Thursday 2 June 2016

வவ்வாலின் வருகைக்காக .....

இணைய நட்பு என்பது ஒரு விதத்தில் ரயில் சிநேகிதம் போன்றது. ஆத்மார்த்தமான நட்பு இதில் ஒரு அதிசயம்.  தாமரை இலைத் தண்ணீர்த் துளி போல இணையத்தில் நாம் இணைந்திருந்தாலும் சில விதிவிலக்குகள் நேர்வதுண்டு.

நான் பதிவுகள் எழுதும் முன் இணையத்தில் சந்தித்த பலரில் இருவர் முதன்மையானவர்கள்.  முதல் நபர்  திரு அமுதவன். நான் எழுதவேண்டும் என்ற உள் சிந்தனையை உருவாக்கியது அவரது எழுத்து. இரண்டாவது நபர் வவ்வால். நான் பொறாமை கொண்ட பதிவர்.

வவ்வாலுக்கும் எனக்குமான இணையத் தொடர்பு ஒரு முட்டலில் உருவானது. துவக்கத்தில் இணையத்தில் ஆங்கிலப் பாடல்களை தேடித் தேடி தரவிறக்கம் செய்த காலங்களில் நான் அதிகம் தமிழ்ப் பதிவுகளை வாசித்ததில்லை. அப்படி வாசித்த சில பதிவுகளும் வெற்று எழுத்து கொண்ட வெறும் சக்கைகளாக இருந்தன. அது என் தேடலின் குறை என்று இப்பொழுது அறிகிறேன்.

இதற்கிடையில் சமுத்ரா என்பவரின் வார்த்தைகளிலிருந்து மௌனத்திற்கு என்ற வலைப்பூவில் ஒரு குறிப்பிட்ட பதிவில் நான் அந்தப் பதிவரின் எழுத்து நடை குறித்து "இது சுஜாதாவின் பாணி போல தெரிகிறது" என்று எழுத, அவருக்கு கடும் கோபம் வந்துவிட்டது. எனக்குப் பதிலளிக்கும் ஆவேசம் அவரை "சுஜாதா எனக்கு முன்னே வந்துவிட்டார். அவ்வளவுதான் வித்தியாசம்" என்று எழுதுமளவுக்கு விரைவாக செலுத்திவிட்டது. இந்த பின்னூட்ட கைகலப்பில் வவ்வால் சேர்ந்துகொண்டார். பதிவர் சொன்னதை ஆமோதித்த அவர் "காரிகன் என்ற பெயர் நான் சிறு வயதில் படித்த ஒரு காமிக்ஸ் கதாநாயகனின் பெயர். அவர் அப்படித்தான் எழுதுவார் போலும்". என்று தனது டிரேட் மார்க் நையாண்டியுடன் அவர் குறிப்பிட, நான் வவ்வாலுக்கு "உங்கள் பெயரில் கூட தலைகீழாக தொங்கும் ஒரு வினோத ஜந்து உள்ளது" என தெரிவிக்க அங்கே  நிகழ்ந்து முடிந்தது எங்களது முதல் சந்திப்பு.

அந்த முழு பதிவுக்குமான இணையத் தொடர்பை கீழே கொடுத்துள்ளேன். திரு. சமுத்ரா உண்மையில் மிகத் திறமையான எழுத்தாளர். சுஜாதா பாணியிலிருந்து மீள முடியாவிட்டாலும் அவர் எழுதும் அறிவியல், இன்றைய இணையத்  தமிழுக்கு மிக அவசியமான ஒன்று என்று நினைக்கிறேன்.

 http://samudrasukhi.blogspot.in/2012/03/blog-post.html


பின்னூட்டங்களிலேயே எனது பொழுது கழிந்த வருடங்களில் அடிக்கடி இணையத்தில் பலருடன் முரண்படுவது எனக்கு நேர்ந்த ஒரு பொழுதுபோக்குச் சுமை. இரா பதிவர்களுடன் முட்டி மோதிய தருணங்கள் நிறையவே உண்டு.

