Sunday, 31 January 2016

ஒரே முகம்

தமிழ்த் திரையின் இரண்டு மகா நடிகர்களைப் பற்றிய சற்றே நீண்ட பதிவு. அல்லது சிலர் சொல்வதுபோல ஒரு சிறிய கட்டுரை. எனது பார்வையில் அவர்கள்.
 
                                                     
                                        


                                             ஒரே முகம் 

                                 

     இந்த  பொங்கல் விடுமுறையின் ஒரு  நாளில் (மாட்டுப் பொங்கல் என நினைவு)  டிவியில் இரண்டு படங்களை பார்க்க நேர்ந்தது. ஒன்று பழைய படம். மற்றது அதை விட ரொம்ப பழைய படம். திரைப்படங்களை வரிவரியாக விவரித்து மொத்தக் கதையையே சொல்லும் விதமான விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அன்று நான் பார்த்த அந்த இரண்டு படத்திற்கும்  இருப்பதுபோல தோன்றும் ஆனால் இல்லாத ஒரு   ஒற்றுமை என்னை இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. தவிர, மிக நீண்ட நாட்களாகவே இப்படியான ஒரு பதிவை எழுத நினைத்திருந்தேன். தமிழ்த்திரையின் இரண்டு பிரமாண்டமான ஆளுமைகள் குறித்து என் பார்வையை பதிவு செய்யவேண்டும் என்ற என்னுடைய விருப்ப விதைக்கு  தண்ணீரும் வெளிச்சமும் பாய்ச்சியது இந்தப் படங்கள். இந்தப் பொங்கலில் இந்த இரண்டு படங்களும் ஒரே தினத்தில் ஒளிபரப்பானது ஒரு எதேச்சையான ஆச்சர்யம். ஒரு திடும் திகைப்பு. உடனே என் மூளையின் நியூரான்களில் படிந்திருந்த அந்தப் பழைய எண்ணம்  உயிர் பெற்று எழுந்து என் விரல்களுக்குள் சென்று வார்த்தைகளாக வடிவம் பெற்றது.  

    நான் மேலே குறிப்பிட்ட அந்த இரண்டு படங்களில் முதலாவது  2008இல் வெளிவந்த கமலஹாசன் நடித்த தசாவதாரம். இரண்டாவது 1964இல் வந்த சிவாஜி நடித்த நவராத்திரி. ஒன்று  மேற்கத்திய சாயல் போர்த்திய அதீத அபத்தம். மற்றொன்று  நம் மண் மணம் வீசும் மகத்துவமான ஆச்சர்யம். இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு தளங்களில், பரிமாணங்களில் பயணித்து இரு துருவங்களான இலக்குகளை நோக்கி நகர்பவை.சொல்லப்போனால் ஒப்பீட்டளவில் இந்த இரண்டு படங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.  ஆனால் இரண்டுக்கும் உள்ள அந்த nonexistent similarity  என நான் குறிப்பிட்டது பல முகங்கள் காட்டும் ஒரு நடிகனின் தாகம் பற்றியது.  இந்த இரண்டு படங்களின் ஆதாரமான அம்சம் இதுவே.

    தசாவதாரம் ஒரு பேராசைக் கனவு. சிவாஜி என்ற மகா நடிகனின் உயரத்தைத் தாண்டியாக வேண்டும் என்ற  கமலஹாசனின் மன ஆழத்தில் உழன்று கொண்டிருக்கும்   நெருப்புக் கனலை   மட்டுமே  தசாவதாரத்தில் காட்சிக்குக் காட்சி காண முடிந்தது. நீ என்ன பெரிய ஆளா? நீ ஒன்பது வேஷம் கட்டினா நான் பத்து வேஷம் காட்டுவேன் என்ற சிறுபிள்ளைத்தனமான முஷ்டி மோதல் போல கமலஹாசன் இந்தப் படத்தைத் தீர்மானிக்கவில்லை என்று எண்ணத் தோன்றினாலும் அதுதான் இந்தப் படத்தின் பின்னே உறைந்திருக்கும் உண்மை. கமலஹாசனின் பகட்டான  மேதாவித்தனம் ஏகத்துக்கும் விரவிக்கிடக்கும் காட்சியமைப்புகளைக் கூட மன்னித்துவிடலாம். ஆனால் அவரது அந்த பத்து கதாபாத்திரங்கள் என்ற விபரீத விருப்பத்தை எந்தவித விமர்சனமும் செய்யாமல்  வெறுமனே வாயை மூடிக்கொண்டு கடந்து சென்றுவிட முடியாது.

     படம் வந்த போது அதை திரையரங்கில் பார்க்க சற்றும் விருப்பம் கொள்ளவில்லை. படம் பற்றிய விமர்சனங்கள் படித்தபோது நான் சிறு வயதில் படித்த வைரஸ் X என்ற ஒரு முத்துக் காமிக்ஸ் கதை என் நினைவுக்கு வந்தது. என் அபிமான காமிக்ஸ் கதாநாயகன் காரிகன் ஒரு கொள்ளைக்காரன் வேடம் கொண்டு எதிரிகளின் கையில் சிக்கிக்கொண்ட அபாயகரமான  அழிவுக் கிருமிகள் அடைக்கப்பட்ட ஒரு கண்ணாடிக் குப்பியை  வெற்றிகரமாக மீட்டு வரும் சாகசம் அது. இதை படமாக எடுத்தால் கண்டிப்பாக பிரமாதமாக இருக்கும் என்று அப்போது நினைத்ததுண்டு. கமலஹாசன் அந்தக் கதையை திருடி தசாவதரமாக்கி விட்டார் என்று நான் ஒரு டிபிகல் பின் நவீனத்துவ  சினிமா விமர்சகன் போல சொல்லப்போவதில்லை. படத்தின் இந்த ஒரு வரிக் கதை துடிப்பான காட்சிகளாக விரிந்து சிறப்பாக மெருகூட்டப் பெற்று  நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்க வேண்டும். பரிதாபமாக தசாவதாரத்தில் அது நடைபெறவில்லை. மிஞ்சியது படத்தின் மீது ஏகமான வெறுப்பும் கமல் என்ற நார்சிஸ்ட் நடிகனின் செயற்கைத்தனமான நடிப்பின் மீது ஏளனமும், ஏமாற்றமும், எரிச்சலும்தான்.

       கமலின் அதி பயங்கர பாசாங்கான அறிவுஜீவித்தனம் அவ்வப்போது தலை காட்டினாலும் இறுதிக் காட்சியில் அந்த ஜப்பானியனும், அமெரிக்கனும் மோதிக்கொள்ளும் போது அவர்களின் உரையாடலில் அது தன் முகத்தை காட்டிவிடுகிறது.  அந்த அமெரிக்கன் "Remember Hiroshima?" என்பான். உடனே அந்த ஜப்பானியன் " Remember Pearl Harbour?" என்று பதில் சொல்வான். Allusion to Second World War. ஆனால் எத்தனை அபத்தமான உரையாடல்! திரையில் ஒரு அமெரிக்கனும் ஜப்பானியனும் சண்டை போட்டுக்கொண்டாலும் அந்த முகங்களுக்குப் பின்னே இந்த இரண்டு அழிவு நிகழ்வுகளின் வலிகளோடும் வேதனைகளோடும் கொஞ்சமும் தொடர்பில்லாத ஒருவனின் மனநிலை சிறுபிள்ளைத்தனமாக வெளிப்படுவதை கண்டு எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போரின் மிக மையமான இரண்டு நிகழ்வுகளை குறிப்பாக உணர்த்துகிறாராம்! இதெல்லாம் எனக்குத் தெரியும்டா என்ற தோரணை அதில் அலங்காரமாகத் தெரிகிறது.

   இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்காவும் ஜப்பானும் நெருக்கமாகி இரண்டு நாடுகளுக்கிடையில் வணிக அளவில் நட்புறவும், சந்தை லாபங்களும், நிதி உதவிகளும் ஏராளமாக பெருகின. அமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாவும் ஜப்பானுக்கு பொருளாதார வகையில் உதவிக்கரம் நீட்டி தன் ஹிரோஷிமா கரையை துடைக்க முயன்றது. இன்று இந்த இரண்டு நாடுகளும் ஆத்மார்த்த நண்பர்கள். பேர்ல் ஹார்பரையும் ஹிரோஷிமாவையும் தாண்டிய நட்பு இன்று அவர்களுக்குள் சாத்தியமாயிருக்கிறது. இன்றைய தேதியில்  ஒரு ஜப்பானியனும் அமெரிக்கனும் சந்தித்துக்கொண்டால் அவர்களுக்குள் எழும் முதல் எண்ணம் ஹிரோஷிமா, பேர்ல் ஹார்பராக  இருக்கும் என்று நினைப்பது மகா மட்டமான மலிவான அரசியல் சிந்தனை.

   கமல் தேர்வு செய்த இந்தக் கதைக்கு பத்து கதாபாத்திரங்கள் பொருத்தமா என்ற கேள்வி வருகிறது. ஏனென்றால் இது போன்ற பத்து  கதாபாத்திரங்கள் செய்ய விரும்பியவருக்கு எந்த கதையிலும் அதற்கான தளம் இருக்கவே செய்கிறது. மேலும் பத்து என்ன இன்னும் கூட அதிகமான முகமூடிகளோடு அவர் அனைத்து கதாபாத்திரங்களையும்  செய்திருக்க முடியும் என்று தோன்றுகிறது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷாக அவர் முகமூடி போட்டுக்கொண்டு நடிப்பதைப் பார்த்தபோது நாயகன் படத்தில் அத்தனை இயல்பாக நம்மை ஆட்கொண்டவர்தானா இவர் என்ற கேள்வி எழாமலில்லை. அசின் கூட படத்திற்கு தேவையில்லை. அந்த கூனிப் பாட்டி போல  (என்ன ஒரு பயங்கர மேக்கப்! அதுவும் அருகாமைக் காட்சிகளில் அருவருப்பாகத் தோன்றுகிறது.) அதையும் அவரே செய்திருக்கலாம். கமல் எத்தனை கமலடா என்று வியக்கும் அளவுக்கு அவரது  அராஜக அவதாரம் ஆக்ரோஷமாக ஆனந்தத் தாண்டவமாடுகிறது.  படம்  முடிந்து வெளியே வரும்போது நம் கண்ணில் தென்படும் எல்லோருமே கமலாக இருப்பார்களோ என்று சந்தேகம் வருகிறது என்று இந்தப் படத்தைப் பற்றி ஒரு பதிவர் எழுதியிருந்தார்.

    இந்தியன் படத்தில் கமல் தன் முகத்தின் மீது பூசிக்கொண்ட அந்த மேற்கத்திய முகமூடி தமிழுக்கு அன்றைய காலகட்டத்தில் மிகப் புதிது. அவர் அடைந்த வெற்றிக்கு அந்தத் தோற்றமும் அதற்கான பல மணி நேர வியப்பான உழைப்பும் மிக முக்கிய காரணிகள். அவ்வை ஷண்முகி என்று அவர் அடுத்த முறை பெண்ணாக பரிணமித்தபோது முதல் சலிப்பு ஏற்பட்டது. ஒரு ஆண் பெண்ணாக நடிப்பதென்பது ஒரு தீவிரமான ரசனை மிகுந்த கதைக்கு சற்றும் உதவாத துணை. பின்னர் மொட்டையாகத் தோன்றினார். தாடி வைத்துக்கொண்டு காந்தியைக்  கொல்ல விரைந்தார். முகத்தில் நீண்ட தழும்புடன் உண்மையான கண்ணாடி அணிந்துகொண்டு கடவுள் மறுப்பு பேசினார். அவ்வப்போது  மெட்ராஸ் தமிழில் தனக்கே உரித்தான நலிந்த நகைச்சுவையோடு சில படங்களில் தோன்றினார். பிரெஞ்ச் தாடி வைத்துக்கொண்டு கூத்தடித்தார்.  பிறகு "தசாவதாரம்" எடுத்தார். அது அவரது கோமாளித்தனத்தை வெளிச்சமாக்கியது. "விஸ்வரூபம்" எடுத்து தான் ஒரு சீரியசான ஜோக்கர் என்று நிரூபித்தார்.

  இது எல்லாவற்றையும் ஒரே வீச்சில் வீழ்த்தியது அவர் தனக்கு முன் இன்றுவரை விடாது பிடித்துக்கொண்டிருக்கும் மிக மிக அபத்தமான, மலிவான  அந்த உலகநாயகன் என்ற அடைமொழிதான்.  80களின் மத்தியில் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் விருது அவருக்குக் கொடுக்கப்பட்டதும் தமிழகம் பெரியதாக உணர்ச்சிவசப்பட்டது. அவரது ரசிகர்கள் அவரை அடுத்து என்ன என்று கேட்க, அவர் ஆஸ்கார் என்று சொல்லாமல் சொல்ல, கமல் அன்றைய காலகட்டங்களில் ஆஸ்கார் நாயகன் என்றே அழைக்கப்பட்டார். பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குணா போன்ற படங்கள் அவரது  ஆஸ்கர் ஆசையை மேன்மேலும் மேலே எடுத்துச் சென்றன. எண்பதுகளில் வாழ்ந்தவர்களுக்கு இந்த உண்மை மிக நன்றாகவே தெரியும். இந்தியாவிலிருந்து ஒரு நடிகன் ஆஸ்கர் விருது பெற்றால் அது கமலஹாசனாகத்தான் இருக்க முடியும் என்ற தமிழர்கள்  திடமாக நம்பியிருந்தார்கள்.  தவிர, கமலின் பேச்சுக்களும், வினோதமான சாகச முயற்சிகளும் அதை உறுதி செய்தவண்ணம் இருந்தன.

  ஆஸ்கர் என்பது அமெரிக்கர்கள் தங்கள் படங்களுக்குக் கொடுத்துக்கொள்ளும் ஒரு லோக்கல்  விருது என்பதும் அதில் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற  ஒரே ஒரு பிரிவில் மட்டுமே மற்ற மொழித் திரைப்படங்கள் அனுமதிக்கப்பட்டு ஒரே ஒரு ஆஸ்கர் விருது  ஆங்கிலமல்லாத ஒரு திரைப்படத்திற்கு வழங்கப்படும் என்ற நிதர்சனமும்  வெளியே தெரியவந்தபோது கமலஹாசனுக்கு ஆஸ்கார் நாயகன் என்ற அந்தப் அடைமொழியின் மீது கடுமையான ஆத்திரம் ஏற்பட்டிருக்கவேண்டும்.  90களின் மத்தியில் அவர் பேச்சில் ஆஸ்கர் கனவு பற்றிய குறியீடு ஏளனமும் நக்கலுமாக வெளிப்பட்டது.  இதற்குள் ஆஸ்கார் நாயகனுக்கும் மேலே அவர் ஆசைப்பட்ட அடைமொழியாக உலக நாயகன் என்ற புதிய பட்டம்  கமலின் நார்சிஸ்ட் மனோபாவத்திற்கு பொருத்தமாக அமைந்துவிட்டது.  நான் ஆஸ்கருகும் மேலே என்று வழக்கமாக யாருக்கும் எளிதில் புரிந்துவிடாது கவனமாகப் பேசும் பாணியில் மக்களுக்குப் புரியவைத்தார்.

      இதற்கிடையில் சற்றும் சத்தமில்லாமல் ஒரு தமிழன் மெட்ராசிலிருந்து, லண்டன் வழியே லாஸ் ஏஞ்செலஸ்சை தன் இசையால் அடைந்தான். அவன் கைகளில் இரண்டு ஆஸ்கர் விருதுகள் தஞ்சமடைந்தபோது கண்டிப்பாக தமிழகத்தில் இருவருக்கு தூக்கம்  தூரமாக இருந்திருக்க வேண்டும். அந்த இருவரில் ஒருவர் யார் என்று நான் சொல்லத்தேவையில்லை. அவர் பற்றி பேசினால் இதைப் படிக்கும் பலருக்கு தூக்கம் போய்விடும்.  அது தமிழகமே அறிந்த உண்மை. மற்றவர் ஆஸ்கார் நாயகன் என்று தன் ரசிகர்களால் மிக பெருமையுடன் அழைக்கப்பட்ட கமலஹாசன். ரஹ்மானை ஆஸ்கருக்காக கமலஹாசன் பாராட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட பின்னரே --அதிலும் தன்னுடைய முத்திரை நையாண்டியுடன்தான் -- அவரால் அதைச் செய்ய முடிந்தது என்ற நிகழ்வே இதற்குச்  சான்று.

  கமல் என்ற பன்முகம் கொண்ட ஆளுமையின் மீது நான் நடத்தும் ஏவுகணைத் தாக்குதல் அல்ல இது. அவர் வட்டம் வெறும் நடிப்பு என்று முடிவடைவதில்லை. புதிய இலக்குகளை நோக்கி அவரது சுழற்சி பாய்ந்துகொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் நடனம் என்றால் அது கமல்தான் என்ற விதி தமிழ்த் திரையில் இருந்தது. பிரபுதேவாவின் பிரவேசத்திற்குப் பிறகு கமல் நடனமாடுவதை ஏகத்துக்கும்  குறைத்துவிட்டார். அதைப் பற்றி பேசுவதே கிடையாது. இப்போது கமல் நன்றாக நடனம் ஆடுவார் என்பது பலருக்கு ஒரு புதிய தகவலாக இருக்கலாம். உத்தம வில்லன் படத்தின் துவக்கத்தில் அவர் போடும் அந்த இளமை ததும்பும் நடனத்தை அவரது ரசிகர்களே "இதெல்லாம் இவருக்கு தேவையா?"என்றே பார்த்தார்கள்.

   நடனம், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடல், இசை, ஒளிப்பதிவு, போன்ற தளங்களும் சினிமாவின் பின்னணியில் இருக்கும் நுட்பங்களும், நவீன அறிவியல் பார்வையும், சமூக கண்ணோட்டமும், வணிக வெற்றியை மட்டுமே எண்ணாத கலைத் தாகமும், தமிழ் சினிமாவை வேகமாக வேறு கட்டங்களுக்கு  நகர்த்த விரும்பும் வெறியும், இன்ன பிற சாகச சிந்தனைகளும், அபிலாஷைகளும் ஒருங்கே தனக்குள் அடக்கிவைத்திருப்பவர் கமல். எல்லாம் இருந்தாலும் பிரதானமாக அவர் ஒரு நடிகர். அவரின்  அந்த ஒரு முகத்தை மட்டுமே என்னால் விமர்சனத்திற்கு உட்படுத்தமுடியும்.

    தான் செல்லவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருப்பதாக அவர் சொல்வதன் மூலம்  நம்மை மூர்ச்சையடைய வைக்கும் ஏராளமான பரிசோதனைகளுக்கு அவர் இன்னும் தயாராக இருப்பதாக நாம் அர்த்தம் செய்துகொள்ளலாம். வாழ்த்துக்கள் என்ற ஒரு வார்த்தையோடு நான் சற்று விலகிக் கொள்கிறேன்.

      நான்  இத்தனை விமர்சித்தாலும் ஒரு முரணாக என் பள்ளிக் காலங்களில் என் அபிமானத்துக்குரிய  ஒரே நடிகனாக இருந்தவர்  இதே  கமலஹாசன்தான். சிறுவர்களுக்கே உரிய ரசனையின் வெளிப்பாடாக  ரஜினிகாந்த்தின் கோமாளித்தனமான வித்தைகள் மீது துவக்கத்தில் ஈர்ப்பு இருந்தாலும் சலங்கை ஒலியில் கமலஹாசனின் நடிப்பு என் மீது புதிய கவிதை எழுதியது. எனது விழிகள் வியப்பில் மூழ்கின. இதாண்டா நடிப்பு என்று குதியாட்டம் போடாமல் மென்மையாக, அமைதியாக  எனக்குப் பிடித்த நடிகன் என மானசீகமாக என் மனதில் அவர் பெயரை வரைந்துகொண்டேன். மூன்றாம் பிறை படத்தை கல்லூரி நாட்களில்தான் பார்க்க முடிந்தது. (அதுவரை அதைப் பார்ப்பதற்கு   வீட்டில் எனக்குத் தடை இருந்தது.) அது கமல் என்ற பிம்பத்தின் மீது மற்றொரு மகுடம் சூட்டியது. இத்தனை இயல்பாக நடிக்கக் கூடிய ஒரே நடிகன் கமல்தான் என்ற எனது எண்ணம் வலுப்பெற்றது. அந்த சமயத்தில் கமல் மிகவும் அலட்டலாக  நடித்த விக்ரம்  கூட எனக்குப் பிடித்திருந்தது.  அவர் மீது ஒரு அடர்த்தியான அபிமானம் அசைவற்று நின்றது.   அதன் விளைவாக கீழ் கண்ட உரையாடல்கள் சாத்தியமாயின.

