லை. இதுதான் நாம் இசையை அணுக வேண்டிய முறை.இசையின் இந்தப் பன்முகத் தன்மையை மறுக்கும் எந்த இசைஞரும் தான் சுவாசிக்கும் இசைக்கு நியாயமாக இருக்கவில்லை என்பதே உண்மை.