பின்னொரு தளத்தில் உலக சினிமா ரசிகன் என்பவர் கமலின் ஹே ராம் பற்றி ஏதோ மாடர்ன் ஆர்ட் ஒன்றை விவரிப்பதுபோல frame by frame சிலாகித்து எழுத, பொறுமை உடைந்துபோன  எனது விரல்கள் அங்கே மற்றொரு உரசலை உருவாக்கின. அது ஒரு மிகக் கடுமையான விவாதமாக தொடர்ந்து கொண்டிருக்க, இடையில் அவரோ என்னை சினிமா தொடர்புடைய வேறு யாரோ என்று கற்பனை செய்துகொண்டு ஆக்ரோஷமான வார்த்தைப் போரில் ஈடுபட, நானும் ஏவுகணைகள் அனுப்ப, விவாதம் வேறு தளங்களுக்கும் பரவியது. அதையும் அவரே செய்துமுடிக்க இரண்டாம் முறை நான் வவ்வாலை உலக சினிமா ரசிகனின் தளத்தில் சந்திக்க சேர்ந்தது. இந்தமுறை வவ்வால் ஒரு திடீர் அதிசயமாக என் சார்பாக ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். "காரிகன் ஒருவரின் பெயரை வைத்தே அவரை அறிந்துவிடக்கூடியவர்"  என்று எனக்கே தெரியாத உளவியலை வெளிப்படுத்தி என்னை ஆச்சர்யப்படுத்தி," ஹே ராம் படத்தில் எங்கெல்லாம் கமல் குறியீடுகளை பயன்படுத்தியிருக்கிறார் என்று தெளிவாக மற்றொரு பதிவு எழுதினால் நான் எங்கே அவைகளை கவனிக்கத் தவறினேன் என்பதை அறிய வசதியாக இருக்கும்" என்று அதிரடியாக சொல்ல, உலக சினிமா ரசிகன்,"சரிதான். ஏழரை உச்சத்தில் இருக்கிறது போல" என விலகிச் சென்றுவிட்டார்.  (இப்போது அந்தப் பதிவை காணவில்லை. உலக சினிமா ரசிகன் என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.)

வவ்வாலின் பின்னூட்டங்கள் அதிரடியானவை, அவை அதிகம்  ஆர்ப்பாட்டம் மிகுந்த  தெளிவான நக்கல், நையாண்டி கலந்த  சொற்களோடு வரும் ஒரு கலவரக் கதம்பம். வரிக்கு வரி சுவாரஸ்வம் தெறிக்கும். வவ்வாலின் forte அதுதான். அவரால் வெகு எளிதாக கலோக்கியல் சொற்களோடு  வாதம் செய்ய முடியும். அதேவேளையில் சடாரென எதிர்பாரா வளைவில் திரும்பி புத்தகத் தமிழில் உரைநடை பாணியில் தரமான தர்க்கம் புரியவும் முடியும். வாதம் என்று வந்துவிட்டால் இடையில் I quit என்று சீட்டுக்களைக் கலைத்துபோடும் முட்டாள்தனமான தற்காப்பு நாடகத்தனமோ, அல்லது விவாதத்தில் பாதியில் கரைந்துபோகும் கோழைத்தனமோ கொஞ்சமும் இல்லாத இறுதி வரை நின்று தன் மீது ஏவப்படும் ஏவுகணைகளுக்கு ஸ்கட் மிஸைல் அனுப்பும் அயராத ஆளுமை கொண்டவர். தனது எழுத்தில் எந்த இடத்திலும் சோர்வையோ அலுப்பையோ அல்லது வெறும் சம்பிரதாயமான கை குலுக்கல் செயற்கை பிம்பங்களோ தலை காட்டவிடாமல், அவர்  எழுதும் வார்த்தைகள் அனைத்தும் அவர் மனதிலிருந்து வெளிப்படும் உணர்வுகளாகவே இருக்கும்.

அவரது பதிவுகள் மிக நீண்டவை. பல இணையத் தொடர்புகள் சூழப்பட்ட ஆழமான கட்டுரைகள் எழுதுவது வவ்வாலின் பாணி. சில சமயங்களில் சற்றே அலுப்பூட்டினாலும்  பல விஷேச தகவல்களை அங்கங்கே அடிக்கோடிட்டு காண்பித்துச்  செல்லும் அவர் எழுத்து.  ஒரு கலைடாஸ்கோப் ஒவ்வொரு அசைவுக்கும் வினோத அழகாக உருமாறுவதைப் போன்ற  வசீகரம் மிக்க கட்டுரைகள் எழுதுவது வவ்வாலின் சிறப்பு.