நண்பர்கள்;  சிவாஜி என்னாமா நடிக்கிறான் பாரு? சிவாஜிய அடிச்சுக்க ஆளே கிடையாது.
நான்; சிவாஜியெல்லாம் ஒரு நடிகனா? அலட்டல் நடிப்பு. அழுதுகிட்டேயிருப்பான்.
நண்பர்கள்;  நீ சிவாஜி படம் ஏதாவது பார்த்திருக்கியா?
நான்;  ஏ இல்ல? லாரி டிரைவர் ராஜாக் கண்ணு, திரிசூலம், வெற்றிக்கு ஒருவன், ரத்த பாசம்,கருடா சௌக்கியமா?, சந்திப்பு, சங்கிலி, ...
நண்பர்கள்;  பழைய படம் ஏதாவது?
நான்;  இத பாத்தே பாதி செத்தாச்சு. இதில அது வேறயா?
நண்பர்கள்;  வேற யார் தாண்டா நல்லா நடிக்கிறா?
நான்;  கமல்.
நண்பர்கள்;  சிவாஜியை  விடவா?
நான்;   ஆமா. சிவாஜியை விட கமல் நல்லாவே நடிக்கிறான். அவந்தாண்டா நடிகன்.

   ஜோசப் கல்லூரியில் படித்தபோது இது போன்று  நண்பர்களை ஆத்திரமூட்டும் உரையாடல்கள் எனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று. என்னை அவர்கள் சற்று விநோதமாகவே  பார்ப்பார்கள். ஒருமுறை ஒரு கூட்டம் "இவன்தாண்டா சிவாஜிக்கு நடிக்கவே தெரியாதுன்னு சொல்றவன்." என்று என்னை குறிப்பிட்டது என் காதில் தெளிவாக விழுந்தது. அது  எனக்குப் பெருமையாகக்  கூட இருந்தது. விடுதியில் அவ்வப்போது பெரிய திரை கட்டி பழைய படங்கள் காட்டுவார்கள். கலர் படமா, கருப்பு வெள்ளைப் படமா என்பதே அப்போது கேட்கப்படும் ஒரே கேள்வி.  கருப்பு வெள்ளை என்றால் பாதி ஹாஸ்டல் காலியாக இருக்கும். உல்லாசப் பறவைகள், காதலிக்க நேரமில்லை என்ற சில படங்களே இப்போது என் நினைவில் இருக்கின்றன. ஒரு முறை தெய்வ மகன் படம் திரையிடப்பட்டது. அதில் சிவாஜி தோன்றும் சமயங்களில் என் நண்பர்கள் என்னையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். எனக்கோ சிவாஜியின் நடிப்பைக் காட்டிலும் இவர்களின் ஆர்வம் அதிக வெறுப்பைக் கொடுக்கும். "அங்க பாருங்கடா" என்று எரிச்சலடைவேன். அதில் மூன்று சிவாஜிகளும் ஒரே காட்சியில் தோன்றும் அந்தக் காட்சியை கண்டு என் நண்பர்கள்,"இதுக்கு என்ன சொல்ற?" என்றார்கள். "முதலில் சிவாஜியை அழாமல் நடிக்கச் சொல்லுங்கள். பிறகு பார்க்கலாம்." என்றேன்.

      சிவாஜியை விட கமல் ஒரு சிறந்த நடிகன் என்ற என் கருத்துக்கு பெரிய அங்கீகாரம் நாயகன் படம் வெளிவந்ததும் கிடைத்தது. அதுவரை என்னை ஏளனமாகப் பார்த்த பலரது பார்வை நாயகன் வந்த பிறகு முற்றிலும் மாறிவிட்டது.  மிகத் தீவிர கமல் வெறியனான   என் அறைத்தோழன்,  "நீங்க அப்பவே கரெக்டா சொன்னீங்க" என்று எனக்கு மிகுந்த மரியாதை கொடுக்க ஆரம்பித்துவிட்டான். அதுவரை தானே சாப்பிட்டுக்கொண்டிருந்த பிஸ்கட், காராசேவு, பக்கோடா  போன்ற வஸ்துக்களை அதன் பின் தயக்கமில்லாமல் என்னுடன் பகிர்ந்துகொண்டான்.  நான் அவனுடன் ஒரே அறையில் இருப்பதை அவன் எதோ பெருமை போல சொல்வான். அப்போது நான் ஆங்கிலப் பாடல்களை துரத்தித் துரத்தி வேட்டையாடிக்கொண்டிருந்த நேரம். "என் வயதுக்கு  கமல்தான் சரி. சிவாஜி ஒரு பழங்கஞ்சி" என்ற குறியீடு எனது பேச்சில், நடவடிக்கைகளில் வெளிப்படும்.

       நாயகனுக்குப் பிறகு தொடர்ச்சியாக கமல் வேறு பாதையில் செல்லத் துவங்கினார். சத்யா, பேசும் படம், மைக்கல் மதன காமராஜன் என அவரது அடுத்த பரிணாமம் அவரை மேலும் பல உயரங்களுக்கு எடுத்துச் சென்றது. மதிப்பீட்டளவில்  கமல் என் மனதில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தார். எப்போது இந்த அபிமானம் அகன்றது என்று மிகத் துல்லியமாக சொல்ல முடியாவிட்டாலும், அவரது பாசாங்கு, பகட்டான அறிவுஜீவித்தனம், தன்னையே முன்னிறுத்திக்கொள்ளும் பக்குவமற்ற போக்கு, ஆங்கில நடிகர்களை --குறிப்பாக Al Pacino ---நகல் எடுக்கும் நடிப்பு என்று பலவிதமான கரைகள் அவர்மீது கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தோன்றின.  குணா படத்தில் வியப்பும், அலுப்பும் ஒரு சேர உண்டானது. ஆளவந்தான் என்ற படத்தில் அவர் தான் ஒரு  நார்சிஸ்ட் என்பதை கோடிகளில் விளம்பரம், வியாபாரம் செய்தார். அந்தப் படத்தை இன்றுவரை நான் முழுவதும் பார்த்தது கிடையாது. தசாவதாரம் அதன் அடுத்த கட்டம். விஸ்வரூபம், உத்தம வில்லன், தூங்காவனம் அவரது நார்சிஸம் படத்துக்குப் படம் விரிவடைந்து கொண்டே போகிறது. அவரிடத்தில்  ஒரு நிழல் நிஜமாகிறது, அவள் அப்படித்தான், சலங்கை ஒலி, நாயகன் ஏன் கலைஞன், குரு  போன்ற படங்களில் நடித்த அந்தக் கமலின் நிழல் தெரிந்தால் கூட நான் அதிகம் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அவர் அந்தச் சாலைகளை விட்டு ஹைவேயில் பயனித்துக்கொண்டிருப்பது போல தோன்றுகிறது.

    சொல்லப்போனால்  கடைசியாக  ஒரு இயல்பான கமலஹாசனை திரையில் நான் பார்த்தது மகாநதி படத்தில்தான் என்று நினைக்கிறேன். பல காட்சிகளில் அவரது யதார்த்தமான நடிப்பு எனக்குள் ஆச்சர்ய வலிகளை ஏற்படுத்தியது. திணிக்கப்பட்ட வன்முறைக் காட்சிகளை சற்று நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்திருந்தால் மகாநதி தமிழின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக விமர்சனங்களின்றி கொண்டாடப்பட்டிருக்கும். கமலின் நடிப்பு அதில் பல்லாயிரம் பாராட்டுகளுக்கு உரியது. மிக இயல்பாக நடிக்கக்கூடிய ஒரு அபாரமான நடிகன்தான் அவர்.   இருந்தும்  அவர் தன் பாதையை இவ்வாறான மனதைச் சுண்டும் கதைகளையும் கதாபாத்திரங்களையும் நோக்கித்  திருப்பாவிட்டால் என்றைக்கும் அவரது சிறந்த இறுதிப்  படம் இதே மகாநதியாகத்தான் இருக்கும்.

         இப்போது நான் மற்றொரு நடிகன் பற்றிய எனது பார்வையையும்  இங்கு பதிவு செய்தால்தான் இந்தக் கட்டுரைக்கு ஒரு முழுமை கிடைக்கும். தசாவதாரம் எவ்வாறு நவராத்திரியை மனதில் ஒப்பீடு செய்யத் தூண்டுகிறதோ அதேபோல கமலின் நடிப்பு பற்றிய விவாதத்தில் நம்மால் சிவாஜியை அப்புறப்படுத்திவிட்டு மேலே தொடர்ந்து பேச முடியாது. சிவாஜியின் நீட்சியாக கமல் இருக்கிறாரா இல்லையா அல்லது அவரைத் தாண்டிவிட்டாரா என்பதல்ல இங்கே விவாதிக்கப்படும் செய்தி.

     50 களிலிருந்து ஆரம்ப 80கள் வரை  முப்பது வருடங்கள் சிவாஜியின் திரை ஆளுமை மிக மிக விஸ்தாரமான வீச்சு கொண்டது. அந்த காலகட்டத்தில் சிவாஜியின் பாதிப்பின்றி நடிப்பு சாத்தியப்பட்டது இவருக்குத்தான். ஒருவர் எம் ஆர் ராதா, மற்றொருவர் எம் ஜி ஆர். மூன்றாவதாக எஸ் வி ரங்காராவை குறிப்பிடலாம். மற்ற எல்லோரிடத்திலும் எதோ ஒரு அசைவில் சிவாஜியின் நிழல் அசந்தர்ப்பமாகத் தெரிந்துவிடும். ரஜினிகாந்தின் துவக்ககால ஸ்டைல் கூட சிவாஜி என்ற மரத்திலிருந்து உதிர்ந்த சில இலைகளே. கமல் மிக முயன்று தன்னை வேறு விதமாக செதுக்கிக் கொண்டவர்.

      நான் இந்தப் பதிவில் எழுதியபடி சிவாஜியை நான் அறிந்தது அவருடைய பிற்கால எழுபதுகள் சார்ந்த படங்கள் மூலமாகத்தான். எப்படி மைக்கல் ஜேக்சனின் பத்துப் பாடல்களைக் கேட்டுவிட்டு ஆங்கில இசையை விமர்சிப்பது முட்டாள்தனமோ அதே போன்றதுதான் சிவாஜி ஏதோ வந்துவிட்டுப் போன எழுபதுகளில் வந்த படங்கள் மூலம் அவர் பற்றிய ஒரு வரைபடத்தை வரைவதும். ரத்தபாசமும் லாரி டிரைவர் ராஜாக்கண்ணும் சிவாஜியின் ஆதாரமான அந்த ஆச்சர்யமூட்டும் நடிப்பை ஒரு புள்ளியளவும் பிரதிபலிக்கும்  படங்களல்ல. அவை வெறும் குப்பைகள். ஆனால் இவ்வாறான படங்கள் மூலமே சிவாஜியை அறிந்த ஒருவனுக்கு அந்த நடிப்பு மிகுந்த வெறுப்பையும், சலிப்பையுமே கொடுக்கும். நான் சிவாஜியைப் பார்த்தது அப்படித்தான்.

       தன் தந்தை காங்கிரஸ் அபிமானியாக இருந்ததால் அந்த பாதிப்பில் என் மிக நெருங்கிய நண்பன் தன்னை ஒரு சிவாஜி ரசிகனாகக் காட்டிக்கொண்டான். ஆனால் எங்கள் வட்டத்திற்குள் வந்த கொஞ்ச நாட்களிலேயே சிவாஜியைத் துறந்து ரஜினிகாந்த் பக்கம் வந்துவிட்டான். அதன்பின் கடைசி வரை அவன் அபிமானம் மாறவேயில்லை. அவனுடன் சேர்ந்து ஒரு சில சிவாஜி படங்கள் பார்த்த அனுவபம் மறக்கவே முடியாதது.  மூன்று மணி நேரப் படத்தில் இரண்டரை மணி நேரம் நாங்கள் செய்யும் கேலியும் கிண்டலும்தான் நாங்கள் அந்தப் படங்களுக்குச் செலவு செய்ததன் ஒரே திருப்தி. படம் முடிந்து வரும் போது,"பேசாம இந்தப் பட  போஸ்டரப் பாத்துட்டு அப்படியே போயிருக்கலாம்." என்பான் அவன்.

    ஒரு முறை  சிவாஜியின் நடிப்பை மிகக் காரமாக ஒரு சிறுவனுக்கே உரித்தான கேலியுடன்  மரியாதை குன்றிய வார்த்தைகளுடன்   பிய்த்துக்  குதறிக் கொண்டிருந்தபோது என் தந்தை குறுக்கிட்டு, "சிவாஜியைப் பற்றி உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்." என்றார் கொஞ்சம் வருத்தத்துடன். "அவனெல்லாம் அப்பவே நடிச்சு முடிச்சுட்டான்டா. இப்ப நடிக்கிறத பாத்துட்டு நீ இப்படி பேசறதெல்லாம் ரொம்ப தப்பு.  இது அவனுடைய மிச்சம் மீதி. சிவாஜியுடைய நடிப்பை பார்க்கணும்னா அவன் நடிச்ச  பழைய படங்கள் பாரு." என்றார்.

    "ஏதாவது ஒரு படம் சொல்லுங்கள்." என்றேன்.  என் தந்தை நொடி நேரம் கூட யோசிக்காது ஒரு படத்தைப் பரிந்துரைத்தார். "உத்தம புத்திரன்."
     
     பார்த்தேன். பதினைந்து வருடங்கள் கழித்து. ஆனால் அது உத்தம புத்திரனல்ல.

  1994ஆம் ஆண்டு என்று நினைவு. வட மாநிலம் ஒன்றில் தனியாகத் தங்கியிருந்தபோது என் அயலான் என்னை ஒரு நாள் மதியம் திடீரெனெ அழைத்தார். அவர் ஹிந்தி, பெங்காலி, மற்றும் எனக்குப் பெயரே தெரியாத மற்றொரு மொழி பேசுபவர். "டிவியில் உங்கள் மொழிப் படம் ஒன்று ஓடுகிறது. தமிழ் என்றதும் எனக்கு உங்கள் ஞாபகம் வந்தது. வந்து பாருங்கள்." என்று உற்சாகமாகச் சொன்னார். ரோஜா வெளிவந்து இந்தியாவே அதன் நறுமணத்தில் நனைந்திருந்த நேரம். ஒருவேளை அதுவாக இருக்கலாம் என்று நினைத்துச்  சென்ற நான், கண்டது ஒரு மிகப் பழைய கருப்பு வெள்ளைப் படம்.

   21 இன்ச் சிறிய டிவி திரையில் சிவாஜி கொடூரமான முக பாவத்தோடு வசனம் பேசியபடி இருந்தார். பார்த்ததும் பரவசமானேன். அது போன்ற சூழலில், தமிழ்நாட்டைவிட்டு ஐயாயிரம் மைல் தொலைவில் தமிழைக் கேட்பதே ஆனந்தம் என்றால், சிவாஜி உச்சரிக்கும் தமிழ் என்ன செய்யும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.  ஒரு புதிய மாற்றம் என்னை நகரவிடாமல் தடுத்தது. காட்சிக்குக் காட்சி சிவாஜியின் முகத்தில் தோன்றி மறையும் மின்னல் உணர்ச்சிகளும், வசனத்தின் தகிக்கும் அனலும், அதை அவர் மேலே எடுத்துச் செல்லும் adrenaline rush   வேகமும் .... ஒரே ஒரு உணர்ச்சிதான்  என்னிடமிருந்தது...... பிரமிப்பு!  சிவாஜி பற்றி நான் கிறுக்கி வைத்திருந்த என் மன ஓவியம் சட்டென கசங்கிக் கலைந்தது. அவர் பற்றி என்னிடமிருந்த போலித்தனமான கட்டமைப்புகள் நொடியில் உடைந்து நொறுங்கின. சிவாஜி பற்றிய எனது மதிப்பீடுகளை நான் உடனே  மறுபரிசீலனைக்குட்படுத்தினேன்.

  அந்த நாள் படத்தின் இறுதிக் காட்சியைத்தான் நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.  பார்த்ததும் வியப்பில் விழுந்தேன். என்ன ஒரு அசுர நடிகன் என்ற எண்ணம் என் உள்ளதிலிருந்த சில  நடிகர்களின் முகங்களை அமிலம் போல கரைத்தது. அவர் பெயர் இவர் பெயர் என என் மனதில் நான் எழுதிவைத்திருந்த சிறந்த நடிகர்கள் எல்லோருடைய பெயரும் ஒரே கணத்தில் காணாமல் போனது.

        அந்த நாள் தமிழில் வந்த மிகச் சிறந்த இரண்டு படங்களில் ஒன்று. திரும்பிப் பார்க்கும்போது அன்றைய நாளில் இதுபோன்றதொரு  கதைக் களம் சாத்தியப்பட்டதே ஒரு அதிசயம்தான்.  முதன் முதலாக ப்ளாஷ் பேக் என்ற கதை சொல்லும் நவீன பாணி, (இது ஜப்பானிய ரோஷமான் படத்தின் தாக்கம். காப்பி கிடையாது)  பாடல்களே இல்லாத படம், anti-hero  subject, மனைவி கணவனைக் கொல்லும் கலாச்சார அதிர்ச்சி (உண்மையில்  நீயா நானா என்ற போராட்டத்தில் துப்பாக்கி தானே வெடித்தது என்று சமரசம் செய்துகொண்டாலும்) என புதுமையின் முத்திரையாக அந்த நாள் அறிமுகமானது. பெரிய வெற்றியடையவில்லை என்று சொல்லக் கேள்வி. இருந்தாலென்ன?  தமிழ் சினிமாவின் நிரந்தமான இடங்களில்  அந்த நாள் நேற்றல்ல இன்றல்ல நாளையும் இருக்கும்.

        இந்தியா விடுதலையடைந்து ஏறக்குறைய எழுபது ஆண்டுகள் ஆன பின்பும் நமது கதாநாயகர்கள் இன்னும் தேச பக்தர்களாக திரையில் வீரம், சூரம் காட்டிக்கொண்டு திரைக்குப் பின்னே,"நான் இந்த நாட்டை விட்டே வெளியேறிவிடுவேன்" என்று கண்ணீர் காட்டும் வேளையில்,  இந்திய தேசம் விடுதலையடைந்து  ஏழே வருடங்களில் ஒரு படு பயங்கரமான தேச விரோதியாக, தன் நாட்டையே அழிக்க எண்ணும் துரோகியாக அப்போது வளர்ந்து வந்த  ஒரு கதாநாயக நடிகன் நடிக்கத் துணிய  அவனை எந்த உந்து சக்தி செலுத்தியிருக்க முடியும்?  தங்கள் ஓட்டம் முடிந்ததும் கதாநாயகர்கள் கொடியவர்களாக நடிப்பதில் நவீனம் எதுவுமில்லை. இயல்பானதுதான். ஆனால் சிவாஜியின் முதல் படமே அவரை தமிழகத்தின் தலைப்புச் செய்தியாக்கியது. ஒரே படத்தில் அவர் கதாநாயகன் என்ற உயரத்திற்குச் சென்றவர். இரண்டு வருடம் கழித்து தமிழில் ஒரு புது முயற்சியாக பாடல்கள் இல்லாமல் வெளிவரயிருக்கும் ஒரு படத்தில் ஒரு பெண் பித்தனாக, துரோகம் செய்யும் கணவனாக,  தேச விரோதியாக நடிக்க  எந்தக்  கதாநாயகன் துணிவான்?

    நடிப்பைப் புசிக்கும்  ஒரு நடிகனுக்கு  மட்டுமே இது போன்ற விபரீதத் தேர்வுகள் சாத்தியம்.

     திருவிழா தினத்து டிவி நிகழ்சிகளில் ,"நடிப்பைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. சினிமா சினிமா சினிமாதான் என் மூச்சு." என்று பேசும் மக்கள் மறந்துபோன அல்லது காணாமல் போகப் போகிற நடிகர்கள் சொல்வதைக் கேட்கும்போது ஏளனமாக இருக்கிறது. நடிப்பைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது என்று சொல்லக்கூடிய திமிர் அல்லது திடம் இங்கே ஒரே ஒரு நடிகனுக்கு மட்டும்தான் உண்டு. அது  சிவாஜி ஒருவர்தான். மற்ற எல்லோருக்கும் வேறு வேறு சௌகரிய சந்தோஷங்கள் இருக்கின்றன. ஆசைகள் இருக்கின்றன. கனவுகள் இருக்கின்றன. கமல் கூட இன்று இந்த வசனத்தைப் பேச முடியாத வகையில் சினிமாவின் சிக்கலான உள் ஆழங்களுக்குள்  சென்று கொண்டிருக்கிறார்.

     கர்ணன், தெய்வமகன், ஆலய மணி, திருவிளையாடல், புதிய பறவை போன்ற சில படங்களைத் தவிர நான் சிவாஜியின் மிகச் சிறப்பான படங்கள் எதையும் திரையரங்குகளின்  அகன்ற திரையில் பார்த்ததில்லை. ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன், பராசக்தி, மனோகரா, உத்தம புத்திரன், பாசமலர், ராஜா ராணி,உயர்ந்த மனிதன் போன்ற படங்களை திரையையரங்குகளில் மக்கள் எப்படிக் கொண்டாடியிருப்பார்கள் என்ற எண்ணம் ஏக்கம் படிந்த உணர்வாக என்னில் நிலைத்துள்ளது.

     சிவாஜியின் நடிப்புத் திறனுக்குச் சான்றாக அவர் நடித்த படங்களைக் குறிப்பிட்டு அந்தக் காட்சிகளை விவரிக்கும் அபிமானம், திறமை என்னிடமில்லை.  அதை தீவிர சிவாஜி ரசிகர்கள் செய்தபடி இருக்கிறார்கள். கௌரவம் படத்தில் மெழுகுவர்த்தி எரிகின்றது பாடலில் சிவாஜியின் சட்டை கூட நடிக்கும் என்று ஒரு சிவாஜி அபிமானி எழுதியிருந்தார்.  நான் அந்தப் பக்கமாக செல்லப் போவதில்லை. அது சற்று மிகையானது.

       சிவாஜியின் அசைவுகள் மிகுந்த பிரசித்திப் பெற்றவை.  துப்பாக்கி கொண்டு தன் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளும் யதார்த்தம், ராணியம்மா மனசு வச்சா எதுவும் நடக்குமம்மா(?) என்று காட்டும் காதல் சேஷ்டை, ஞான ஒளியின் அதே ஆண்டனி என உச்சரிக்கும் தொனி, உயர்ந்த மனிதன் படத்தின் டூத்பிக் கொண்டு வாயை குத்திக்கொண்டே பேசும் பாணி, நவராத்திரியின் அந்த  பாகவதர் தோரணை, தில்லானா மோகனாம்பாள் படத்தில் காட்டும் மிடுக்கு, மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் ஒரு பெரிய மனிதனின் மிகையற்ற இயல்பு,  திருவிளையாடலின் கம்பீரம், தெய்வ மகனின் அந்த இயலாமை என ஒன்றன் பின் ஒன்றாக அடுக்க முடிந்தாலும் ஒரே ஒரு காட்சியை மட்டும் என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

     பாசமலர் படத்தில் ஜெமினியுடனான அந்த  ஆக்ரோஷமான விவாதத்தின் இறுதியில் சிவாஜி உச்ச ஸ்தாயிலிருந்து தன் குரல், பாவம், தோற்றம் எல்லாவற்றையும் நொடியில் கீழிறக்கி, அளவற்ற வெறுப்புடன் ஆனால் மிக அமைதியாக  get out என்று சொல்லும் அந்த அசாதாரண நேர்த்தி யாராலும் பிரதியெடுக்க முடியாத அபாரம்.   Class!  

      யார்றா சிவாஜி என்று நக்கலாக கேட்கும் நபர்களின் வாயடைக்கும் விதத்தில் இதாண்டா சிவாஜி என்று பதிலளிக்கும் வகை ஸ்டைல் பல அவரிடத்தில்  உண்டு.  ஒரு பதிவு போதாது.

      நான் வழக்கமாக ஆங்கில இசைத் தொகுப்புகளை பதிவு செய்யும் எக்மோரில் உள்ள ஒரு பதிவகத்தில் ஒரு முறை அதன் உரிமையாளருடன் இசை, சினிமா பற்றி உரையாடிக்கொண்டிருந்தேன். அது கமலின் தசாவதாரம் படம் வந்த சமயம். பேச்சின் நடுவே தசாவதாரம் குறித்து எனது பார்வையை முன்வைத்தேன். நான் பேசிக்கொண்டிருந்த அந்த பதிவகத்தின்  உரிமையாளர் ஒரு மேல் தட்டு, ஆங்கில இசையின் பால் அதிக பரிச்சயம் கொண்ட நபர். பொதுவாக எங்கள் உரையாடல் ஆங்கிலத்திலேயேதான் இருக்கும்.

       நான்-    கமலின் தசாவதாரம் பார்த்தீர்களா?
       அவர்-    பேன்சி டிரெஸ் காம்பெடிஷன்.
    நான்-      சிவாஜி நவராத்திரியில் ஒன்பது வேடங்கள் செய்தார். உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. கமல் அதை முறியடிக்க பத்து வேடம் போடுகிறார் போல.
  அவர்-  நவராத்திரியின் அருகே இந்தப் படம் வரவே முடியாது.   அதன்  நேட்டிவிட்டி தசாவதாரத்தில் கொஞ்சமும் கிடையாது.
          நான்-    நவராத்திரி படம் பார்த்திருக்கிறீர்களா?
  அவர்- பின்னே?  என்ன ஒரு படம் அது? அதில் வரும் ஒன்பது கதாபாத்திரங்களும்   நம் ஒவ்வொரு உணர்ச்சியின் வெளிப்பாடு. கமல் செய்தது வெறும் முகமூடி அணிந்துகொண்டு முக பாவங்கள் இல்லாத உயிற்ற நடிப்பு.
    நான்-  நீங்கள் தமிழ்ப் படம் பார்ப்பீர்கள் என்று இன்றுதான் தெரிந்தது. அதிலும் பழைய படங்கள்- என்னைப் போலவே.
         அவர்-    சிவாஜி போல ஒரு நடிகர் வருவதென்பது ஆச்சர்யமானது.

 நான்தான் ஆச்சர்யப்பட்டேன். நான் சற்றும் எதிர்பார்க்காத ஒரு மூலையிலிருந்து சிவாஜி குறித்து இப்படியான சிந்தனை வெளிப்படும் என்று.

      2003 என்று நினைக்கிறேன். எனது உறவினர் ஒருவருடனான  சினிமா தொடர்பான உரையாடலின்போது ; "இப்போது உங்களிடம் ஒரு உண்மையை சொல்லப் போகிறேன்" என்றேன் மிகத் தீவிரமாக. "சொல்." என்றார் அவர் சிரத்தையுடன். ஏற்படுத்திக்கொண்ட தாமதத்திற்குப் பிறகு  "சிவாஜி நன்றாக நடிக்கிறார்." என்றேன். ஏனென்றால் சிவாஜிக்கு நடிக்கத் தெரியாது என்று அவரிடமே பலமுறை  விவாதித்திருக்கிறேன் பள்ளி நாட்களில். எனவே அவரது எதிர்வினை என்னவாக இருக்கும் என்று அறிய ஆவலாக இருந்தது. என்னைப் பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு அவர் சொன்னார்; "நீ தமிழன்னு வெளிய சொல்லாதே."  அவர் வீட்டை விட்டு அகலும் சமயத்தில் என் தோளைத் தட்டி, "அடுத்த தடவ வரப்ப பாகவதர் பத்தி எதுவும் உண்மையை என்கிட்டே சொல்லிடாதே. இந்த அதிர்ச்சியே ஒரு வருஷம் தாங்கும்." என்றார்.

     போதிக்கப்பட்ட அபிமானம், ரசனை, பாதிப்பு எனக்குப் பிடிக்காத ஒன்று. நானாக அறிந்துகொண்ட பின்னரே எதைப் பற்றியுமான  ஒரு கருத்து என் மனதில் உருப்பெறும். சிவாஜி, எம் எஸ் வி போன்றவர்களை நோக்கி நான் நகர்ந்தது இந்த தீப்பொறி என்னைத் தீண்டியதால்தான். பலவிதமான கருத்துக்களையும், போதனைகளையும், கற்பிதங்களையும், விதிகளையும், கோட்பாடுகளையும், கனவுகளையும், புனைவுகளையும், சேமிக்கும் காலம் ஒன்று உண்டு. ஆனால் மனது அலைபாய்வதிலிருந்து விடுதலை பெற்றதும் வாழ்வின் பல இயக்கங்களுக்கான காரணத்தை  நாம் நாமாகவே உருவாக்கிக் கொள்கிறோம். அது யாரிடமிருந்தும் கடன் பெற்ற கருத்தாக இருப்பதில் நமக்கு உடன்பாடு இருப்பதில்லை.

         தற்போது சிவாஜி ஒரு மிகையாக நடிக்கும் நடிகர் என்ற கருத்து அதிகம் பேசப்படுகிறது. இணையத்தில் சில சில்லுவண்டுகள் அதை பெரிதாக மெகாபோன் வைத்து ஊதிப் பெருக்குகிறார்கள். மிகைதான்- சில சமயங்களில். அதேசமயம் அதே நடிகர் மோட்டார் சுந்தரம் பிள்ளை. தெய்வப் பிறவி போன்ற படங்களில் சற்றும் மிகையில்லாது இயல்பாக நடித்த படங்கள் குறித்தோ அதில் அவரது நடிப்பு குறித்தோ தங்களது வாதங்களை முன் வைப்பதில்லை.

    சிவாஜி நாடக மேடையில் நடிப்பு பயின்ற ஒரு மிகை நடிப்புக் கலைஞன். சினிமாவில் அதைத்  தொடர்ந்தார். ஆனால் அது மட்டுமே அவருடைய முழு ஆளுமை கிடையாது. உண்மையில் சிவாஜி யாராலும் தீட்டப்படாத  ஒரு raw diamond. வைரமுத்து ஒரு முறை கூறியதுபோல சிவாஜி ஒரு அணுகுண்டு. அவரை வைத்து நமது இயக்குனர்கள் தங்கள் முதுகை சொறிந்துகொண்டார்கள். இதுதான் சிவாஜி, இப்படித்தான் அவரால் நடிக்க முடியும் என்று அவர்களே தீர்மானித்தார்கள். சினிமாவில் நடிப்பு தவிர வேறு எதுவும் அறிந்திராத சிவாஜி அவர்களுடைய கையசைவுகளுக்கு கட்டுப்பட்டு நடித்ததே பலராலும் இன்று பெருமளவில் பாராட்டப்படுகிறது. அவருடைய நடிப்புப் பசிக்கான கதைக் களம், திரைக்கதை வெகு சிலராலே சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.  அவரால் எந்த விதமாகவும் எப்படிப்பட்ட ஆளுமைக்குள்ளும் சிரமமின்றி நுழைந்துகொள்ள முடியும். கதாநாயகன் என்றல்ல. கமீடியன், வில்லன், ஏன் கொஞ்சமும் முக்கியத்துவமில்லாத walk-on part ரோல் கூட அவரால் எந்தவித பொறாமைகள், கோபங்கள், தனிவிரக்கங்கள் இல்லாமல் செய்யமுடியும். வாணிராணி படம் இதற்கு சான்று. அதில் அவருக்கு எந்த ஒரு மையமான நடிப்பும் கிடையாது. இருந்தும் வாணிஸ்ரீக்காக (வாணிஸ்ரீயின் சொந்தப் படம்) அவர் நடித்துக் கொடுத்த படம் அது. தேவர் மகனில் கூட கமல்தான் பிரதானமானவர். சிவாஜி ஒரு ஊறுகாய் போலவே வந்துபோவார். (மிக அபத்தமாக அந்தப் படத்திற்காக சிவாஜிக்கு சிறந்த துணை நடிகர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.!)

     கமலஹாசனுக்குக் கிடைத்த இயக்குனர்கள் போல சிவாஜிக்கு வாய்க்காதது துரதிஷ்டமே. அதேபோல் கமல் போல தன்னையே இயக்கிக்கொள்ளும் அந்த நார்சிஸ்ட் தாகமும் சிவாஜியிடம் இல்லாதது அவருக்கு ஒரு பின்னடைவுதான். 50, 60 களில் சிவாஜிக்கு இணையான நடிகன் இந்தியாவிலேயே கிடையாது என்பதுதான் உண்மை. நாம்தான் அதை புரிந்துகொள்ளாமல் பலவித அரசியல், சாதி வண்ணம் பூசி ஒரு கலைஞனை அங்கீகரிப்பதிலிருந்து தூரமாக நிற்கிறோம். இன்று சிவாஜி போன்ற ஒரு மகத்தான நடிப்புக் கலைஞனை வெறும் மிகையான நடிகன் என்று இகழ்ந்து விட்டு வேறு யாரை அவருக்கான இடத்தில் வைக்கப்போகிறோம்? அந்தத் தகுதி வேறு யாருக்கு இங்கே இருக்கிறது?

 தமிழ் சமூகத்தின் சரித்திர நாயகர்களையும், இலக்கிய ஆளுமைகளையும், ஆன்மீக மாந்தர்களையும், தேசத் தலைவர்களையும், பகட்டான மேல்தட்டு மனிதர்களையும், சாலையோர சாமானியர்களையும், காதலனையும், கணவனையும், சகோதரனையும், தந்தையையும்,  ஒரு சேர இத்தனை ரத்தமும் சதையுமாக திரையில் பிரதிபலித்த ஒரு மகா மகா மகத்தான நடிகனுக்கு இகழ்ச்சி ஒன்றே நம்முடைய மேதாவித்தனம் கொடுக்கும் பாராட்டு என்றால்....  வெறும் காதல் பேசி, வன்முறை ஆட்டம் ஆடி, பெண்களை இழிவு செய்து, துரத்தித் துரத்தி மற்றவர்களை அடித்துக் கொன்று, தாய் தந்தையை மதிக்காது நடக்கும் நமது "இயல்பான" கதாநாயகர்களை  தலையில் வைத்துக் கொண்டாடும் நவீனத்துவமும்,  யதார்த்தமும்   மிகவும் ஆபத்தான கலையுணர்வு.

     56 இல் வந்த ராஜாராணி என்ற படத்தில் சிவாஜி ஒரே டேக்கில் பேசும் அந்த எட்டு  நிமிட புறநாறூற்று வசனத்தை சற்று கேளுங்கள். சிவாஜியின் கிரீடம் வேறு எவர் தலைக்கும் பொருந்தாது என்பது புரியும்.

  நகைச்சுவை என்றால் சார்லி சாப்ளினும், விஞ்ஞானி என்றால் ஐன்ஸ்டைனும், மேற்கத்திய செவ்வியல் இசை என்றால் பெய்ட்டோவன் மட்டும்தானா இருக்கிறார்கள் இங்கே? இல்லைதான். ஆனால் அவர்கள் எல்லோரும் அவர்கள் சார்ந்த துறையின் குறியீடாக, ஒரு முத்திரையாக மக்களால் பார்க்கப்படுகிறார்கள்.  "உனக்குப் பிடித்த தமிழ் நடிகர் யார்?" என்ற கேள்விக்கு என்னால் கண்டிப்பாக "சிவாஜி மட்டும்தான்" என்று சொல்ல முடியாது. ஆனால் தமிழின் மிகச் சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு அதே பதிலை என்னால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். ஏனென்றால் நம்மிடம் அந்தக் கேள்விக்கான பதிலாக ஒரு முகம்தான்  இருக்கிறது,    ஒரே முகம்.
 

 





அடுத்து : இசை விரும்பிகள் XXX - எண்பதுகள் - இசையுதிர் காலம்.

Saturday, 16 January 2016

இசை விரும்பிகள் XXIX: கரையாத கானம்

  புத்தாண்டு கோலாகலங்கள் மேற்கத்திய நாகரிக சாயம் பூசிக்கொண்டுவிட்டன. மது பாட்டில்களும், பீப் வார்த்தைகளும், விரைவு பைக்குகளும், மரியாதை தொலைத்த  விபரீத  வாழ்த்துக்களும், சில திடீர் மரணங்களும் நம் மண்ணின் தற்போதைய நச்சுக் கலாச்சாரமாக உருமாறி  அசுர முகத்துடன் ஆபத்தான  ஆர்ப்பாட்டங்களோடு புத்தாண்டை வரவேற்கின்றன. இந்த பெருநகர் கலாச்சாரம் உலகமெங்கும் அவரவர் மொழிகளில் பிரதியெடுக்கப்படுகிறது.  மெட்ரோபோலிஸ் நகரங்களுக்கு வெறும் நவீன கட்டிடங்களும், திடமான சாலைகளும், வேகமான கார்களும் மட்டும் போதாது. இரவு வாழ்க்கையும், அதைக் கொண்டாடும் போலி நியாயங்களும், பாசாங்கான மேதாவித்தனமும் கூடவே அவசியப்படுகின்றன. சுமார் பத்து வருடங்களாக நாம் கொண்டாடும் புத்தாண்டுக் களியாட்டத்தில் இதன் கூறுகளை நம்மால் அதிக சிரமங்களின்றி  காண முடியும். இந்த வகை கொண்டாட்டங்கள் வேக ஓட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு கலாச்சார விபத்து.  இன்னொரு   பண்பாட்டுப் பலி.

   ஏறக்குறைய எல்லாமே மாறிவிட்டது. வணிக நிர்ப்பந்தங்கள், விடலைத் துடிப்புகள், அர்த்தமில்லாத ஆர்ப்பாட்டங்கள், கண நேர அபத்த சந்தோஷதிற்காக  உயிரை விலை பேசும் விபரீதங்கள்,  இனக்  கவர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் இச்சைக்கான புதிய வழிகள் என  நமது புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் வெறும் துள்ளல்களாகவே   துடிக்கின்றன. இது ஒரு இன்னொரு தினம் என்ற எண்ணம் எனக்கு மட்டும்தான் இருக்கிறதா என்று தெரியவில்லை.

    ஆனால் சில சங்கதிகள் இன்னும் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. அவை அப்படியே நிலைகொண்டுவிட்டன. எத்தனை காலங்கள் ஆனாலும்  எப்படி வாராயோ என் தோழி வாராயோ   ஒரு திருமணத்தில் ஒலிப்பதும், மானுத்து மந்தையிலே சகோதர சீர் வரிசை கொண்டாட்டத்தில் பாடப்படுவதும் மாறாதோ அதேபோல புத்தாண்டு என்றாலே இந்தப் பாடல்தான் என்றாகிவிட்டது.

    இந்தப் புத்தாண்டில் மீண்டும் அதே பாடலை நான் கேட்டேன். 25 வருடங்கள் காற்றில் கரைந்த பின்னரும் புத்தாண்டை இன்றும் அதே இளமையுடன் இனிமையுடன் வரவேற்கும் அந்தப் பாடலை மீண்டுமொருமுறை கேட்டேன். அது என்ன பாடல் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

  புத்தாண்டை வரவேற்க நம் தமிழ்த் திரை வெகு சில பாடல்களையே அளித்துள்ளது.

    நூற்றுக்கு நூறு படத்தின் நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும், சங்கிலியின் நல்லோர்கள் வாழ்வைக் காக்க நமக்காக நம்மைக் காக்க என கைவிரல்கள் எண்ணிக்கையிலேயே புத்தாண்டுப் பாடல்கள் நம்மிடம் உண்டு. இதன் நீட்சியாக 82இல் வந்த ஒரு பாடல் புத்தாண்டின் மின்சாரத் துள்ளலை இழை இழையாக கேட்பவருக்குள் துடிக்கச் செய்யும்.  அந்தப் பாடல் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ. 

  நகை முரணாக இளையராஜாவை நான் கடுமையாக விமர்சிக்கும் சகலகலாவல்லவன் என்ற குப்பையில் கிடைத்த ஒரே ஒரு அசந்தர்ப்பமான, அதிரடியான   பாடல்தான் இந்த  இளமை இதோ இதோ. சொல்லப் போனால் அந்தக் கண்றாவிப் படத்தின் ஒரே ஒரு saving grace இந்தப் பாடலே.

   எண்பத்தியிரண்டிலிருந்து ஏறக்குறைய 25 வருடங்களாக நமது ஒவ்வொரு புத்தாண்டின் துவக்கமும் இந்தப் பாடலின்றி அமைந்ததில்லை. இதை சமன் செய்யும் மற்றொரு பாடல் இன்றுவரை கானல் நீர்தான்.  இளையராஜாவின் இசையில்  அரிதாக அகப்படும் விரைவான எல்லையற்ற கொண்டாட்டம் இதில் ஏகத்துக்கும் இரைந்திருக்கும். அதைவிட மிக முக்கியமாக இன்றைய நவீன இசைக்கு சற்றும் குறையாத  பொலிவுடன் இன்றும்  இது ஒலிப்பது ஆச்சர்யம்தான்.

  பாடல் வரிகள் வழக்கம்போலவே சராசரி வகை. குத்துவேன் வெட்டுவேன் பூ சுத்துவேன் குஸ்தி போடுவேன் என்று வாலித்தனம் (காலித்தனம்!) வரிக்கு வரி தெறிக்கும் முரட்டுத் தற்பெருமை பேசும் பாடல். அதிலும் ஆரம்பத்தில் வரும் புத்தாண்டு வாழ்த்துக்குப் பிறகு எந்த இடத்திலும்  ஒரு புத்தாண்டுப் பாடலுக்கான எந்தவித தனித்துவமும் இல்லாத ஒரு டெம்ப்ளேட் ஹீரோயிஸம் துடிக்கும்  நடனப் பாடல். இருந்தும்  இளையராஜாவின் குதூகல இசையில் இந்தப் பிழைகள் கரைந்துபோய் விடுகின்றன.

   பாடலின் துவக்கத்தில் வரும் அந்த டெம்போ எகிறும் டிரம் இசை போனி எம் மின் நைட் பிளைட் டு வீனஸ் பாடலின் பிரதியாக இருந்தாலும் அதன் பின் இளையராஜா பாடலை தமிழ் பாணிக்கு கொண்டுவந்துவிடுகிறார். ஏகத்தும் கிடார், டிரம்பெட், டிரம்ஸ் என அந்த இளம் வயதில் அசுர அதிரடியாக இப்பாடல் என் செவிகளை நிரப்பியது. எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் காட்டிய  ஆனந்த உணர்வை இளமை இதோ வில் மீண்டும் கண்டேன்.