அவருடைய பின்னூட்டங்களை தொடர்ந்து வாசித்து வந்த எனக்கு என் பதிவு ஒன்றில் அவரது திடீர் வருகை ஒரு வசந்தம் போல உவகை அளித்து, திகைப்பில் திக்குமுக்காட வைத்தது. அது நிற்காத மழை என்ற தலைப்பில் நான் எம் எஸ் வி பற்றி எழுதிய பதிவு.

http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/2013/05/vi-65.html

அதன் பின்னர் தொடர்ச்சியாக நான்கைந்து பதிவுகளில் அவர் வருகை இருந்தது.  எதிர்பார்த்த சில பதிவுகளில் அவர் தோன்றுவதில்லை. என் வலைப்பூ பக்கம் வராவிட்டாலும் நான் அவரைத் தொடர்ந்தபடியே இருந்தேன். இடையில் நண்பர் வருண், நண்பர் ஜெயதேவ் தாஸ், வவ்வால் மூவருக்குமிடையில் ஒரு சிறிய புள்ளியில் ஒரு விவாதம் தோன்றி அது கன்னாபின்னாவென்று காட்டுத்தீ போல உக்கிரமாக கொழுந்துவிட்டு எரியத் துவங்க அமுதவன் அவர்கள்  தனது தளத்தில் பதிவர்களே உங்கள் சண்டையை நிறுத்துங்கள் என்று ஒரு பதிவே எழுதுமளவுக்கு தகித்தது.

நான் இறுதியாக வவ்வாலின் பின்னூட்டத்தை கண்டது  இந்த களேபரங்களுக்குப் பிறகு  நண்பர் ஜெயதேவ் தாஸ் பதிவு ஒன்றில்தான். அதன் பின் வவ்வால் ஒரு மர்மம் என எனக்குத்  தெரிய ஆரம்பித்தது. நெய்வேலி புத்தகத்  திருவிழா பற்றிய அவரது பதிவே இன்று அவரது இறுதிப் பதிவாக இணையத்தில் இருக்கிறது.

இணையத்தை விட்டு திடுமென அகன்று விட்ட வவ்வால் ஒரு மகா ஆச்சர்யமானவர். அவரது பாராட்டில் ஒரு ஆத்மார்த்தமான தோழமையைக் கண்டேன். ஒருமுறை வலைச்சரத்தில் என் வலைப்பூ அறிமுகம் செய்யப்பட்டபோது  அவர் என்னைக் குறித்து எழுதிய பின்னூட்டத்தில் அவரது அன்பு வெறும் டிஜிடல் சங்கதி  கிடையாது என்பதை புரிந்துகொண்டேன்.

அவரை நேரில் சந்திக்கும் அந்த கணம் தோன்றப் போவதில்லை என்று தெரிகிறது. அது பற்றி கவலையில்லாவிட்டாலும், இணையத்தில் அவர் எழுத்துக்களை மறுபடியும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது அடர்த்தியாக எனக்குள் ஒரு புயல்  போல அசைகிறது. அவரது பழைய எழுத்துகளைப் படிக்கும் போது எத்தனை அருமையான தோழனை இழந்திருக்கிறேன் என்று ஒவ்வொரு வரியும் சொல்கிறது. வவ்வாலின் நண்பர்கள் மற்றும் அவரை இணையத்தில் அறிந்தவர்கள் அனைவருக்கும் நான் சொல்லும் வார்த்தைகளின் வலி புரியும் என்று நம்புகிறேன்.

வவ்வாலின் இரண்டரை வருட திடீர் மௌனம் பல எண்ணங்களுக்கும், கருத்துக்களுக்கும்,  கொஞ்சம் கொஞ்சமாக உயிரூட்டிக் கொண்டிருக்கிறது. இந்த மௌனம் பல திகைப்புகளையும் , அச்சங்களையும்  மனதில் எழுப்புகிறது.

இந்த மௌனம் ஒரு நட்புக்கினிய நண்பனின் பிரிவை உணர்த்துகிறது. எங்கிருந்தாலும் அவர் நலமாக இருக்கவேண்டும் என்ற வாழ்த்து எப்போதும் என்னிடமுண்டு.

வவ்வால் மீண்டும்  வரவேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு நீண்ட பதிவாகக் கூட வேண்டாம். ஒரு சிறிய பத்தியாக, ஒரு வாக்கியமாக, ஒரு வார்த்தையாக  அல்லது ஒரே ஒரு எழுத்தாக ....