   பாடல் வந்த புதிதில் இதை நானும் எனது நண்பர்களும்  கொண்டாடியது என் நினைவில் நிழலாடுகிறது. இதே போன்று இன்னொரு பாடல் எப்போது வரும் என்ற என் ஆவல் எனக்குள் ஒருவன் படத்தின் மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு பாடலில்தான் நிறைவேறியது.  அதற்குள் எனது பாதையில் மேற்கத்திய மலர்கள் பூத்துவிட்டன.

 அதே சமயத்தில் இதே படத்தின் மற்ற அனைத்துப் பாடல்களும் இளையராஜா பற்றிய எனது பார்வையை முற்றிலும் மாற்றியதும், அவரது இசையை விட்டு நான் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வந்ததும்  என் நினைவுக்கு வருகிறது.

  இருந்தும் இளமை இனிமை கொண்ட இன்னொரு புத்தாண்டுப் பாடல் நம் இசையில் பிறக்கும் வரை.....  ஒவ்வொரு புத்தாண்டும் கொண்டாடும் பாடலாகவே  இது இருக்கப் போகிறது.




அடுத்து: இசை விரும்பிகள் XXX :  எண்பதுகள் - இசையுதிர்காலம்.

Saturday, 19 December 2015

இசை வசை

நூற்றாண்டு மழையை நாம்  கடந்து விட்டோம் என்று தோன்றுகிறது. காலையில் நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது  "நீ ஏன்டா நேத்து லீவு போட்ட?" என்று ஒருவர் மற்றொருவரை கடுமையாக விளாசிக்கொண்டிருந்தார். கொஞ்சம் நகர்ந்ததும் இன்னொருவர் போனில், "நீ என்ன பெரிய **** ?" என்று மிக மென்மையாக குசலம் விசாரித்தபடி தென்பட்டார். அடுத்து இருவர் சாலையில் எதிர் எதிராக நின்றபடி ஒரு கைகலப்புக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். மழை உணர்த்திய மனிதத்தையும், அது கரைத்துவிட்ட பிழைகளையும் நாம் வழக்கம்போலவே மறந்துவிட்டோம். உண்மைதான். சென்னை தன் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. 

மக்களின் துயரங்களும் கண்ணீர்த்துளிகளும் வடியும் முன்னே பல செய்திகள் மழையை பின்னுக்குத் தள்ளி நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வந்து உட்கார்ந்துவிட்டன. அரசியல் வசவுகள், பேரிடர் அறிவிப்புகள், விசாரணை விபரங்கள், இந்த அசாதரணமான கண்ணீர் நிகழ்விலும் ஆதாயம் தேடும் அரசியல் காய் நகர்த்தல்கள் என வரிசையான அபத்தமான அதிரடிகள் தலைப்புச் செய்திகளாக நாம் படிக்கப்படக்  காத்திருக்கின்றன.

இந்த வேளையில்  ஆண் தினவெடுத்த இருவர் பாடல் என்ற பெயரில் எதையோ பேசி, அதற்கு சில வாத்தியங்களை வைத்து இசை என்று ஒரு கருமத்தை அமைத்து பிரசித்தி பெற்ற ஒலியுடன் வெளியிட, அந்த ஒலிப் பாடல் உண்டாக்கிய அலையில் சென்னை வெள்ளமே மூழ்கி விட்டது. நம் தமிழ் இசை இத்தனை தூரம் ஒரு "உயரிய" இடத்திற்கு செல்லும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு. தடை செய்யவேண்டிய கருமாந்திரங்களை நாம் அப்போதே பாரபட்சமில்லாமல் தூர  தூக்கி வீசி எறிந்திருந்தால் இத்தனை ஆவேசத்திற்கு இப்போது அவசியம் ஏற்பட்டிருக்காது.

தடை செய் கைது செய் போன்ற ஆர்ப்பாட்டங்கள் பெண்களால் தற்போது முன்னிறுத்தப்படுவது இதற்குத் தேவையான எதிர்வினையே.   ஆண் திமிர் கொண்ட வசனங்கள் பெரிய பெரிய நடிகர்களால் பேசப்பட்டு, ஆராவாரமான கைத்தட்டல்கள் பெறப்பட்டு, பெண் எப்படி இருக்கவேண்டும் என்ற ஒரு சார்பான சிந்தனையை பொதுவானதாக கட்டமைத்த நமது சினிமா அதன் அடுத்த பரிணாமமாக பாடல்கள் மூலம் பெண்களின் மீது வன்முறை நடத்தியது. இந்த இசை வசை ஏறக்குறைய முப்பது வருட பாரம்பரியம் கொண்டது. இன்று விமர்சனக் கோட்டுக்கு மேலே உட்கார வைக்கப்பட்டிருக்கிற சிலரால் போடப்பட்ட  இந்த ஆபாசத்தின் வித்து புயலில் சிக்கிக்கொண்ட மரம் போன்று தற்போது தலைவிரித்து ஆடுகிறது. எனவே  இந்த இருவர் மட்டுமே குற்றவாளிகள் என்று நம்ப நான் தயாராக இல்லை. அவர்களுக்கு  ஏதுவான இந்தப் "புனிதப் பாதையை" அமைத்துக் கொடுத்த பல "புண்ணியவான்களை" நாம் மறந்துவிட்டு, அவர்களைப் பற்றிப் பேசாமல் இவர்களை  நோக்கி சாட்டையை சுழற்றுவதில் அர்த்தமில்லை.

இந்தப் பாடலை எதிர்த்த பலரில் ஒருவரது கருத்து என்னை கடும் கோபம் கொள்ளச் செய்தது. "இது போன்ற ஆபாசப் பாடல்களை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும்" என ஒரு காராசாரமான கருத்தை அவர் சொல்லியிருந்தார். படித்தபோது எனக்கு வியப்பு வரவில்லை. ஏனென்றால் சிம்பு, அனிரூத் போன்றவர்களுக்கு எந்தவிதமான தண்டனை சரியோ அது அவருக்கும் பொருந்தும். அவர் வேறு யாருமல்ல. இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன்தான் அந்த ஆவேசமான "திடீர் புனிதர்".

பள்ளி நாட்களில் நான் எழுத நினைத்த  ஒரு கதையின் தலைப்பு: "திருடுவது மகா குற்றம் என்றான் கொலைகாரன்."  க அ வின் கருத்தைக் கண்டதும் எனக்கு ஏனோ அந்த தலைப்புதான் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் எண்பதுகளைத் திரும்பிப் பார்த்தால், அலைகள் ஓய்வதில்லை என்றொரு படத்தை அடையாளம் காணலாம். அதில் வரும் ஒரு பாடல் அப்போது விடலைகளை அதிரடித்தது. அந்தப் பாடலைப் பாடாத உதடுகள் வெகு சிலவே. வாடி எ கப்பக்கிழங்கே என்ற அந்த கருமாந்திரம்  அப்போது போட்ட ஆபாசக் கூத்து இன்டர்நெட், யூ ட்யூப் இல்லாமலே சமூகத்தை அதிர்ச்சியடையவைத்தது. ( பொதுவாக அழகான பெண்களை கிழங்கு மாதிரி இருக்கா என்பார்களாம். கப்பக்கிழங்கு கேரளாவில் பிரசித்தி பெற்றதாம். மேலும் படத்தின் நாயகி ராதா கேரள தயாரிப்பு என்பதால்  வாடி எ கப்பக்கிழங்கே என்று தான் எழுதியதாகவும் இதே க அ பெருமை பொங்க விளக்கம் வேறு அளித்தார்! அதே சமயம் இதே படத்தில் இடம் பெறாத மிக அருமையான புத்தம் புது காலை பொன்னிற வேளை என்ற பாடலையும் இவர்தான் எழுதினார்.)

தமிழ் சினிமாவில் பெண்கள் மீதான வார்த்தை வன்முறை காலம் காலமாக எந்தவித எதிர்ப்புகளையும் சந்திக்காமல் திடமாக வளர்ந்துவந்தது. 70கள் வரை மரபு என்ற சொல்லுக்குள் புகுந்துகொண்டு திரைப்படத் துறையினர் பெண்களை ஆண்களுக்கான மற்றொரு உப பொருளாக மூளைச் சலவை செய்துவந்தார்கள். ஆணை எதிர்த்துப் பேசுவது, வேலைக்குச் செல்வது, ஆணை விட அதிகம் சம்பளம் வாங்குவது, அவன் காலை காலை வேளையில் தொட்டுக் கும்பிட்டாமல் இருப்பது போன்ற அம்சங்கள் ஒரு குடும்பப் பெண் தவிர்க்கவேண்டிய குணாதிசியங்களாக ஒரு அரைவேக்காட்டுச் சிந்தனை கட்டமைக்கப்பட்டது. இரண்டு திருமணம் செய்வதே ஒரு பெண்ணின் "கற்பு" சார்ந்த விஷயமாக பார்க்கப்பட்டது. அப்படி எட்டாவது அதிசயமாக அவள் இரண்டாம் திருமணம் செய்துகொண்டாலோ அவள் தன் முதல் கணவனுடன் உடல் ரீதியாக எந்தவித தொடர்பும் கொண்டிராதவளாக இருக்கவேண்டிய நிர்பந்தமும் அந்தப் பெண்ணின் மீது திணிக்கப்பட்டிருந்தது. 2000த்தில் கூட இந்த மக்கிப்போன எண்ணம் மாறவில்லை. ரிதம் என்ற படத்தில் திருமணமான அன்றே தன் புது  மனைவியை  தொடக்கூட நேரமில்லாமல் கணவன் அவரச வேலையாக அவளை  விட்டுப் பிரிந்து செல்லும் சமயத்தில் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதாக திரைக்கதை அபாரமாக பின்னப்பட்டிருக்கும். என்ன ஒரு புனிதமான கற்பனை நமது திரைத்துறையினருக்கு! ஆனால் தினவெடுத்த ஆணோ ஆயிரம் திருமணங்கள் செய்வதை கண்டு  மக்கள் அட்சதை போடாத குறையாக களி கூர்ந்து பரவசமடைந்தார்கள். ஆனால் பெண் என்றால் ஒரே முறைதான். கல்யாணம் மட்டுமல்ல. காதலும்தான். இரண்டாம் காதல் கூட  ஒரு பெண்ணுக்கு திரையில் அனுமதிக்கப்படவில்லை. இந்த புழுத்துப் போன ஆண் வர்கத்து அகம்பாவம் பெண்ணை தனக்கு விருப்பம்போல வரையறுத்தது மட்டுமில்லாது பெண்களையே அதுதான் உண்மை என நம்பவும் வைத்துவிட்டதுதான் கொடுமை.

இதன் நீட்சியாக வெளிப்பட்டதுதான் இசை வசை. பெண் பற்றிய ஒரு கருத்தியல் அடிமைத்தனம் கட்டமைக்கப்பட்டவுடன் அடுத்த கட்டத்திற்கு தமிழ்த்திரை நகர்ந்தது.   60களிலும் 70களிலும் கொஞ்சம் கவிதை கலந்த இச்சையுடன் சீண்டிய ஆண், எண்பதுகளில் கோவில் காளை போல அடங்காது அடாவடியாக பெண்ணை தன் பாடல்களால் இம்சித்தான். ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும், நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது என்றெல்லாம் பெண்ணை பகடி செய்தவன், பாரதிராஜா வகையறாக்களின் வருகைக்குப் பிறகு வாடி என் கப்பக்கிழங்கே என்று துணிந்து அவளது முந்தானையை பிடித்து இழுத்தான். மைனா மைனா மாமா புடிச்ச மைனா என்று நாலந்திரமாக சீண்டினான். வாட வாட்டுது என்று பாலியல் தொந்தரவு செய்தான். பொன்மேனி உருகுதே என்று பெண்ணை வெறும் போகத்துக்காக ஆயத்தம் செய்தான்.

இதன் உச்சமாக நிலா காயுது பாடலில் அவனும் அவளும் சேர்ந்து அடித்த கூத்து மிக மிக ஆபாசமான, அருவருப்பானது. அத்தனை அருவருப்பான பாடல் தமிழில் அதுவரை வந்ததில்லை. இனிமேலும் வரப்போவதில்லை. அந்தப் பாடலுடன் தற்போதைய பிரச்சினைக்குரிய ஒலிப் பாடலை ஒப்பிட்டால் யார் அதிகமாக நம் சமூகத்தை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள் என்று புரியும். தடை செய்திருக்கப் படவேண்டிய பாடலாகிய நிலா காயுது வை அப்போது தமிழர்கள் ரசித்தது இன்றைய தினத்தில் மிகவும் வெட்கப்படவேண்டிய ஒன்று. இதைத்தான் இணையத்தில் ஒரு  பதிவர் நாம் நிலா காயுது பாடலையே ரசித்தோம் என்று நக்கலாக குறிப்பிட்டிருந்தார்.


பாரதிராஜாவின் வருகை ஒரு திருப்பத்தை தமிழ்த் திரையில் கொண்டுவந்தது என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் அவரோடு வந்த மாற்றம் தமிழ்த் திரை மற்றும் திரையிசையை சீரழிக்க பெரிதும் துணைபோனது பற்றி யாரும் பேசுவது கிடையாது. இந்த பாரதிராஜா- இளையராஜா வகையறாக்கள் வந்த பின்னர்தான் நம் இசை இத்தனை தூரம் கேடு கெட்டு நாற்றமடிக்க ஆரம்பித்தது. முதலாமவர் தன் முதல் படத்திலேயே கதாநாயகியை தண்ணீரில் உடை நனையாமல் ஒரு நதியை கடக்க வைத்து ஆண் வர்க்கத்துக்கே  சேவை செய்தார். பதினாறு வயதினிலே அப்படி வெறியாட்டம் போட்டதற்கு பாரதிராஜா விஷம் போல கொஞ்சமாக  செலுத்தியிருந்த பாலியல் காட்சிகளுக்கும் பங்குண்டு.  அதன் பின் சிகப்பு ரோஜாக்கள் என்று பெண்களை கொலை செய்வதை பெருமிதத்துடன் காட்சிபடுத்தினார். அதில் வரும் ஒரு வசனம் மிகப் புகழ் பெற்றது. அது பெண்களை எத்தனை தூரம் மனதளவில் காயப்படுத்தியிருக்கும் என்ற சிந்தனையே இல்லாமல் நான் உட்பட சிறுவர்கள், இளைஞர்கள் எல்லோரும் உரக்க பகிர்ந்து கொண்டதை நினைத்தால் இப்போது வலிக்கிறது. அந்த வசனம் இதுதான்;"இந்த பொம்பளங்களே இப்படித்தான். குத்துங்க எஜமான் குத்துங்க. நல்லா குத்துங்க". (திருமணம் ஆகாத நாதாரிகள் இப்படி எழுதினால் போடா என்று விட்டு விடலாம். ஆனால் பெண் மூலம் கிடைக்கும் அனைத்து சுக போகங்களையும் அனுபவித்துவிட்டு பணத்துக்காக அவளை இந்த அளவுக்கு காலில் போட்டு மிதிக்கும் ஆண் மனப்பான்மையை மன்னிக்கவே முடியாது.) இது பாரதிராஜா தமிழ் சமூகத்துக்கு அளித்த இரண்டாவது கொடை.

நிழல்கள் என்ற சகித்துக்கொள்ளக்கூடிய படம் எடுத்து கையை சுட்டுக்கொண்ட பிறகு சிலிர்த்துக்கொண்டு அவர் கொடுத்த அடுத்த ஆபாசம்தான் அலைகள் ஓய்வதில்லை. இன்றைக்கு நம் திரையில் பள்ளிச் சிறுவர்கள் சிறுமிகள் காதல் செய்வது  அந்தப் படத்தின் நீட்சியே.  காதல் ஒரு புனிதம் என்ற புரட்டை கடை விரித்து பள்ளிக்கூடப் பருவத்தில் காதல் செய்வது காதலின் மகத்துவம் என்ற புதிய "புரட்சியை" அலைகள் ஓய்வதில்லை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தது.

தற்போதைய ஒலிப்பாடல் கூட ஒரு மோசமான கெட்ட வார்த்தையையோடு முடிந்துவிடக் கூடியது. அதை நீக்கிவிட்டால் அது மற்றொரு காதல் தோல்விப் பாடல்தான். ஆனால் வாடி எ கப்பக்கிழங்கே போன்ற இளையராஜா அமைத்த பல பாடல்கள் முழுவதும் ஆபாசத்தில் முக்கி எடுக்கப்பட்ட கடைந்தெடுத்த கருமாந்திரங்கள். பள்ளிச் சிறுவர்கள் பெண்களை குரூரமான வக்கிரத்தோடு இழிவு செய்ய ஏதுவான பாடல்கள் பலவற்றை  அவர் வெகு அலட்சியமாக அமைத்ததோடு மட்டுமில்லாது அந்த ஆபாச பாணியை தன் புதிய இசை வடிவமாக சுவீகரித்துக்கொண்டார். ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா பாடல் வந்த புதிதில் சில இடங்களில் பெரு உஷ்ணத்தை சந்தித்தது.அதே போலவே கடல் மீன்கள் படத்தின் மதனி மதனி மச்சான் இல்லயா இப்ப வீட்டுல பாடலும் சர்ச்சைகளில் சிக்கி தன் பல்லவியை மயிலு குமரா என்று மாற்றிக்கொண்டது.

இணையத்தில் ஒரு இராவாசி சின்ன வீடு படத்தில் வரும் ஒரு கண்றாவிப்பாடலை (பாக்கியராஜ் என்ற பாரதிராஜாவின் அடுத்த உருவாக்கம் இதில் பெண்களை நான்குவிதமாக பகுத்து அதை வைத்து கேவலமாக ஒரு பாட்டு வேறு பாடுவார்!) குறித்து சிலாகித்து (வழக்கம் போல முதல் சரணத்தில் இரண்டரை செகண்டுக்கு வரும் புல்லாங்குழல் ...வகை சிலாகிப்பு) எழுத ஒரு பெண் பதிவர் வெகு அலட்சியமாக "நாங்களெல்லாம் இது போன்ற பாடல்களை கேட்பதேயில்லை. முதல் வரியைக் கேட்டதுமே கடந்து போய்விடுவோம்" என்று சொல்லியிருந்தார். அப்படியானால் இளையராஜாவின் நிறைய பாடல்களை நம் பெண்கள் இது போலத்தான்  கடந்து சென்றிருப்பார்கள் என்று தோன்றுகிறது.  ஏனென்றால் வீட்டுக்குள் நிலா காயுது, நேத்து ராத்திரி யம்மா, பொன்மேனி உருகுதே, போன்ற பல பாடல்களை அம்மா அப்பா சகோதர சகோதரிகள் சகிதமாக கேட்பதற்கு இளையராஜா ரசிகர்களே விரும்பமாட்டார்கள்.

எங்கே நிம்மதி என்ற புதிய பறவை படப் பாடலில் கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே என்ற ஒரு வரி என்னை கேட்ட முதல் நொடியிலேயே அதிர்சிக்குள்ளாக்கியது. என்ன ஒரு அராஜக மனப்பான்மை! ஆணாக இருப்பதாலேயே தமிழ் சினிமா அவனுக்கு பெண்களை இழிவுபடுத்தும் எல்லா சுதந்திரங்களையும் கொடுத்துவிடுகிறது என்ற எண்ணமே என்னை திடுக்கிடவைத்தது.

கண்ணதாசன் சற்று கவிதை நயத்துடன் குறியீடாக உணர்த்திய ஆணாதிக்க அகம்பாவத்தை வாலி வைரமுத்து போன்றவர்கள் வெளிப்படையாகவே கவிதையாக வடித்தார்கள். எப்படி எப்படி சமஞ்சது எப்படி? பொத்தி வச்ச மல்லிக மொட்டு போன்ற பாடல்கள் பெண்களை இழிவு செய்த பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது.

பெண்களை பாடல்கள் மூலம் வன்முறை செய்யும் இசையை தமிழில் வெற்றிகரமாக அறிமுகம் செய்தவர் இளையராஜா. வாங்கோன்னா வில் விதைத்த இந்த விஷ வித்து பின்னர் ஆபாச மரமாக வளர்ந்து கிளை விட்டது மறுக்க இயலாத உண்மை. இதை நான் துணிந்து வெளிப்படையாகவே சொல்கிறேன். சொல்ல நினைப்பவர்கள் சற்று தயங்குகிறார்கள். அதுவே வித்தியாசம்.

இளையராஜா ஆரம்பித்துவைத்த இந்த இசைச் சீரழிவை எண்பதுகளில் யாரும் மிகத் தீவிரமாக எதிர்க்காததால் (தன் தலையைச் சுற்றி தானே ஒரு ஒளிவட்டம் போட்டுக்கொண்டதால்) தெருக்களில் சிதறும் ஆபாச வார்த்தைகள் தமிழ்ப் பாடல்களுக்குள் எந்தவித சிரமமுமின்றி புகுந்துகொண்டன. நல்ல கவிதை இலக்கியத்தரமான வார்த்தைகள் என்ற பேதமெல்லாம் இளையராஜாவின் இசைக்கு ஒரு பொருட்டே அல்ல. வெறும் பத்து வார்த்தைகளைக் கொண்டே எந்தவித கவிதை அனுபவமும் தராத சக்கைகளை அவர் தயாரித்து வெளியிட்டுக்கொண்டேயிருந்தார். தமிழிசையின் தரம் அதி வேகமாக படு பாதாளத்திற்கு சென்றுகொண்டே இருந்தது. பெண்களை வக்கிரமாக சீண்டும் இசை இளையராஜாவின் தவிர்க்க முடியாத இசை வடிவமாக  நிலைபெற்றது.

இளம் பெண்கள் என்றில்லை குடும்பத்து பெண்களைக் கூட இவரது இசை விட்டுவைக்கவில்லை. இசைக் குயில் சுசீலாவை வாங்கோன்னா என்று கண்ணியமில்லாமல் பாடவைத்து அவர் மீது இருந்த வஞ்சத்தை தீர்த்துக்கொண்டார். சுசீலா அப்படி பாடியது அப்போது பலரின் புருவத்தை உயர்த்தியது. ஜானகி பற்றி கேட்கவே வேண்டாம். அவரை மிமிக்ரி பாடகியாகவும் , கட்டில் பாடகியாகவும் அவருக்கு அபாரமாக புதிய அரிதாரம் பூசினார். ஜானகி இவரது இசையில் பாடிய "அந்த ஓசை" கொண்ட பாடல்கள் எண்பதுகளின் மத்தியில் அனேகமாக அனைத்துப் படங்களிலும் இடம்பெற தவறியதேயில்லை. அதையெல்லாம்  வீட்டிற்க்குத் தெரியாமலோ, தெரு டீக்கடைகளிலோ, வாக் மேன்  வசதியோடோதான் கேட்கவேண்டும்.  வீட்டில் தப்பித் தவறி கேட்டாலோ செருப்படிதான் கிடைக்கும்.

 வெள்ள நிவாரண நிகழ்ச்சிக்காக இளையராஜா சென்றிருந்தபோது தற்போதைய ஒலிப் பாடல் குறித்து ஒரு நிருபர் அவரின் கருத்தைக் கேட்க இளையராஜா தன் ட்ரேட்மார்க் ஆணவத்துடன் "ஒனக்கு அறிவிருக்கா?" என்று நிருபரை விலாச, பொது இடங்களில் எப்படி பேசவேண்டும் என்ற சபை நாகரிகம் அறியாத இந்த மனிதரைக் குறித்து பலர்  வெடித்து எழுதியிருப்பதை படித்து ஆச்சர்யப்பட்டேன். இளையராஜா என்ற தனக்குத் தானே ஒளி வட்டம் போட்டுக்கொண்ட இந்த அகம்பாவத்தின் ஊற்றை நாம் மிகையாகப் புகழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் இப்போதும் நமக்கு வராவிட்டால் சிம்பு, அனிரூத் வகையறாக்களை குறை சொல்வதில் பயனில்லை.

கீழே இருப்பது சுரேஷ்  கண்ணன் என்ற பதிவர் தனது  ஃபேஸ் புக்கில் எழுதியிருப்பது. நான் எனது பதிவுகளில் இளையராஜாவை காட்டமாக விமர்சிப்பதாக வரிந்து கட்டிக்கொண்டு முஷ்டியை மடக்கும் இராவசிகள் இதைப் படிக்கவும். இதுதான் நல்லிசை நாடும் இசை விரும்பிகளின் ஆதங்கம் கருத்து எல்லாமே.

ஆயிரம் முக்கல் முனகல்களுடன் பல அருவருப்பான பாடல்களை தம்முடைய தொழிலுக்காக செய்திருக்கும் ஓர் இசையமைப்பாளர் தன்னை ஒரு சுத்த ஒழுக்கமானவனாக உருவகித்துக்கொண்டு சீ சீ என்று அருவருப்பு காட்டும் அந்த போலித்தனம்தான் அருவருப்பூட்டுகிறது.

இதை மேலும் படிக்க கீழ் கண்ட தொடர்புகள்  உதவும்.

http://avargal-unmaigal.blogspot.com/2015/12/ilayaraja-answering-beep-song.html

http://anbanavargal.blogspot.in/2015/12/blog-post_19.html


இத்தனை அருவருப்பான சாக்கடைப் பாடல்களை அமைத்தவரிடம் போய் அவருடைய கோடிட்டிற்கு கீழே உள்ள ஒரு ஆபாச பாடலைப் பற்றிக் கேட்டால் அவரால் என்ன பதில் சொல்ல முடியும்? அதனால்தான் தன் மீது எந்த வித குற்றச்சாட்டும் விழாதவகையில் அவர் கோபம் ஆணவம் என்ற போர்வை கொண்டு தன்னை பாதுகாத்துக்கொண்டார் என்று தோன்றுகிறது. வழக்கம் போலவே இராவாசிகள் இதை அந்த நிருபருக்கு என்ன திமிர் என்று விமர்சனம் செய்கிறார்கள். பாவம் இப்படியெல்லாம் அபத்தமான போலி கேடயங்கள் அவர்களுக்குத் தேவைப்படுகிறது குறித்து பரிதாபம்தான் ஏற்படுகிறது.

இளையராஜா ஆரம்பித்த இந்த இசைச் சீரழிவே இன்றைய என்ன ***** லவ் பண்றோம் நிலைக்கு வந்திருக்கிறது. இன்றைய அறிவியல் விரைவு யூ டியூப் என எண்பதுகளில் சாத்தியப்பட்டிருந்தால் இளையராஜாவுக்கும் சிம்பு அனிரூத் கதிதான் ஏற்பட்டிருக்கும்.  கொஞ்சம் பிழைத்துகொண்டார்.  இந்த ஆபாசம் பற்றி பேச கங்கை அமரனுக்கோ, இளையராஜாவுக்கோ பாரதிராஜாவுக்கோ, வைரமுத்துவுக்கோ  கொஞ்சமும் அருகதை கிடையாது. சிம்பு மற்றும் அனிரூத் இருவரும் இந்த ஆபாச இசைச் சாக்கடையின் மற்றொரு துளி. அவர்களை மட்டுமே  தண்டனைக்கு உட்படுத்துவதில் நாம் ஒரு நல்ல இசை பாரம்பரியத்தை காப்பாற்றிவிட்டதாக வீண் கற்பனை செய்துகொள்ளவேண்டாம். அவர்கள் இந்த அசிங்கமான பாரம்பரியத்தை வளர்த்துவரும் கிளைகள்.  நான் வேர்களை குறித்துப் பேசுகிறேன். நம் இசையின் இன்றைய சீழ்  பிடித்த அருவருப்பின் ஆணிவேர் இளையராஜா.

என் கருத்துடன்  ஒன்றிக்க முடியாதவர்கள்  நிலா காயுது பாடலை தங்கள் வீட்டு வரவேற்பறையில் அம்மா மனைவி மகள் சகிதமாக உட்கார்ந்து கேட்கக்கூடிய அராஜக தைரியம் கொண்டவர்களாகத்தான் இருக்கமுடியும்.

என்னை எதிர்ப்பதற்கு முன் அந்த அசிங்கத்தையும் செய்துவிட்டு வாருங்கள்- மனசாட்சி என்று ஒன்று உங்களுக்கிருந்தால்.




Saturday, 21 November 2015

இசை விரும்பிகள் XX VIII - எம் எஸ் வி : தீரா இசை.

                           




                       உணர்வு நரம்புகளை உரசும் உறவுமுறைகளின் உயிர்ப்பிசை                                    என்றன்றைக்கும் ரசிக்கும் ஒரு மழலையின் சிரிப்பலை 
                              இரவு வானில் ஒளிரும்  ஒற்றை நட்சத்திரப் பிரகாசம்  
                                இதயத்தை இனிமையாக  இதமூட்டும்  ஆலய ஒலி                                                        ரத்தத்தில் ஒன்றாகக்  கலந்த  கொள்கை கீதம்  
                                       காற்றில் மிதக்கும் சாயம் போகா சங்கீதம்     
                                         பெரு மழையிலும் கரையாத வானவில் 
                                            கவிதைகள் நெய்த இசைக்காவியம் 
                                                 மனதை தைக்கும் நெருப்பு ஊசி   
                                                   கசிந்துருகும் துயரத்தின் வலி
                                                       வண்ணம் வற்றா  தூரிகை  
                                                         கண்ணியக் காதல்சுவை        
                                                           மொழியின் கண்ணாடி 
                                                              இடைவிடா இன்பம் 
                                                               இரவா இசையூற்று
                                                                   ஜீவத்  தென்றல்  
                                                                         சுடும் பனி 
                                                                              
          
                                 

   
  



    அலைகள் போல நம் மீது மோதும் வாழ்வின் வசந்தங்களும், வருத்தங்களும் நம் மனதில் ஆழத்தில் நினைவலைகளாக படிந்து மிச்சமிருக்க, அவற்றை சில நேரங்களில் ஒரு பாடல் எந்தவித முன் தயாரிப்புமின்றி ஒரே நொடியில் சட்டென  உயிர்ப்பித்துவிடுகிறது. இசைக்கு மட்டுமே உள்ள இந்த அபூர்வ மாயத்  தொடுகை சிந்தனைகளைத் தாண்டிய ஒரு கடவுள்தனம் கொண்டது. உறங்காத நினைவுகளின்  இருப்பை அவ்வப்போது உறுதி செய்யும் இந்த இசை ஒரு நெருப்புத்துளி. ஒரு பொறி போதும். நினைவுகள் காட்டுத்தீ போல பரவி  நம் நெஞ்சத்தை எரித்துவிடும். எத்தனை ஆனந்தங்கள், களிப்புகள், ஏகாந்தங்கள் , குதூகலங்கள், துயரங்கள், சோகங்கள், வலிகள், ஏமாற்றங்கள் இந்த இசைக்குள் விடுபடக் காத்திருக்கின்றன?

   எழுபதுகளில் எங்கள்  வீட்டில் தினந்தோறும் என் சகோதரிகளுக்கும் எங்களுக்கும் (என் அண்ணன் உட்பட) ஒரு இசைப் போர் நடக்கும். வானொலியில் நான் கேட்கும் பாடல்களை அவர்கள் ஒரு சொட்டு கூட மருந்து போல உள்வாங்கிக் கொண்டதில்லை.  "இதெல்லாம் என்ன பாட்டு?" என்ற விமர்சனம் எப்போதும் அப்போதைய புதிய பாடல்கள் மீது அவர்கள் வைத்த முத்திரைக் குற்றச்சாட்டு. "சம்பந்தமில்லாத இசை. பாடல் ஒரு பக்கம். இசை இன்னொரு பக்கம்." என்று நான் லயித்துக் கேட்ட பாடல்கள் மீது கருணையில்லாமல்  அவர்கள் ஆயிரம் லிட்டர் பெட்ரோல்  ஊற்றுவார்கள். அதை கேட்கும் எனக்குத்தான் பற்றிக்கொண்டு எரியும். பழைய பாடல்கள் மீது அவர்களுக்கிருந்த இந்த ஈர்ப்பு என்னை மேன்மேலும் அவைகளை விட்டு  விலகிச் செல்ல வைத்தது. "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலில் ஒரு குதிரை ஓசை வரும் பார்." என்பார்கள். "நீ கேட்கும் பாடலில் கழுதைதான் கத்துகிறது" என்ற பின்குறிப்பு கட்டாயம் உண்டு. கேட்கவே தேவையில்லை. "சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் பாடல் கேட்க எத்தனை நன்றாக  இருக்கும் தெரியுமா?" என்று என்னால் நினைவு படுத்திக்கொள்ள முடியாத ஒரு பாடலைக்  குறிப்பிட்டு ஏற்கனவே எரியும் எனது நெருப்பில் இன்னொரு குவளை கெரஸின் கொட்டுவார்கள்.  நானோ என்னடி மீனாட்சி  என்றிருப்பேன்.  கடந்து போன பாடல்களை  திரும்பிப் பார்க்க விருப்பம் கொள்ளாத பருவத்தில் இது ஒரு நடக்கவேண்டிய அபத்தம். இப்போதுதான் அது தெரிகிறது.  இந்த விபத்து எல்லோருக்கும் நேர்வதே.

    பழைய பாடல்கள் என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்ளே சிறைபட்டுப்போன கனவுலக  இசை அனுபவங்கள் என்னைத் தீண்டியது எப்போது என்று  ஒரு குறிப்பிட்ட நாளையோ பொழுதையோ என்னால் தீர்க்கமாக சொல்லவே முடியாது.  பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயங்களில் என் நண்பர்களில் சிலர் இவ்வகையான பழைய பாடல்களைக் குறித்து சிலாகித்துப் பேசுவதை நான் கேலியுடன் உள்வாங்கியிருக்கிறேன். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், போனால் போகட்டும் போடா, சட்டி சுட்டதடா என்று என் பள்ளி நண்பர்கள் தத்துவமாக பாடும்போது என் தலை அசையும். நல்ல பாடல்கள்தான்...ஆனாலும் புதிய பாடல்கள் போல இல்லையே  என்ற அவ்வயதுக்குரிய முதிர்ச்சியற்ற எண்ணம் என் உள்ளத்தில் உருவாகும். உண்மையில் எனது சிறு வயது நாட்களில் என் உணர்வுகளுக்கு உணவளித்தது  இந்தப்  பழைய இசையே. இவற்றில் எந்தப் பாடல் என்னை முதலில் கவர்ந்தது என்ற தகவல் என் நினைவடுக்குகளில் தேடியும் கிடைக்கவில்லை. அது அப்படித்தான். ஒரு வானவில் தோன்றும் அந்த ஆச்சர்யமான கணத்தை யாரால் படம் பிடிக்கமுடியும்? இருந்தும் ஆரம்பத்தில் நான் கேட்டு வளர்ந்த இசை ஆலயமான  எம் எஸ் வி என்ற மகத்தான இசைஞரின் பாடல்களைவிட்டு இடையில் வெகு தொலைவு வந்து விட்டபின்னர் மீண்டும் ஏற்கனவே நான் பயணப்பட்ட சாலையைத் தெரிந்துகொண்டது  பற்றி ஆராயத் தோன்றுகிறது.   In  a  way, it's  an  introspection ----- with regret.

     இது எம் எஸ் வியின் இசை ஆளுமை மற்றும் மேதமையை குறித்துப் பேசும் ஒரு இசை விமர்சனக் கட்டுரை இல்லை. அவர் இசையமைத்த படங்களை விவரிக்கும் ஒரு chronology ரகக் கட்டுரையும் அல்ல. அவரை உயர்த்திப் பிடிக்கும் நோக்கத்தில் தனிமனிதத்  துதியாக எழுதப்படுவதும் அல்ல. பரவலாக பல தரப்பட்ட பாடல்களை விரும்பிக் கேட்கும் என்னை "தமிழில் உனக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்?" என யாராவது கேட்டால்  ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஒரு அனிச்சை செயல் போல "எம்.எஸ்.வி." என்று சொல்லும் காரணத்தை விளக்கும் என் ஆத்மார்த்த எழுத்து.  அவ்வளவே.

     "அதோ  அந்த பறவை போல வாழவேண்டும். இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்"   பள்ளிப் பருவத்தில் பழைய பாடல்கள் என்று காதில் என் விழுந்தாலே எனக்குத் தோன்றும் பல பாடல்களில் ஒன்று  இது . இன்னும் கொஞ்சம் என் மூளையில் தேடிப்பார்த்தால் காட்டுக்குள்ளே திருவிழா, வந்த நாள் முதல் இந்த நாள் வரை போன்ற பல பாடல்களை எடுக்கலாம். இருந்தும் அதோ அந்த பறவை ஒரு தனிச் சிறப்பானதுதான். சுதந்திரம் பற்றிய சிந்தனை, மனதில் நிழலாடும் ஹம்மிங், துளிர்ப்பான இசை, நெஞ்சத்தில் ஒட்டிக்கொள்ளும் மெட்டு என எனக்குள் பொங்கி எழுந்தது.

  கொஞ்சம் கொஞ்சமாக பின்னே நகர்ந்து சென்றால், நான்  காலம் தெளிவில்லாத எதோ ஒரு நேரத்தில்  கேட்ட அல்லது அடிக்கடிக் கேட்ட ஒரு பழைய பாடல்  எம் எஸ் வி என்ற இசை ஆளுமையின் போக்கில் என்னை திசை திருப்புவதை உணர்கிறேன். அது நம் உறவு முறையை உன்னதப்படுத்தும் உணர்வின் இசை. அத்தையடி மெத்தையடி ஆடி விளையாடம்மா. ஆடும் வரை ஆடி விட்டு அல்லி  விழி மூடம்மா என்ற தாலாட்டுப் பாடல் எனக்குள் துயரம் தோய்ந்த இனிமைகளை  புதிது புதிதாக உருவாக்கும் ஒவ்வொரு முறை கேட்கும்போதும். சுசீலாவின் குரல் மனதுக்கு நெருக்கமாக  நமது குடும்ப உறுப்பினர் ஒருவரின்  அன்னியோன்ய அரவணைப்பு போல  ஆன்மாவை ஆழமாக ஊடுருவிச் சென்று ஒரு முத்தம் கொடுக்கும். அந்தப் பாடல் எனக்குள் ஏற்படுத்தும் காட்சிகளை விவரிப்பது சற்று இயலாத காரியம்.  இதே அனுபவம் உங்களுக்கும் எதோ ஒரு பாடலில் ஏற்பட்டிருக்கலாம். கனவுகளை விதைக்கும் அந்த இசையை மனதுக்குள் பூட்டிவைத்து அழகு பார்ப்பதே சில சமயங்களில் அழகுதான்.

       எப்போது முதல் முறை என்று தெரியவில்லை. ஆனால் நூறு தடவைகளுக்கு மேலே சிறிய வயதில் கேட்ட அந்தப் பாடல் எப்போதும் கொஞ்சம் தென்றல், கொஞ்சம் பனிச் சாரல், கொஞ்சம் சோகக் காற்று, கொஞ்சம் கூரான கத்தி தரும்  வலி என்று பலவித உணர்ச்சிகளை ஒரு சேர செலுத்திவிட்டுப் போகும். என்னைப் பொருத்தவரை தமிழில் வந்த மிகச் சிறந்த பாடல்கள் என  நீங்கள் நூறு, ஐம்பது இருபது, பத்து ஏன் ஐந்து என்று பட்டியல் போட்டால்கூட கண்டிப்பாக இடம்பெறும் பாடல். இன்னும் நெருக்கி  மூன்று என்று அந்தப் பட்டியலை நீங்கள் சுருக்கினாலும் இந்தப் பாடல் அங்கே இருக்கும். இதற்கு மேலும் நான் இந்தப் பட்டியல்  குறித்துப் பேசினால்  தமிழின் மிகச் சிறந்த பாடல் இதுதான் என்று நான் உணர்த்துவதாக  நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அது எப்படி என்று பார்ப்போம். அதற்கு முன் கொஞ்சம் விஞ்ஞானத்தை தொட்டுக்கொள்வோம்.

      1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா ஒரு  விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதன் பெயர் வாயேஜர்.  இந்த வாயேஜர் மற்ற நாசா விண்கலங்கள் போல ஒரு குறிப்பிட்ட பால்வெளிக் கோளத்தை அறியும் இன்னொரு ராக்கெட் கிடையாது. நிலவையோ சூரியனையோ ஆராயும் சந்திராயன் அல்லது இந்திராயன் போன்ற டிபிக்கல் ராக்கெட் இல்லை இது. இதன் நோக்கம் முற்றிலும் மாறுபட்டது. பூமி என்ற நமது உலகத்தின் முழுமையான வரலாற்றை பிற உயிரினங்கள் ---அறிவியல் மொழியில் வேற்றுகிரகவாசிகள் --- அறிந்துகொள்ளும் வகையில் இந்த வாயேஜர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாசா இந்த விண்கலத்தில் கோல்டன் டிஸ்க் என்றழைக்கப்படும் பெரிய இசைத் தட்டை , குறிப்பாக இரண்டு இசைத்தட்டுக்கள், இதில் பொருத்தி அனுப்பியுள்ளது. இந்த இசைத் தட்டுக்கள் நமது பூமியின் மில்லியன் வருட வரலாற்றை இசைத் துணுக்குக்களாகவும், காண்கிற காட்சியாகவும் பதிவு செய்யப்பட்ட தகவல்களைக்  கொண்டவை.