11 comments:

  1. வாருங்கள் காரிகன் ஒரு நல்ல தேர்ந்த திறமையான பதிவரின் எழுத்துக்கள் இல்லாத தமிழ் இணைய உலகம் கொஞ்சம் சோர்வைத் தருகிறது என்றுதான் சொல்லவேண்டும். வவ்வாலின் கருத்துக்களோடும் எண்ணங்களோடும் ஒத்துப்போகாவிட்டாலும் அவருடைய ஆளுமை என்பது சாதாரணமானதல்ல.
    \\வவ்வாலின் பின்னூட்டங்கள் அதிரடியானவை, அவை அதிகம் ஆர்ப்பாட்டம் மிகுந்த தெளிவான நக்கல், நையாண்டி கலந்த சொற்களோடு வரும் ஒரு கலவரக் கதம்பம். வரிக்கு வரி சுவாரஸ்வம் தெறிக்கும். வவ்வாலின் forte அதுதான். அவரால் வெகு எளிதாக கலோக்கியல் சொற்களோடு வாதம் செய்ய முடியும். அதேவேளையில் சடாரென எதிர்பாரா வளைவில் திரும்பி புத்தகத் தமிழில் உரைநடை பாணியில் தரமான தர்க்கம் புரியவும் முடியும். வாதம் என்று வந்துவிட்டால் இடையில் I quit என்று சீட்டுக்களைக் கலைத்துபோடும் முட்டாள்தனமான தற்காப்பு நாடகத்தனமோ, அல்லது விவாதத்தில் பாதியில் கரைந்துபோகும் கோழைத்தனமோ கொஞ்சமும் இல்லாத இறுதி வரை நின்று தன் மீது ஏவப்படும் ஏவுகணைகளுக்கு ஸ்கட் மிஸைல் அனுப்பும் அயராத ஆளுமை கொண்டவர். தனது எழுத்தில் எந்த இடத்திலும் சோர்வையோ அலுப்பையோ அல்லது வெறும் சம்பிரதாயமான கை குலுக்கல் செயற்கை பிம்பங்களோ தலை காட்டவிடாமல், அவர் எழுதும் வார்த்தைகள் அனைத்தும் அவர் மனதிலிருந்து வெளிப்படும் உணர்வுகளாகவே இருக்கும்.\\- இப்படி அவருடைய எழுத்துக்கள் பற்றி மிக அருமையாகவே சித்திரம் தீட்டிவிட்டீர்கள்.
    தன்னை மறைத்துக்கொண்டு பதிவெழுதுவது தங்கள் எண்ணமாகவோ அல்லது தங்களுக்கு சவுகரியமானதாகவோ இருக்கலாம். ஆனால் மிகக் குறிப்பிட்ட ஒரு சில நண்பர்களுக்காவது, அட்லீஸ்ட் இணைய நண்பர்களுக்காவது தன்னைத் தெரிந்தவராக இருப்பது நலம் என்பதைத்தான் வவ்வால் போன்றவர்கள் திடீரென்று இணையத்திலிருந்து மறைந்துவிடுவது அல்லது மறைத்துக்கொள்வது போன்ற இந்த தருணத்தில் யோசிக்கவைக்கிறது. அவருடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த ஒரு சில பதிவர்கள் கூட அவர் யார் எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் என்பதைத் தெரியாதவர்களாக, சொல்லமுடியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதுதான் இணையத்தின் சோகம் போலும்.
    தங்கள் கட்டுரை பல்வேறு எண்ணங்களை நிச்சயம் படிக்கிறவர்களிடத்தில் ஏற்படுத்தும்.

    ReplyDelete
  2. வாங்க காரிகன்

    வவ்வாலுக்காக ஒரு பதிவே போட்டு விட்டீர்கள். நானும் அவருடன் கருத்துச் சண்டை போட்டிருக்கிறேன். ஆனாலும் அவர் பதிவுகளை விரும்பிப் படிப்பதுண்டு. அவருடைய நிஜப் பெயரும் தெரியாத பட்சத்தில் யார் அவரை எப்படி தொடர்பு கொள்வார்கள்?