   கார்ல் சாகன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அஸ்ட்ரோ பிசிசிஸ்ட்ஸ் திடமாக நம்பும் வேற்றுகிரகவாசிகள் இந்த பிரபஞ்சத்தில் எங்காவது இருப்பின் அவர்கள் இந்த விண்கலத்தை அடையாளம் கண்டுகொண்டு அதன் தங்கத் தட்டை தங்களின் அறிவின் மூலம்  புரிந்துகொள்ளக்கூடிய வகையில்  அந்த கோல்டன் டிஸ்க்ஸ்  பல தகவல்களை டாட்ஸ் மற்றும் லைன்ஸ் எனப்படும் டிஜிடல்  செய்திகளாக தனக்குள்  அடக்கியவை. ஒவ்வொரு சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களும்  இவற்றில் உண்டு. ஏறக்குறைய உலகின் அனைத்து மொழிகளிலும்  ஒரு வார்த்தையும் , பலவிதமான பண்பாட்டுக் கூறுகளை  விளக்கும் சிறிய காட்சிகளும்  , அது தொடர்பான  இசை வடிவங்களும்   கொண்ட இந்த தங்கத்தட்டில் நமது தமிழ் சமூகத்தின் அடையாளமாக என்ன இருக்கிறது என்பது குறித்து தெரியவில்லை. வேண்டுமானால் வணக்கம் அல்லது தமிழ் என்ற சொற்கள் இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். இப்போது அதுவல்ல பிரச்சினை.

    ஆனால் தமிழ் இனத்தின் குறியீடாக ஒரு இசைத் துணுக்கை இதில் பொருத்த வேண்டுமானால் அந்த இசைத் துணுக்கு எதுவாக இருக்கும் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு.  ஒரு நண்பரிடம் இது குறித்து விவாதித்துக்கொண்டிருந்தபோது  அவர் "அச்சம் என்பது மடமையடா பாடலை சேர்க்கலாம்" என்று கூறினார். தமிழ் இன அடையாளமாக இந்தப் பாடல் சேர்க்கப்படுவதில் எந்த பிழையும் இல்லைதான். ஆனால் நான் வெறும் வீர எழுச்சியான இசையாக இல்லாமல் மனதை பிழியும் இசைத்துளியாக இருந்தால் அது மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது வெறும் கற்பனைதான். இருந்தும் இந்தக் கற்பனையை சற்று சிரத்தையுடன் கவனமாக செய்ய வேண்டிய கட்டாயம் நமக்குண்டு.

    கேள்வி இதுதான்: ஒரே பாடல். அது நமது தமிழ் இனத்தின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் ஒரு சிறிய துணுக்கில்  வடித்தெடுத்துவிடும் சுவை கொண்டதாக இருக்கவேண்டும்.  அது எந்தப் பாடல்? உங்களின் தேர்வு எதுவாக இருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள். இந்தக் கற்பனை எத்தனை அற்புதமாக இருக்கிறது?

     நமது தமிழ் சமூகத்தின் உயிர் நரம்பை ஒரே வரியில் மீட்டும் அந்த ஒரே ஒரு பாடல் என்னைப் பொறுத்தவரை பாசமலர் படத்தின் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல பாடல்தான். உயிர் நரம்புகளை  ஆழமான வலியுடன் மீட்டிச் சென்று, அந்த வலியின் வேதனையை ஒரு நெருப்புத் துண்டு போன்று நெஞ்சத்தில் அடைகாக்கும் வலிமையான துயரம் இந்தப் பாடல்.  பல்லவியில் வரும்   நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே என்ற  கவிதை மின்னல் கேட்பவருக்குள் செங்குத்தாக இறங்கி ஆயிரம்  கண்ணீர்த் துளிகளை உருவாக்கும். வார்த்தைகளுக்குள் அடங்காத எதோ ஒரு சோகம் உடைந்த கண்ணடித் துண்டு போல மனதின் சுவர்களை கீறிச் சென்று துயரத்தின் ரத்தம் வழியச் செய்யும். வலியின் சுவையை மீண்டும் மீண்டும் ருசிக்க விரும்பும் ஆசையைத் தூண்டும் மெட்டும், கண்ணீர்க் கவிதை வரிகளும், சுகமான சோகத்தை பகிர்ந்துகொள்ளும் பாடகர்களின் உன்னதமான குரல்களும் ஒரு காவியம் பாடும். நமது வீட்டிற்குள்ளே பிணைந்திருக்கும் முதன்மையான உறவுமுறைகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல இதை விட்டால் வேறு என பாடல் இருக்க முடியும்?

     இதே அலைவரிசையில் நீந்தும் மற்றொரு காவிய சோகம் குவிந்த கானம் பாக்கியலட்சுமி படத்தின் மிகப் பிரபலமான மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி   பாடல். ஒவ்வொரு வரியும் பிரிவின் வேதனையை ஜன்னல் இடுக்குகள் வழியே வழியும் மழைத்துளி  போல நெஞ்சத்துக்குள் செலுத்தும். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு சாதாரணமாக கடந்து செல்பவர்களின் இசை ரசனையை நாம் மிகத் தீவிரமாக எண்ணுவது முட்டாள்தனம் என்று நான் எண்ணுகிறேன். அதுபோன்ற இசை சூனியங்களின் விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்துக்கொண்டு அவர்களுக்கு பதில் சொல்வதில்லை. காரணம் இருக்கிறது. ஒருமுறை என் நண்பன் ஒருவனுடன் இசை பற்றிய விவாதத்தின் கடுமையான உஷ்ணத்தில்," மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்ற பாடல் போன்று இன்னொரு பாடலை எனக்குச் சொல்." என்றேன். "என்ன பெரிய பாடல்? எம் எஸ் வி போட்ட பாடல்களிலேயே நினைத்தாலே இனிக்கும் பாடல்கள்தான் சிறந்தவை" என்றான் அவன் சிறிதும் அசராமல்.  நினைத்தாலே இனிக்கும் படப் பாடல்கள் சந்தேகமில்லாமல் சிறந்தவைதான். ஆனால் அதுதான்  எம் எஸ் வி யின் உச்சம்  என்பதை நான் என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை. அதுவாவது பரவாயில்லை. அதன் பிறகு அவன் தனக்குப் பிடித்த பாடலாக ஒன்றைக் குறிப்பிட்டு ,"அடடா! என்ன ஒரு பாடல் அது!" என்று ஆரம்பித்து அதை இசை அமைத்தவரின் பெயரைச் சொல்லி வழக்கமாக அவரது அடிவருடிகள் சிலாகிக்கும் ஒரு கோஷ்டி கானத்தை பாடிவிட்டு ,"உனக்குப் பிடிக்காதா?" என்றான். குமட்டிக்கொண்டு வந்தது. "போய் அதே ரகத்தில் உன் ஆள் எக்கச் சக்கமான  சக்கைப் பாடல்கள் போட்டிருக்கிறார். அவைகளைக்  கேள்.  உன் ரசனைக்கு அதுதான் சரி." என்றேன்.  என் எக்ஸ்ட்ரீம் எதிர்வினைக்கான அவன் குறிப்பிட்ட பாடல் மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே. இவ்வகையான ரசிப்புத் தன்மை ஒருவரின் தனிப்பட்ட டி என் ஏ சம்பந்தப்பட்டது. எந்தவித கிருமிநாசினி கொண்டும் இந்த அழுக்கான ரசனையை கழுவித் துடைத்தெடுத்துவிட முடியாது  என்றாலும், சில இணைகோடுகள் ஒரு அபாரத்தை சில மகா கேவலமான அசிங்கத்துடன் இணைத்துவிடுவதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.

   என்னுடைய பால்ய வயதில், வானொலி என்ற ஒரு சதுரப் பெட்டி சமூகத்தின் மிக முக்கியமான  பொழுதுபோக்கு  சாதனமாக இருந்த காலங்களில் படம், பாடகர்கள், இசையமைத்தவர், பாடலாசிரியர் என்ற எந்த பெயரும்  தெரியாமல் நான் கேட்ட  பல பாடல்கள் மோகனச்  சாரல்களை என் மீது சிதற அடித்திருக்கின்றன. என் மனதில் கவிதைகளை எழுதிச் சென்றிருக்கின்றன. பல குழந்தைப் பருவ நிகழ்சிகளை நினைவுகளாக என் நெஞ்சத்தில் படிவெடுத்திருக்கின்றன. கனவுகளால் என்னைப் போர்த்தியிருக்கின்றன.  என் மூளையின் நியூரான்களில் அந்தப் பாடல்கள் துளித் துளி அமிலங்களாக பதிந்திருக்கின்றன. தேடியும் கிடைக்காமல் பின்னர் திடீரென்று ஒரு நாள் எதிர்பாரா வேளையில் ஒரு தென்றல் போல என்னை நாடி வந்திருக்கின்றன. இசையை வெறுமனே எங்களைப் போன்றவர்கள் கேட்கவில்லை. ஒரு காதில் பாடலும் மற்றொரு காதில் உலக இரைச்சலுமாக நாங்கள் இசையை ரசிக்கவில்லை. ஒரு வரியைக் கேட்டுவிட்டு உடனே அடுத்த பாடல் நோக்கி நகரும் இன்றைய வைஃபை வேகமும் எங்களிடமிருந்ததில்லை. மாறாக இசையை நாங்கள் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு களிப்பான, துயரமான, இனிமையான, கசப்பான, அமைதியான, ஆர்ப்பாட்டமான, குதூகலமான, வேதனையான, தனிமையான, முதிர்ச்சியான, பைத்தியக்காரத்தனமான நிகழ்வுகளோடும் பின்னிப் பிணைந்த  வாழ்வியலின் மற்றொரு பரிமாணமாகவே உள்வாங்கி ரசித்தோம். நீரோடும், உணவோடும் ஒரு சேர அந்த இசையை சுவைத்தோம். பிராணவாயுவுடன் இசையையும் சேர்த்தே சுவாசித்தோம். இசையின் இழைகளை எங்கள் புன்னகைகளும், கண்ணீர்த்துளிகளும், அச்சங்களும், ஆச்சர்யங்களும், ஆனந்தங்களும், அழுகைகளும் பகிர்ந்துகொண்டன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு கதை சொல்லும் ஆழமான அர்த்தம் கொண்டிருக்கின்றன. இசை எங்களைப்  போன்றவர்களுக்கு வெறும்  பொழுதுபோக்கு இல்லை, அலுப்பான கணங்களை நிரப்பும் வெறும் கால நகர்ப்பும் அல்ல. அந்தப் பாடல்கள் அனைத்தும்  எங்கள் வாழ்வின் பொன்னான தருணங்கள். அவைகளே இன்று மீண்டும் வாழ முடியாத என் கடந்த காலத்தை ஒரு வலியுடன் சுவைக்கும் வினோத விருந்து படைக்கின்றன.

     நாளை இந்த வேளை  பார்த்து ஓடி வா நிலா என்ற பாடல் ஒலிக்கும் சமயங்களில் வீடே சற்று அமைதியாகிவிடும். ஒரு குளிர் காற்று என் மீது மோதி விட்டுச் செல்லும். சுசீலாவின் குரல் செல்லும் ஏற்ற இறக்கங்கள் வியப்பை விதைக்கும். என்ன என்ன வார்த்தைகளோ, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, சொன்னது நீதானா சொல்  போன்ற பாடல்களும் இதே திகைப்பை எனக்குள் திணிக்கும். ஏன் இப்படி  என்ற விடை தெரியாத கேள்வி பல வருடங்கள் கழித்து எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.

     பாடல் என்பது கவிதை கொண்ட இசை. (இங்கே நாம் வெறும் இசை என்ற இன்ஸ்ட்ரூமெண்டல் பாடல்களைப் பற்றி விவாதிக்கவேண்டாம். அவை வேறு தளத்தில், வேறு நகர்வில் செல்பவை.)  புனையப்பட்ட ஒரு கவிதையை ஒரு இசைக் கோட்டின் மீது மென்மையாக உட்காரவைப்பது மெட்டு என்னும் சாகசம். அடுத்த நிலையாக காற்றில் கலந்து, கரைந்து உயிர்கொண்டு உலவும்  இசையை தன் கற்பனையில் தேடிப்  பிடித்து,  அந்தக் காற்றை வார்த்தைகளுக்குள் ஒரு இசைஞன் சுவாசமாக செலுத்தும்போது கவிதையும், மெட்டும், குரலும், இசையும் சேர்ந்து ஒரு பாடலாக உயிர்பெற்று எழுகிறது. இருந்தும் இந்த மாயாஜாலம் ஏறக்குறைய அனைத்துப் பாடல்களிலும் சாதராணமாக நடைபெறும் இயல்பான ஒன்றுதான். ஆனால் ஏன் நம் மனம் ஒரு சில பாடல்களை நோக்கியே திரும்புகிறது என்பதற்கு மிக மையமான காரணம் ஒன்று இருக்கிறது.

     ஒரு முறை  தேநீர்க் கடையொன்றில்  எப் எம் வானொலியில்  ஒலித்த நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே என்ற பாடலை ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். கூட இருந்த என் நண்பரோ என்னைக் கிளம்பும்படி அவசரப்படுத்தினார். "பொறுங்கள். இந்தப் பாடல் முடியட்டும்." என்றேன். கொஞ்சம் விநோதமாக என்னைப் பார்த்து, "அப்படி என்னதான் இந்தப்  பழைய பாடலில் இருக்கிறதோ?" என்றார் கேலியுடன். "இசை கூட இதிலில்லை." என்றார் அந்தக் கேலியின் நீட்சியாக.  நான் பாடல் முடியும் வரை பேசவில்லை. அதன் பின், "நீங்கள் சொன்னபடி அந்தப் பாடலில் இசை இல்லாமலில்லை. நீங்கள்தான்  கவனிக்கவில்லை." என்றேன். "ஒரு வாத்திய ஓசை கூட எனக்குக் கேட்கவில்லை. எதை இசை என்று சொல்கிறீர்கள்?" என்றார் அவர். கொஞ்ச நேர தேவையான அமைதிக்குப் பிறகு நான் சொன்னேன்: "அந்தப் பாடலின் மெட்டுதான் அதன் இசை." அவருக்கு இது குழப்பமாக இருந்தது போலும்.  என்னிடம் மேற்கொண்டு அவர் எதுவும் கேட்கவில்லை. கேட்டால் இதைவிட இன்னும் அதிகமாக குழம்பிப் போய்விடுவோம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் நான் சொல்ல வருவது இதுதான்: வாத்தியக் கருவிகளின் ஓசையை இசை என  புரிந்துகொள்வது ஒரு பொதுவான கருத்தோட்டம். ஆனால் சில இசை வடிவங்களுக்கு வாத்தியங்களின் துணையே தேவையிருக்காது. வாத்தியங்கள் இரண்டாம் பட்சம்தான்.  என்னுடைய வார்த்தைகள் அவருக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. அதைப் பற்றி நான் அக்கறையும் கொள்ளவில்லை. ஆனால் எனது புரிதல் எண்ணிலடங்கா அபூர்வ ராகங்களை அனாசயமாக தன் விரல்களுக்குள் அடைத்துவைத்திருந்த எம் எஸ் வி என்ற அதிசயமானவரை நோக்கி என்னை நகர்த்தியதன் வெளிப்பாடு.

    எம் எஸ் வியின் மரணிக்காத, மகத்தான பாடல்களை அருகே கூர்ந்து நோக்கினால், புலப்படும் உண்மை இதுதான். அவரது பிரதான இசை அல்லது அவர்  பாடல்களின் முதன்மையான இசை எதுவென்று பார்த்தால், அது  அவர் மீட்டிய  வாத்தியக்கருவிகளிலிருந்து வருவதில்லை.  மாறாக அவர் அமைத்த மெட்டுக்களே அந்த  இசையாக இருக்கிறது. இன்று நம்மால் மறக்க முடியாத அவரது பல பாடல்களின் முகவரி அவ்வாறான இசை மெட்டுக்கள்தான். அவர் அமைத்த வாத்தியங்களின் இசையமைப்பு இரண்டாம் இடத்தில் நிற்க, அவரின் மெட்டுக்களே இசையாக நம்மில் நிலைத்திருக்கின்றன.  அந்த அற்புத மெட்டுக்குள் சுகமாக சவாரி செய்யும் குரல்கள் உற்சாக உச்சங்களுக்கும், கற்பனையே செய்ய இயலாத திடீர் ராக வளைவுகளுக்கும், சட்டென்ற இனிமைகளுக்கும், திகட்டாத திகைப்புகளுக்கும், லயிக்கச் செய்யும் லாவகங்களுக்கும், துயில் துறக்க ஏதுவான துயரங்களுக்கும் இடையே மாறி மாறிச் சென்று, அங்கே ஏறி, இங்கே இறங்கி, மீண்டும் ஒய்யாரமாகத் திரும்பி, அங்கங்கே கொஞ்சம் நின்று கனவுகளை  உருவாக்கும்.  மெட்டு என்ற அவருடைய அந்த அபாரமான இசைக் கூட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் எந்த மனிதக் குரலும் அந்த மெட்டின் ஈர்ப்பில் கேட்பவரை மெய்மறக்கச் செய்யும் விதத்தில் தன்னையே  மாற்றிக்கொள்ளும்.

     எம் எஸ் வியின் பல பாடல்களை இந்தக் கருத்துக்காக என்னால் அழைத்து வர முடிந்தாலும் ஒரு சிலவற்றை மட்டும்  ஆராய்வோம். கீழேயுள்ள பாடல்களைப் பாருங்கள். கொஞ்சம் அந்தப் பாடல்களை உங்கள் மனதிலிருந்து உதட்டுக்கு வரவழையுங்கள்.  நான் சொல்லும் உண்மையை உணர்வீர்கள்.

கட்டோடு குழலாட ஆட கண்ணென்ற மீனாட ஆட -  இந்தப் பாடல் ஒன்றே போதும்  நான் மேலே சொல்லியுள்ள மெட்டே ஒரு இசை என்ற கருத்தை கட்டமைக்க. பாடகர்களின் குரல்கள் எத்தனை இனிமையாக வளைந்து, நெளிந்து  சென்று , வாத்தியங்களின் இசையை இலகுவாக சமன் செய்துவிடுகின்றன என்று பாருங்கள். அதிக ஆர்ப்பாட்டமில்லாமல்  மிக மெல்லிய மெல்லிசையாக பின்னணியில் இசைக்கருவிகள் தங்களது தேவையின்மையை உணர்ந்ததைப் போல அடங்கி ஒலிக்க, பாடல் முழுவதையும்  குரல்களே இசைக்கின்றன.  மேலும் கூடவே  வரும் ஹம்மிங் மற்றொரு மகுடம் சூட்டுகிறது.

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே - ஆன்மாவை சற்று அசைத்துப் பார்க்கும் அற்புதமான  மெட்டு. இந்தப் பாடல் முழுவதையும் முதலில் வெறும் விசிலோசை, ஹம்மிங் கொண்டே அமைப்பதாக எம் எஸ் வி- டி கே ஆர் தீர்மானித்திருக்க,  மெட்டைக் கேட்ட கண்ணதாசன் பிடிவாதமாக இந்த அபாரமான மெட்டுக்குப் பாட்டு எழுதியே தீருவேன் என்று சொல்ல, அதன் பின்னரே பாடலில் வரிகள் வந்து உட்கார்ந்தன என்று ஒரு தகவல் உண்டு.

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா -  முதல் வரியே மனதுக்குள் ஒரு இசைத் தட்டை சுழல விடுகிறது. சுசீலாவின் குரலில்தான் நம் மனதை கரைக்கும் சோகம் எப்படி ஒரு நளினமான அழகோடு வெளிப்படுகிறது? நான் முதன் முதலாக கேட்ட எம் எஸ் வி பாடல்களில் இதுவும் ஒன்று. அடிக்கடி வானொலிக் காற்றில் மிதந்த  இந்த இசை  பழைய பாடல்கள்  குறித்த எனது பார்வையை சீரமைத்த பலவற்றில் ஒன்று.

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப்  பாடும்-  சுசீலா ராஜாங்கம் நடத்திய பாடல்களில் ஒன்று. சுசீலாவின் குரலிசை கொஞ்சமும் பிசிறில்லாமல் வெவ்வேறு தளங்களில் ஏறி இறங்கி நளினமாக நடைபயின்று  ஆச்சர்யம் அளிக்கும் பாடல்.  எம் எஸ் வியின்  மெட்டில் ரகசியமாக மறைந்திருக்கும் வசீகரங்கள் சுசீலாவின் குரலில் உயிர் பெற்று ஒலிக்கும். குறிப்பாக பல்லவியில் நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும், கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும்  என்ற இடத்தில் அவரது குரல் காட்டும் ஜாலங்கள் அபாரமானவை. அதே போல  சரணம் முடியும் இடங்களில் அவர் அம்மம்மாஆஆஆ என்று நீட்டிக்கும்போது, அந்தக் குரல் உள்ளே சென்று ஒரு பிரம்மிப்பை அழைத்துக்கொண்டு வரும். கேட்கும் போது மனதில்  விவரிக்க முடியாத எதோ ஒன்று சற்று புரண்டு படுக்கும். எந்தவித டெக்னாலஜி ஜிகினாவும் பூசப்படாத உண்மையான குரலிசை.  உயர்ந்த கற்பனையில் உருவான ஒரு கானக்கனவு.

கொடியசைந்ததும் காற்று வந்ததா? பாடலை எண்ணினாலே அந்த மெட்டு எத்தனை அழகாக நம்மை ஆட்கொள்கிறது? இந்த மெட்டுக்குள் புகுந்து கொள்ளும் காவியக் காதல் வரிகள் எப்படி மக்கள் மனதிலிருந்து மறக்கப்படும்? காலங்கள் பல கழிந்தாலும் இது போன்ற காவியங்கள் நிலைத்திருக்குமே ஒழிய கடந்து போவதில்லை.

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி - துயர தூரிகையை சோகத்தில் நனைத்தெடுத்து வேதனையின் வண்ணத்தை குழைத்து, பிரிவின் வலியை வரைந்த பாடல். சுசீலாவின் குரல் இல்லாவிட்டால் ஒரே நொடியில் இது  இறந்துவிடும். அல்லது இந்த மெட்டு இல்லாவிட்டால் சுசீலாவின் குரல் இனிமை இழந்துவிடும். காவியக் கலப்பு. மனதின் வேர்களுக்குள் ஒரு நெருப்புக் கத்திபோல குத்திக் கிழித்துச் சென்று  .....   தகிக்கும் கானம்.

நாளை இந்த வேளை  பார்த்து ஓடி வா நிலா - சுசீலாவுக்கு தேசிய விருது கிடைத்த பாடல் என்பதில் வியப்பே இல்லை. சாஸ்திரிய ராகங்களுக்குள் எம் எஸ் வி தேடி எடுத்த வானவில்.  இசையாகவே  மாறிவிடும்  சுசீலாவின் தேன் குரல் இந்த மெல்லிசை மெட்டின் மீது மற்றொரு ஓவியம் வரைகிறது. பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய் என்ற prelude முடிந்த பின் இசையாகவே எழும் அவர் குரல்   எவ்வாறு  தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு என  மெழுகாய் உருகுகிறது என்று பாருங்கள். காலத்தால் கரைக்க முடியாத பாடல்.

சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே - துயரத்தைக் கூட விரும்பிக் கேட்க வைக்கும் மின்சார துக்கம். சரணங்களில் வாத்தியக் கருவிகளின் இசையுடன் சுசீலாவின் குரல் நடத்தும் போர்  வியப்பான சுவை கொண்டது. கண்ணீர்த் துளிகளில் புரண்டு எழுந்த மெட்டு. பாடல் சரணத்துக்குள் பயணிக்கும் போது  ஆயிரம் மின்னல்கள் அடிக்கும். நமது சோக நரம்பை கண்டுபிடித்து அதை மீட்டிவிட்டுப் போகும் இசை. இது ஒரு அமைதியான ஆனந்த அழுகை.

தமிழுக்கும் அமுதென்று பேர்- என்ன இசைக் கருவி இசைக்கப்பட்டது என்ற விபரங்கள் தேவைப்படாத கேட்பவர்களின் நெஞ்சங்களில் தமிழை சிறப்பு செய்யும் இசையாக உறைந்து விட்ட பாடல். இப்படியான மெட்டை தன் கற்பனையில் கண்டுபிடித்தவரின் மேதமையை என்னவென்று விவரிப்பது? 

நினைக்கத் தெரிந்த மனமே- காதலின் பிரிவை உணர்த்தும் முதன்மையான பாடல். பலர் விரும்பும், குறிப்பாக  பாட விரும்பும் சோக இழைகளை வைத்துத் தைத்த கண்ணீர் வலி. பலரின் மனதிலும் உதட்டிலும் உட்கார்ந்திருக்கும் உணர்ச்சிமயமான பாடல். மெட்டின் இசையே இந்தப் பாடலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. வாத்தியங்கள் கூடவே வருகின்றன.  எம் எஸ் வி யின் மெட்டுகள் செய்யும் இந்த விசித்திர வித்தை ஒரு வசியம் போன்று நம்மை ஆட்கொள்கிறது.

அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்- சற்று பிசகினாலும் விரச சகதியில் விழுந்து அசிங்கப்பட்டுப்போகும் பாடல். மிக மெல்லிய நூலிலையின் மீது சாதுர்யமாக நடந்து சென்று எம் எஸ் வி கொடுத்த  விரக தாப ஆனால் அதேசமயம் கண்ணியம் மிகுந்த காதல் கானம் இது.  என் நண்பன் இதையே விரசம் என்று சொல்லுவான்,  எம் எஸ் வியின் இசையில் விரசம் உண்டா என்ற என்னுடைய நீண்ட நாள் கேள்விக்கு கண்டிப்பாக இல்லை என்ற பதில் கிடைத்த பின்னே நான் மீண்டும் ஆழமாக இதைக் கேட்டபோது இந்தப் பாடலின் பலவித பரிமாணம் என் மூளைக்குள் சென்று என் சந்தேக எண்ணத்தை துவம்சம் செய்தது. இன்றும் பல பெண்கள் தயக்கமில்லாமல், எந்தவித பாசாங்கும் இல்லாமல் பொதுவில் ரசிக்கும் பாடல். ரசிப்பதென்ன பலர் வாய்விட்டுப்  பாடும் அற்புதமான பாடலிது. இதே பாடலை எம் எஸ் விக்குப் பிறகு வந்த "மற்றவர்கள்" அமைத்திருந்தால் .. முன்னிசை இடையிசை பின்னிசை என்று பலவிதமாக பலவித இயற்கையான "வாழ்வியல் ஓசைகளை" அமைத்து பின்னி எடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. பாவம். எம் எஸ் விக்கு  "அந்த அளவுக்கு இசை ஞானம்" இல்லை. 

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே லதா மங்கேஷ்கரை இந்தியாவின் நைடிங்கேல் என்றழைப்பதுண்டு. எனது விழியில் சுசீலா அவரை எப்போதோ ஓரம் கட்டிச் சென்றுவிட்டார். ஒரு உதாரணம் இந்தப் பாடல். அருவி போன்று சுசீலாவின் குரல் விழுந்து ஒரு புகை போன்று அடுத்த நொடியே எழுவது ஒரு மாயாஜாலம்.  எம் எஸ் வி மெட்டுக்குள்ளே மெட்டுக்கள் அமைப்பதில் இயல்பான திறமை கொண்டவர். இந்தப்  பாடலில் அதை நீங்கள் வெகுவாக உணரலாம். பல்லவியின் மூன்றாவது வரியிலேயே மெட்டு மாறும். சரணத்தில் கேட்கவே வேண்டாம். இசை வடகிழக்கு பருவ மழை போல நிற்காது கொட்டும். மெட்டுகளை சாமர்த்தியமாக வளைப்பதில் தான் ஒரு வல்லவர் என்பதை எம் எஸ் வி நிரூபித்த மற்றொரு மரணமில்லா கானம். பாடல் மொத்தமும் சுசீலாவின் இசை ராஜ்ஜியம் ரம்மியமாக நடைபோடும். என்னால் விவரிக்க முடியாத எதோ ஒரு மர்மமான வசீகரம் இதில் இருப்பதை நான் உணர்ந்தே இருந்தேன். அது என்னவென்பதை நீண்ட வருடங்கள் கழித்துத்தான் அறிந்துகொள்ள முடிந்தது. கீழே இருப்பது திரு முரளி ஸ்ரீநிவாஸ் என்பவர் எம் எஸ் வி பற்றிய திரெட் ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. படித்ததும் நான் உணர்ந்தது சரிதான் என்று தோன்றியது. இதோ உங்கள் பார்வைக்கு:  

தாயன்பன் எடுத்துக் கொண்ட பாடல் புதிய பறவையில் சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே பாடல். தன் மனதில் இருக்கும் காதலை காதலனிடம் வெளிப்படுத்த நினைக்கிறாள் அந்தப் பெண். நேரிடையாக சொல்ல முடியாமல் அதற்கு ஒரு உருவம் கொடுக்க முயற்சிக்கிறாள். அதாவது ஆங்கிலத்தில் metaphor என சொல்லபடும் வகையை சார்ந்து தன்னை ஒரு சிட்டுக் குருவியாக கற்பனை செய்துக் கொள்கிறாள். 

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே 
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே 
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே 
என்பது பல்லவி. 

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து தன் இணையோடு சேர்வதும் செவ்வானம் மாலையில் கடலில் கலப்பதும் மலரினில் வண்டு மூழ்குவதும் மூங்கிலில் காற்று சேர்வதும் எவ்வளவு இயற்கையோ அதே போன்றதுதான் என் மனதில் உன் மேல் உள்ள காதல் என்கிறாள் காதலி. இந்த பல்லவியில் கவிஞர் ஸ்கோர் செய்கிறார் என்றால் சரணத்தில் மெல்லிசை மன்னர் கொடி நாட்டுகிறார் என்றார் தாயன்பன், 

எப்படி என்றால் இடம் பொருள் ஏவல் எதையும் பாராமல் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி தன் ஆசையை விருப்பத்தை வெளிப்படுத்துகிறது நிறைவேற்றிக் கொள்கிறது சிட்டுக் குருவி. அதே போன்று சுதந்திரமாக தன் மன வானில் பறக்க நினைக்கிறாள் அந்த பெண். அதை குறிக்கும் விதமாக சரணம் தொடங்கும் முன்பு ஒரு ஹம்மிங்கை புகுத்துகிறார் எம்எஸ்வி. அஹா அஹா அஹா ஆஹா என்ற அந்த ஹம்மிங் அந்த பறவையின் மனநிலையில் அந்த பெண் இருக்கிறாள் என்பதை உணர்த்துகிறது. 

ஆனால் என்னதான் தன்னை பறவையாக கற்பனை செய்துக் கொண்டாலும் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதே. பறவையைப் போல் சுதந்திர வானில் பார்க்க முடியாதே. அந்த விருப்பம் ஏக்கமாக முடிவதை எம்எஸ்வி எப்படி கொண்டு வந்திருக்கிறார்? 

பறந்து செல்ல நினைத்திருந்தேன் என்ற தன் ஆசை எப்படி முடியாமல் போகிறது என்பதை

பறந்து செல்ல நினைத்திருந்தேன் எனக்கும் சிறகில்லையே என்கிறாள். இங்கே பறந்து செல்ல என்ற வார்த்தைகள் மேலே போய்விட்டு எனக்கோர் சிறகில்லையே எனும்போது அந்த குரலே கீழே இறங்குகிறது. சரணத்தில் வரும் வரிகளையே இரண்டாக பிரித்து ஒவ்வொரு வரியிலும் முதல் பகுதியில் இடம் பெறும் ஆசை விருப்பம் இவற்றை மேல்ஸ்தாயில் வருவது போன்றும் அதே நேரத்தில் அந்த ஆசை அல்லது விருப்பம் நடக்காது என்ற யதார்த்தம் மனசில் உறைக்க அந்த வரியின் இரண்டாம் பகுதியை கீழ்ஸ்தாயிலும் அமைத்திருப்பார் எம்எஸ்வி என்று சொல்லி அந்த சரணத்தின் வரிகளை அதே போல் பிரித்து பாடிக் காட்டினார் தாயன்பன்.

பறந்து செல்ல நினைத்து விட்டேன் - எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் - பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் - வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் - நாணம் விடவில்லையே

மொத்த அரங்கமும் கைதட்டியது. கவியரசர் மெல்லிசை மன்னர் இசையரசி கூட்டணியின் மேதமைக்கு மட்டுமின்றி அதை அழகாய் திறானய்வு செய்த தாயன்பனுக்கும் சேர்த்துதான். 


    நானும் கொஞ்சம் கைதட்டிவிட்டு வருகிறேன்.

  பல்லவிக்கு மட்டும் தானானா தானானா என்று எதோ ஒரு மெட்டு அமைத்துவிட்டு சரணத்தில் பாடகர்களை பேசவைத்து அதற்கு பின்னணியில் 12 நொடிக்கு ஒரு குழல், 4.5 நொடிக்கு ஒரு வயலின், 10.3 நொடிக்கு ஒரு கிடார் என்று சம்பந்தம் இல்லாமல் தவணை முறையில்  இசையை அமைத்து, ஒரே மெட்டில் மொத்தப் பாடலையும் முடித்துவிடும் பல இசையமைப்பாளர்களின் பாடல்களையும் "இது என் ஆன்மாவை குடைகிறது" என்று சிலாகிக்கும் ஒரு சிலர் சற்று இவ்வகையான உண்மையான இசையின் பக்கம் ஒதுங்கினால் நலம்.

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் ,காலை நேர கானங்கள் என்ற வரிசையில் பலரின்   நினைவில் தங்கியிருக்கும் முதன்மையான பாடல். ஒரு வைகறை வைரம். பாடலின் துவக்கத்திலேயே அந்தக் காலை நேரம்  நம் நெஞ்சத்தில் புலர்ந்துவிடும். சுசீலா தனது மயக்கும் குரலில் பாடலைத் தொடங்கும்போது ஏற்படும் இசை  போதை பாடல் முடிந்தும் நீங்காது. மனதுக்குள் அந்தக் குரலும் இசையும் ஒலித்தபடியே இருக்கும். காலையை வரவேற்க இதை விட வேறு என்ன பாடல்  இருக்க முடியும் -- அடுத்து வருவதைத் தவிர?

வெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன். காலை நேர கானங்கள் என்றால் சில பாடல்களுக்கு  அழைப்பிதழே   அவசியமில்லாது போய்விடும். நாம் கேட்காமலே அவை நம்மருகே அமர்ந்துவிடும். குறிப்பாக நீ என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் ஒரு  காலை நேரத்து ஏகாந்தம். இரண்டாவது வைகறை வைரம். எம் எஸ் வி தனியாக இசைக்க ஆரம்பித்ததும் அமைத்த முதல் மெட்டு இதுதான் என்று ஒரு தகவல் இருக்கிறது. பொற்கால அறுபதுகளின் அதே இனிமையின் நீட்சியாக ஒலிக்கும் சுகமான காலைத் தென்றல். இதன் இனிமையைத்தான் மறுக்க முடியுமா? 

வெள்ளிக் கின்னந்தான் தங்கக் கைகளில் பாடலில் சுசீலாவுக்கு வெறும் ஹம்மிங் மட்டுமே உண்டு. ஒரு முதலிரவுப் பாடலாக ஆரம்பித்து சரணத்தில் தேனிலவு காட்சியாக விரிவடையும். இருந்தும் எந்தவித ஆபாச ஓசைகள், விரகதாப முக்கல்கள் இல்லாமல் மயக்கும் ஹம்மிங் எப்படி சுசீலாவிடமிருந்து வருகிறது பாருங்கள்!  டி எம் எஸ் மொத்தப் பாடலையும் அபாரமாக பாடினாலும் சுசீலாவின் ஹம்மிங் அதை அதே அபாரத்துடன் சமன் செய்து  வேறு உயரத்திற்கு பாடலை நகர்த்துகிறது.

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு  பாடலைக் கேட்டதும்   நான் நன்றி சொல்வேன்  எம் எஸ் விக்கு என்ற எண்ணம் தோன்றும். லேசாக மேற்கத்திய ரகே இசைச் சாயலோடு பல்லவி நம்மை ஒரு மானசீக  ஊஞ்சலில் வைத்து தாலாட்டும். சுசீலாவின்  குரல் பனித் துண்டுகளால் நெய்த ஒரு குளிர்த் தென்றலின் சுகமாக இருக்கும். வாத்தியங்களை மீறி ஆனால் வெகு ரம்மிய இசை போல ஒலிக்கும் அவரது குரலில் பாடல் அலுப்பே தராமல் நளினமாக நகர்ந்து செல்லும். 

சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்- சுசீலா தவிர வேறு எந்தக் குரலும் இந்தப் பாடலை இத்தனை தூரம் அழகோடு பாடியிருக்க முடியாது என்று எண்ணக் கூடிய, மெட்டும் இசையும் ஒரே புள்ளியில் கைகோர்த்த அசாதாரணம். வானவில் நம் மீது படர்வது போன்ற இதம் தரும் பாடல். பலவிதமான  கற்பனைகளுக்கு சிறகுகள் கொடுக்கும் உன்னதமான இசையின் உள்ளார்ந்த தொடுகை. தூர வைத்துவிட்டு மறந்துபோக முடியாத வசீகரம்.

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானா கிடார் இசை பாடல் முழுவதும் குழந்தையை அணைத்துக்கொண்டிருக்கும் ஒரு அன்னையின் கரம் போல மென்மையாக அரவணைத்துச் செல்ல, பாடல் தரும் மொத்த இசை அனுபவத்தையும் சுசீலாவின்  குரல் தனியே சாதித்துவிடும். இது போன்ற அபாரமான ஒரு மெட்டுடன் ஒரு இனிமையான குரலும் இணைந்தால் அது எட்டும் உயரங்கள் பிரம்மிப்பானவை என்று உணர்த்தும் பாடல்.

சத்திய முத்திரை கட்டளையிட்டது நாயகன் ஏசுவின் வேதம்-  கிறிஸ்மஸ் குதூகலம். கேட்டுப் பாருங்கள் எப்படி சுசீலாவின் தெளிவான குரல் இந்தப் பாடலைப் புனிதப்படுத்துகிறது என்று. துள்ளலும் துடிப்புமாக இதயத்தை இன்பமயமாக  நிரப்பும் சொர்க்க கானம்.  கிறிஸ்மஸ் உணர்வை உயிரூட்டி மனதுக்குள் உற்சாகம் பொங்கச் செய்யும் பாடல்.

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ பாடலை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். சுசீலா அங்கில்லை. ஆனால் அந்த வசீகர இனிமை சற்றும் குறையாத அனுபவத்தை வாணிஜெயராமினால் கொடுக்க முடிகிறது என்பதன் பின்னே இருக்கும் ஒரே காரணி அந்தப் பாடலின் மெட்டுதான். இதேபோல உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்று எஸ் ஜானகி பாடும் போது இதே ஜானகிதானா பின்னாட்களில் வேறு விதமான ஓசைகளை தன் குரலினால் உருவாக்கி, ஒரு மிமிக்ரி பாடகர் போல மாறி "என்ன பாட சொல்லாத நா கண்டபடி பாடிபுடுவேன்" என்ற உண்மையைச் சொல்லி, பலரது அபிமானத்திலிருந்து அகன்று போனார் என்ற வியப்பு ஏற்படும். அத்தனை தூரம் காதலில் உருகிய குரல் கொண்டு பாடுவார். எம் எஸ் வி அமைத்த மெட்டினால் மட்டுமே அது சாத்தியப்பட்டது. 

      டி எம் எஸ், பி பி ஸ்ரீநிவாஸ், பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி, வாணி ஜெயராம், எஸ் பி பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் என பல  பாடகர்களின் குரல்கள் இவரது மெட்டுக்குள் புகுந்துகொண்டு அடைந்த கோபுர உச்சங்களும், உயரங்களும் அணிந்துகொண்ட மாலைகளும், மகுடங்களும், மாற்றி எழுத முடியாத நிகழ்ந்த சரித்திரங்கள். யார் அந்த நிலவு போன்றெல்லாம் டி எம் எஸ் பாடுவாரா என்பதே அதுவரை அறியப்படாத ரகசியமாக இருந்தது. இயற்கை என்னும் இளைய கன்னி என்று எஸ் பி பி பாடிய அந்தப் பாடலை விரும்பாத உள்ளங்களே இருக்க முடியாது என்று அப்போது சொல்வார்கள்.  என்னதான் பெரிய உயரங்களுக்குச் சென்றுவிட்டாலும் தெய்வம் தந்த வீடு பாடல்தான் இன்று வரை பலருக்கு ஜேசுதாசின் முகமாகக் காட்சியளிக்கிறது.

      எம் எஸ் வி தனது மெட்டுகளை திடமாக நம்பியவர். மெட்டுக்களால்  அவர் தன் பாடல்களை நிரப்பினார். எல்லோரும்தான் இதைச் செய்கிறார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். ஆனால் எம் எஸ் வியின் மெட்டுக்கள் ஒரு இசையாகவே உருவாக்கப்பட்டவை. ஒரு பாடலுக்குத் தேவையான இசையின் பங்களிப்பை அவரது மெட்டுக்களே திருப்திகரமாக செய்துவிடும்.  வாத்தியங்களின் தேவை அதிகமில்லாமலே அவரது பாடல்கள் முழுமை பெற்றதாக இருந்தன. ரோஜா மலரே ராஜ குமாரி, பால் வண்ணம் பருவம் கண்டு, ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, பனியில்லாத மார்கழியா போன்ற பாடல்களின் மெட்டின் அமைப்பே தேவையான இசையை கொடுத்துவிடுகிறது. அதனால்தான் அவரது இசையில் வாத்தியங்கள் அவருக்குப் பின் வந்தவர்கள் அமைத்ததைப் போல தனித்துத் தெரிய வேண்டிய அவசியமில்லாமல் இருந்தன. அவரது வாத்திய இசை துருத்திக்கொண்டு, செயற்கையான அலங்காரத்துடன், தேவையில்லாத ஆர்ப்பாட்டத்துடன் வெளிப்படாமல் பாடலோடு இசைந்து ஒரு முழுமையான பாடல் அனுபவத்தை கேட்பவர்களுக்குக் கொடுத்தது. "பாடல் சுமார்தான். ஆனால் அந்த இடையிசை அபாரம்." போன்ற பாராட்டுக்கள் எம் எஸ் விக்காக தயாரிக்கப்படவில்லை. அவரது பாடல்களில் எல்லா அம்சங்களும் சரியான, நேர்த்தியான விகிதத்தில் பகிரப்பட்டு, உண்மையான இசையினால் படைக்கப்பட்டவை. வெறும் இசைத் துண்டுகளாக அவை அறியப்படவில்லை. குறிப்பாக சங்கே முழங்கு என்ற பாடல் அதன் இசைக்காவும் பெரிய அளவில் புகழ் பெற்றது.   அதோ அந்த பறவை போல வாழ வேண்டும், எங்கே நிம்மதி?, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், அன்று வந்ததும் அதே நிலா, கண் போன போக்கிலே கால் போகலாமா, அவளுக்கென்ன அழகிய முகம், ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன், என்ன என்ன வார்த்தைகளோ, யார் அந்த நிலவு?,  போன்றவை எத்தனை பிரமாண்டமான இசையைக் கொண்டிருந்தன என்பதை ஒரு புதிய தகவலாக தெரிவிக்க வேண்டியதில்லை.