    அவர் பின்னூட்டச் சண்டைகளை எல்லாம் நிறைய வாசித்து ரசித்ததுண்டு. பல பேருடன் முரன்படுவார். வாதங்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பார். பெரும்பாலும் இடித்துரைப்பார் எப்போதாவது பாராட்டுவார். வித்தியாசமான இணைய பெர்சனாலிட்டி . நல்ல இடித்துரைப்பாளர் என்றும் சொல்லலாம். சில வருடங்களாக அவரை இணையத்தில் காணவில்லை. காரணம் யாருமே அறியாதது நமது துரதிருஷ்டம் .

    சொல்ல முடியாது. உங்களின் பதிவைக் கண்ட பிறகு மீண்டும் உதயமாகலாம். அவர் வரவேண்டும் . பிரார்த்திப்போமே!

    ReplyDelete
  3. வணக்கம் காரிகன்...

    நலமா ? தங்களின் அக்கறையான விசாரிப்புக்கு வழக்கம் போலவே மிகவும் தாமதமாக " அக்கரையிலிருந்து " பதில் !...

    உடலாலும் பொருளாலும் பாதிக்கப்படாவிட்டாலும், சேன் நதியின் சீற்றம் இந்த உலகில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் கிடையாது என்பதை பட்டவர்த்தனமாக புரியவைத்துவிட்டது ! இந்த மனிதர்களுக்கு பாடம் புகட்டியே தீரவேண்டும் என இயற்கை முடிவுசெய்துவிட்டதாக தோன்றுகிறது !

    அலுவல் மாற்றம், குடும்ப சூழ்நிலை என பல காரணங்களால் என் வலைதள பங்களிப்பு நிறைய குறைந்துவிட்டது.

    உங்களின் இந்த பதிவு என் எண்ண ஓட்டத்துடன் ஒத்திருப்பது ஒரு ஆச்சரியம் ! சமீப காலமாகவே வலையுலகில் ஒரு தொய்வு தெரிகிறது... சில அருமையான பதிவர்கள் எழுதுவதை நிறுத்திகொண்டுவிட்டார்கள்...

    எழுத நிறைய இருக்கிறது... இயற்கை கொடுக்கும் அடிகளையும் கற்கால காட்டுமிராண்டிகளாய் மாறிய சில மனிதர்களின் தீவிரவாத செய்லகளையும் அறியும்போதெல்லாம் என்ன எழுதி எதை மாற்ற போகிறோம் என்ற அயர்வும் தோன்றுகிறது !

    எனது saamaaniyan74@gmail.com முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்களேன்... Please !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  4. வவ்வால் இல்லேயே என்ற ஏக்கம் தங்களைப் போல பலரது மனதில் எற்படுத்தியதே அவரது வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். சிரங்கு பிடித்தவன் கையும், இரும்பு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்பார்கள், அத்துடன், இணையத்தில் எழுதியவன் கையும் சும்மா இருக்காது என்றும் சேர்த்துக் கொள்ளலாம். எழுதுவதிலும், பின்னூட்டங்கள் மூலம் பதிவர்களை நோண்டி நொங்கெடுத்த வந்த வவ்வால் போன்ற ஒருத்தர் இணையத்தின் பக்கம் வராமல் கையை சும்மா வைத்துக் கொண்டு இருக்க முடியுமா என்பது பெரும் விந்தையாகவே இருக்கிறது!! உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் கணினி வழியாகவும் கைபேசிகள் வழியாகவும் இணையம் கிடைக்கும் இந்த கால கட்டத்தில், எதற்காக அவர் எழுதுவதை முற்றிலும் நிறுத்த வேண்டியிருக்கும் என்று எண்ணிப் பார்த்தால் எந்த சரியான காரணமும் கிடைக்க வில்லை. ஒரு வேலை அவர் ஜெயிலில் போட்டிருப்பார்களோ, பரோலில் வந்து எழுதிவிட்டு உள்ளே சென்று விடுவாரோ? ஏனெனில் முன்பொரு முறையும் இடைவெளி விட்டிருந்ததாகச் சொல்கிறார்கள். அல்லது ஆளே மண்டையை போட்டிருப்பாரோ..... சீ........சீ........... கன்னத்தில் போட்டுக்கறேன்!!

    அவரோட கனவு பண்ணி.........ச்சீ........... கனவு கன்னி அசினுக்கு கூட கல்யாணம் ஆனபோதும் இந்த மனுஷன் இன்னமும் மவுனம் காப்பது எதற்கு? காத்திருப்போம், ஒருநாள் அவர் மீண்டும் வந்து எழுதுவாரென்று.............

    ReplyDelete
  5. வாருங்கள் அமுதவன்,

    வவ்வாலைப் பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது மனதில் அலையடிப்பதுண்டு. சில நாட்கள் முன் அவருடைய பழைய பதிவுகளையும் அவர் எனக்கு எழுதியிருந்த பின்னூட்டங்களையும் படிக்க நேர்ந்தது. அதன் விளைவே இந்தப் பதிவு.

    இரும்புக்கை மாயாவி போல மறைந்துவிட்டாரே வவ்வால் என்று வியப்பும் வேதனையும் ஒரு சேர வருகிறது. அவர் நலமாக இருந்தாலே போதும்.

    ReplyDelete
  6. வாங்க சால்ஸ்,

    சம்பிரதாயமான நட்பைத் தாண்டிய ஒரு ஆத்மார்த்த இணைப்பு இணையத்தில் சிலரிடமே சாத்தியம். உங்களின் பதிலுக்கு நன்றி.

    ReplyDelete
  7. வாங்க சாம்,

    பலர் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டது போல தோன்றுகிறது. நான் அதிகம் எழுதுவதில்லை என்பதால் என்னுடைய சோம்பேறித்தனம் வெளிப்படாது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. வாங்க ஜெயேதேவ்,

    உங்களைத்தான் வவ்வால் அன்பாக பாகவதரே என்றழைப்பார். அப்படி துவங்கும் போதே அவர் பின்னூட்டம் களை கட்டிவிடும்.

    எனக்கு வவ்வால் பற்றி விபரீத சிந்தனைகள் எழுந்தாலும் அந்த கற்பனைகளுக்கு தீனி போடுவதில்லை. நலமாக இருக்கிறார் என்றே நம்புவோம்.

    ReplyDelete
  9. காரிகன்: நான் பதிவெழுதும் முன்பே வவ்வால் வலைதளங்களில் பின்னூட்டமிடுபவர். ஒரு ப்ரேக் எடுத்துவிட்டுப் பின்னால் வந்த செக்கண்ட் இண்ணிங்ஸ்லதான் பலருக்கும் அறிமுகமானார். பதிவுலகில் யாரையும் (ஒருவரையுமே) அவர் சந்ததித்தில்லை என்பதே பின்னால்தான் புரிந்தது). நடராஜனை சந்திக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருப்பார். இதிலென்ன வேடிக்கைனா ராஜ நடராஜன் மறையும் வரை அவரும் தன்னை யாரிடமும் அடையாளப் படுத்திக்கவில்லை என்றும் எனக்குத் தெரியாது. அவரும் பெரிய புதிரான பேர்வழி என்பது அவர் மறைவுக்குப் பிறகே இணையம் உணர்ந்தது.

    ஜோதி கணேசன் மட்டும் இதில் விதி விலக்கு! நடராஜன் மறைவுச் செய்திக்கே வவ்வால் இரங்கள் பின்னூட்டமிடவில்லை என்பதால் உங்கள் பதிவு அவர் கண்ணில் படுமா என்பதே சந்தேகம்தான்.

    இணையத்தில் ப்லர் இப்படி வந்து பலர் மனதில் இடம் பிடித்து மறைந்து உள்ளார்கள். இதுதான் இணையப் பதிவு உலகம். எனக்கு இதெல்லாம் புதிதல்ல! :)

    ReplyDelete
  10. அப்புறம், காரிகன், சொல்ல மறந்துவிட்டேன். உங்களுடைய இப்பதிவு எனக்கு எப்படி உணர்வைத் தருதுனா, இளையராஜா பற்றி சிலாகித்து அவர் ரசிகர் ஒருவர் பதிவெழுதினால் உங்களுக்கு (காரிகனுக்கு) எப்படி தோன்றுமோ சாத்ஷாத் அதே உணர்வுனு வச்சுக்கோங்களேன்! :)

    ReplyDelete
  11. வாங்க வருண்,

    பதிவைப் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    உங்களது இரண்டாவது பின்னூட்டத்தின் ஒப்பீடு நன்றாகவே இருந்தது. உங்களுக்கு அப்படித் தோன்றாவிட்டால்தான் ஆச்சர்யம். இதை நான் எதிர்பார்த்தேன்.

    ReplyDelete