  வாத்தியங்கள் ஒரு பாடலுக்கு முக்கியம்தான். ஆனால் பாடலை வாத்தியங்கள் தத்து எடுத்துக்கொண்டால் அந்தப் பாடல் நோய்வாய்ப்பட்டுப் போகிறது. மடிந்தும் போகிறது. நீங்களோ நானோ வெறும் வாத்திய ஓசைகளை நினைவில் வைத்திருந்து ஒரு பாடலை சிலாகிக்கப்போவதில்லை. அவ்வாறன இசையனுபவம் அளிக்கக்கூடிய இசைக்குத் தேவையான மெட்டு வசப்பட்டால் மட்டுமே இங்கே ஒரு பாடல் காலம் தாண்டியும் நினைக்கப்படும். இல்லாவிட்டாலோ மரத்தில் துளிர்க்கும் இலை போலத்தான். கொஞ்ச நாட்கள் பசுமையை அணிந்துகொண்டு பின்னர் சருகாகி விழ  வேண்டியதுதான்.

      ஒரு பாடலின் ஆன்மா அதன் மெட்டில்தான் இயங்குகிறது என்ற உண்மையை அவர் அறிந்திருந்ததனால்தான் அவரால் இத்தனை உயிர்ப்பான பாடல்களை......ஒரு திருத்தம்...... இத்தனை உயிர்ப்பான பல பாடல்களை .... மற்றொரு திருத்தம்.... இத்தனை உயிர்ப்பான கணக்கிலடங்கா  பல பாடல்களைக் கொடுக்க முடிந்தது. அவர் அமைத்த ஏறக்குறைய அனைத்துப் பாடல்களிலும் நீங்கள் இந்த அனுபவத்தை உணரலாம். எனவேதான் அவர் பாடல்கள் ஒலிக்கப்பட்டும், கேட்கப்பட்டும், ரசிக்கப்பட்டும், பாடப்பட்டும், ஓய்ந்துவிடாமல் இன்றளவும் நினைக்கப்பட்டு வருகின்றன.  மூன்று நான்கு தலைமுறைகளைத் தாண்டியும் உயிர் வாழ்கின்றன. இன்னும் பல வருடங்கள் எதிர்காலத்துக்குள்ளும் அவர் இசை அதிர்வலைகளை உருவாக்கும்.

      எம் எஸ் வி போன்று வசியப்படுத்தும், வலிமை மிகுந்த வசீகர மெட்டுக்களை அமைக்கமுடியாத இசையமைப்பாளர்கள் தஞ்சம் புகுந்த இடம் புதிய வாத்திய ஒலிகள்.  அவர்களது மிகச் சாதாரணமான, அயர்ச்சியான அலுப்பூட்டும் மெட்டில் இயற்கையாகவே உண்டாகும் விரிசல்களும், உடைசல்களும், இடைவெளிகளும்  கிளர்ச்சியூட்டும், தாளமிடவைக்கும் இசை வாத்தியங்களால் நிரப்பப்பட்டு பூர்த்தியாயின.  இது தவறா சரியா என்ற விவாதம் அவசியமில்லாதது. அப்படியும் சில பாடல்கள் கேட்கும்படியாக சிறப்பாகவே இருந்தன. ஆனால் இசையின்றி நம்மால் அவ்வாறன  பாடல்களை கற்பனை செய்யவே முடியாது. இது ஒரு புதிய பாணியாக அப்போது பரிணாமம் அடைந்தது. எம் எஸ் வி போல ஆழமான ஆத்மார்த்தமாக ஆன்மாவை அணைக்கும்  மெட்டுகளை உருவாக்க இயலாத அவர்களது இயலாமை ரசிகர்களின் விமர்சனப் பார்வைக்குள் வராமலிருக்க அவர்களுக்கு பல ஜிகினா வேலைகள் தேவைப்பட்டன. இதனால் ஸ்டீரியோ போனிக் சவுண்ட், ஒரு குரல் மேலே மற்றொரு குரல் படர்வது, ஆர்ப்பாட்டமான அடிதடி தாளம், கேட்கவே சகிக்காத ஊளைகள், முக்கல், முனங்கல்கள், கழுதைகள் கதறுவது, ஆபாசக் கூச்சல்கள், காதல் பாடலில் சம்பந்தம் இல்லாமல் ராக ஆலாபனைகள், விடலைகளின் இச்சைகளை உரசும் ஒலிகள்  போன்ற "நவீனங்கள்" தமிழிசைக்கு "கொடையாகக்" கிடைத்தன. பரிதாபம்! இதில் வீழ்ந்துபோன நம் ரசனை மீண்டு எழ நாம் மீண்டும் எம் எஸ் வியிடம் தான் செல்லவேண்டியிருக்கிறது.

   கால இயந்திரம் என்ற விஞ்ஞானக் கனவு காகிதத்தில் மட்டுமே சாத்தியமல்ல. இசையும் ஒரு வகையில் கால இயந்திரம்தான். ஒரு பாடல், அல்லது பல்லவி, அல்லது  ஒரே ஒரு ஹம்மிங் கேட்கும் அதே கணத்தில் அது நம்மை காலத்தின் பின்னே எங்கோ இழுத்துச் சென்றுவிடுகிறது. திகைப்பான விதத்தில் சில சமயங்களில் நாம் அறிந்தேயிராத உணர்வுகளையும், காட்சிகளையும் அந்த இசை நம் நெஞ்சத்தில் உயிர்ப்பிக்கிறது. இதை நம் கற்பனையின் வளம் என்று தீர்மானித்துக்கொண்டாலும் அந்த கற்பனையின் விசையைத் தட்டிவிடுவது இசைதான்.  நான்  நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலை முழுவதும் ஒருசேரக்  கேட்டது வெகு சொற்பமான முறைகள் மட்டுமே. காரணம் சுசீலாவின் ஹம்மிங் துவங்கும் போதே மனதில் விரியும் காட்சிகள் என்னை மலைக்க வைக்கும். எனக்குப் பரிச்சயமில்லாத இடங்களும் முகங்களும் மனதில் தோன்ற, சட்டென்று பாடலைவிட்டு நகர்ந்துவிடுவேன். பிறகு மற்றொருநாள் முதல் சரணம் இரண்டாம் சரணம் என்று அந்தப் பாடலை துண்டு துண்டாக ரசிப்பேன். ஒரு முரண்போல அத்தையடி மெத்தையடி பாடலோ என்  காலத்துக்கு  முந்தைய நான் பார்த்தேயிராத என் குடும்ப நிகழ்வுகளின் மீது ஒரு வசீகர வெளிச்சம் பாய்ச்சும். அந்தக் கற்பனையின் அரவணைப்பில் மனது மழையில் நனைந்த மலர்கள் போல புதிய வாசத்தையும், வண்ணத்தையும் அணிந்துகொள்ளும். என் பெற்றோர்களும், சித்திகளும், மாமாக்களும், சகோதர சகோதரிகளும் எவ்வாறு அந்தப் பாடலை ரசித்திருப்பார்கள் என்ற எண்ணம் என் கற்பனைக்கு வார்த்தைகள்  வராத வடிவம் கொடுக்கும்.

 சமீபத்தில் ஒரு மதிய வேளையில் ஆட்டோ ஒன்றில் பயனித்துக்கொண்டிருந்தேன். என்னைச்  சுற்றிலும் சென்னை பரபரப்பாக துடித்துக்கொண்டிருந்தது. போக்குவரத்து ஓசைகளும், நகரதுக்கேயுரிய இரைச்சல்களும், தனி மனித வசவுகளும், நிறம் நிறமான சினிமா போஸ்டர்களும், மெட்ரோ ரயில் கட்டமைப்புகளுமாக நான் எம் சி சியில் படித்த காலத்து மெட்ராஸ்  முகத்தின் சுவடே கொஞ்சமும் தெரியாத வேறு உருவத்துக்கு சென்னை மாறியிருந்தது. அப்போது  ஆட்டோ ஓட்டுனரின் அலைபேசியிலிருந்து செந்தமிழ் தேன்மொழியாள்  என்று  டி ஆர் மகாலிங்கம் பாட ஆரம்பித்தார்.   அலைபாய்ந்த மனது சற்று நிதானமடைந்து  பாடலைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. காலம் இடம் தெரியாத எதோ  இனம் புரியாத எண்ணங்கள் என்னைச் சூழ்ந்தன.  பாடல் உள்ளே செல்லச் செல்ல ஒரு திடீர் கணத்தில் நான் அந்தப் பாடலின் பின்னே சென்றுகொண்டிருந்தேன். ஒரே நொடியில் நான் நம் தமிழ்ச் சமூகத்தின் வேர்களுக்குள் புதைந்து போனேன். நம்முடைய மரபு சார்ந்த ரசனைகளும், பாரம்பரிய தொடர்புகளும்,   அதன் நீட்சியாக நம் வாழ்வின் அன்றாட இயக்கங்களோடு இணைந்துகொண்ட இசையும், நானும்  ஒரே புள்ளியில் இணைந்தோம்.  கால இயந்திரம்!

    இன்று பழமையை நாம் ஏறக்குறைய இழந்து விட்டோம். அதைப் பற்றிய அக்கறை பொதுவாக நம்மிடமில்லை. நமது  கட்டிடங்கள் தூண்களையும், தாழ்வாரங்களையும் துறந்துவிட்டன.  சாலைகள் மீது விஞ்ஞானம் அசுர வேகத்தில்  பயணிக்கிறது.  தலைக்கு மேலே ரயில் பறக்கிறது.  கடைத் தெருக்கள் ஒரே குடையின் கீழே குவிந்துவிட்டன.  முறுக்கு, தேன்மிட்டாய், கடலை மிட்டாய், கலர் பானங்கள்  போன்ற பழைய சினிமா அடையாளங்கள் பெரிய காகிதப்பை  பாப்கார்னிலும், குளிர் கொண்ட  பெப்சி,கோக் பாட்டில்களிலும் கரைந்துபோய்விட்டன.   நமது சமூக விழுமியங்களும், அடையாளங்களும் கொண்டாட்டமான திருவிழாக்களிலும், புகைப்பட தொகுப்புக்களிலும், அரிதான சில குடும்ப நிகழ்வுகளிலுமே எஞ்சியிருக்கின்றன. நமது விரைவு வாழ்க்கை நம்மை திரும்பிப் பார்க்க விடாமல் செய்துவிட்டது. இந்த ராட்சதப் பாய்ச்சலில் நமது வேர்களோடு நம்மை இணைக்க  நம்மிடமிருக்கும் ஒரே பாலம் இசை ஒன்றுதான். அந்த ஆட்டோவில் நான் ஏறக்குறைய இருபது நிமிடங்கள் எதிர்காலத்தில் சென்று  என் வீடு அடைந்தேன். ஆனால் அங்கு ஒலித்த அந்தப் பாடலில் அறுபது வருடங்கள் பின்னே பயணித்தேன்.

  மனிதனுக்கு முதல் மழை கண்டிப்பாக பெருத்த திகைப்பை கொடுத்திருக்கவேண்டும். புரிந்துகொள்ள முடியாத பயத்தையும், விவரிக்க முடியாத வசீகரத்தையும் தந்திருக்கவேண்டும். ஆனால் இன்றைய விஞ்ஞானம்  மழையின் டிஎன்ஏ வைத் தெளிவாக வரைந்து  நமக்குப் புரியவைத்துவிட்டது. இயற்கையின் சுழற்சியாகிய மழை எப்போதும் நம்மிடமே இருக்கிறது.  அது எப்போதும் தீரப்போவதில்லை.

   எம் எஸ் வியின் இசையையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன்.  எத்தனைப் பாடல்கள் அவரது விரலசைவிலிருந்து வந்த வண்ணமிருந்தன என்ற வியப்பு ஏற்படாமல் அவரைப்  பற்றி எழுதுவது கடினம். தீவிரமான சிந்தனையோ, யோசைனையோ இல்லாது நீண்ட மணிநேரங்கள் விரயம் செய்யாமல் நமது நினைவுச் சுவர்களிலிருந்து  அவரது ஏராளமான  பாடல்களை நாம் அடையாளம் காட்டலாம். கொள்கை, தத்துவம், உறவுகள், காதல், மோகம், தாலாட்டு, பிரிவு, தாய்மை, வீரம், மொழிப்பற்று, ஆன்மிகம், குழந்தைப் பாடல், இளமைச் சீண்டல், தெம்மாங்கு, நவீனம்  என பலதரப்பட்ட வகைகளாகப் பகுத்தாலும் எம் எஸ் வி ஏராளமாகவும், தாராளமாகவும்  இருக்கிறார்.

     அவரது இசை நம்  காற்றில் கலந்திருக்கிறது. இலைகள் சலசலக்கும்போது, ஜன்னல்கள் அடித்துக்கொள்ளும்போது, வயல் வெளிப்பயிர்கள் தலையசைக்கும்போது, மரங்கள் சாய்ந்தாடும்போது, அலைகள் கரைகளுக்கு விரையும்போது , மேகங்கள் கும்பல் கும்பலாக இடம்பெயரும்போது நாம் உணரும் காற்றில் அவர் பாடல்கள்  ஒரு உயிரலையாகத்  தவழ்ந்து நம்மைத் தீண்டிக்கொண்டே இருக்கின்றன.  நம்மோடு அவை உறவாடிக்கொண்டே இருக்கின்றன. ----ஒரு மழையைப் போல. ஒரு காற்றைப் போல.  அவர் இசை என்றும் ஓயப்போவதில்லை.

ஆம்.   எம்.எஸ்.வி.  ஒரு தீரா இசை.






அடுத்த இசை விரும்பிகள் XXIX - எண்பதுகள்: இசையுதிர் காலம்.
ஆனால் அடுத்து?





Monday, 16 November 2015

என் சென்னை.

ஏறக்குறைய இருபது வருடங்கள் சென்னையில் வாழ்ந்து வருகிறேன். இது போன்ற மழை, வெள்ளம் நான் கண்டதில்லை. சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பல மாவட்டங்கள் நகரங்கள் தண்ணீரில் சிறைபட்டுள்ளன. நான் சென்னையில் வசிப்பவன் என்பதால் என்னால் இங்கே காணப்படும் துயரங்களை அதிக அளவில் பேசமுடியும் என்று தோன்றுகிறது.

நியூயார்க், லண்டன், பாரிஸ் என்று வெளிநாட்டு நகரங்களில் வசிக்கவேண்டும் என்ற என்னுடைய சிறுபிள்ளைத்தனமான எண்ணம் இங்கே வந்த இரண்டே வருடங்களில் நெருப்பு கண்ட மெழுகு போல உருகிப் போய்விட்டது. சொல்லப்போனால் என்னைப் பொருத்தவரை சென்னைதான் என்னுடைய நியூயார்க் லண்டன் பாரிஸ் எல்லாமே. புதுக்கோட்டை திருச்சியில் படித்த சமயங்களில் எனக்கு இருந்த ஒரே கனவு நகரம் மெட்ராஸ்தான். (அப்போது சென்னை கிடையாது பெரிய அளவில்.) மெட்ராஸ் வந்த முதல் கணத்திலேயே எனது கனவு மெய்ப்பட்டதுபோல ஒரு நிம்மதி உண்டானது. 

நான் என்னுடைய ஊருக்கு (அப்படி என்று எதுவுமே  கிடையாது) போகாத சமயங்களில் என்னை நோக்கி வீசப்படும் கேள்வி "இன்னுமா ஊருக்கு போகவில்லை?". நான் சொல்லாவிட்டாலும் நினைத்துக்கொள்வது இதுதான்: "இந்த சென்னைதான் எனது ஊர்". நான் வெளியே சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை. இங்கே வசிக்கவேண்டும் என்றுதான் விரும்பினேன். இப்போது அது நிகழ்ந்திருக்கிறது. 

தற்போது சென்னையில் காணப்படும் வெள்ளம் ஆரோக்கியமானதல்ல என்று படுகிறது. பல இடங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களின் துன்பம் வெறும் டீவியில் ஆவேசமாக  பேசப்படும் வார்த்தைகளோடு முடிந்துவிடவில்லை. அதையும் தாண்டிய பெரும் சிக்கல் கொண்டதாக இந்தத்துயரம் வேறு பரிமாணம் பெறுகிறது. சென்னையில் இருப்பவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள் என்ற சென்னையைச் சாராத மக்களின் எண்ணம் கொஞ்சம் இந்த மழையின்  உக்கிரத்தில் நனைந்து, கண்ணீரில் கரையட்டும். 

கருணாநிதியோ ஜெயலலிதாவோ எந்த கட்சியாக இருந்தாலும் சென்னையின் நிதர்சனம் இதுதான். மழைக் காலத்தில் சென்னை மிதப்பது மாறவேண்டுமானால் அது மக்களின் மனதில் உருவாகும் கோபத்தினாலும், உண்மையான ஜனநாயகம் என்ன என்பதை புரிந்துகொண்ட புரிதலால் வரும் முதிர்ச்சியான பார்வையினாலேயே சாத்தியம். மாறாக எந்த அரசியல் கட்சியும் இதற்கு ஒரு மாற்று மருந்து கண்டுபிடிக்கப்போவதில்லை. நம் உரிமை என்ன என்பதை  நாம் உணர்ந்து அதை செயலாற்ற இயலாதவர்களை தூர எறிவதன் மூலமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்று தோன்றுகிறது.

சென்னை தமிழகத்தின் பல ஊர்களின் வேர்களின் அடையாளம். இதை நான் வட சென்னை தென் சென்னை என்று என்றுமே பார்ப்பதில்லை.

இது என் சென்னை.


Sunday, 11 October 2015

நிலவு நிஜமா?





                                                       நிலவு நிஜமா?



இரவு வானத்தில் பளீரென மின்னும் நிலவைக் குறித்து உலகின் எல்லா மொழிகளிலும் கவிதைகள் புனையப்பட்டு விட்டன. எண்ணிலடங்கா பாடல்கள் இயற்றப்பட்டும்  விட்டன. இனி வரும் காலங்களிலும் இது தொடரத்தான் போகிறது.  உலகம் இருக்கும் வரை இது ஓயப்போவதில்லை.

உண்மையில் மனிதனுக்கு நிலவைக் குறித்த ஆர்வமும், அச்சம் கலந்த அதிசயிப்பும், மகா வியப்பும் ஒன்று சேர்ந்து அதை தன் இலக்கியங்களில், கவிதைகளில், இசையில் இழுத்துவரச் செய்வதாக தோன்றுகிறது.  நிலவு குறித்த மர்மமான திகைப்பு அவனை அதை நோக்கிச்  செலுத்துகிறது.

இரவில் நிலவு மிளிர்வது சந்தேகமில்லாமல்  ஒரு காவியக் காட்சி.  முழு நிலவாகத் தோன்றுவதும், வடிவம் மாறுவதும், சுருங்குவதும், பின் பொலிவடைவதும் நாம் தினமும் காணும் ஒரு சாதாரண அபூர்வம். பூமியின் தோற்றத்தைப் பற்றி நாம் ஏறக்குறைய (!) தெரிந்துகொண்டு விட்டோம். ஆனால் அதே சமயத்தில் பூமியின் வெகு அருகே எப்போதும் ஒரே முகத்தைக் காட்டிக்கொண்டு சுற்றிவரும் அந்த விசித்தரமான வெள்ளை உருண்டையைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் இருக்கின்றன. நிலவு தோன்றியதா அல்லது பூமியின் அருகே மனிதன் இன்னும் அறிந்திராத விஞ்ஞான விதியின் படி தானே வந்து சேர்ந்ததா இல்லை சிலர் சொல்வதுபோல பூமியின் அருகே செயற்கையாக கொண்டுவரப் பட்டதா என்பது குறித்து பல விவாதங்கள் கட்டுரைகள் கருத்துக்கள் முடிவின்றி அலசப்பட்டு வருகின்றன.

அப்படியான ஒரு சதிக்கதையைப் பற்றியே இப்போது பேச இருக்கிறேன். நிலவு நாம் எண்ணி வருவதுபோல இயற்கையான துணைக் கோள் அல்ல அது வேற்று கிரகவாசிகளின் மாபெரும் விண்கலம். இதைப் படிக்கும்போது உங்களுக்கு ஏற்படும் திகைப்பு அல்லது நக்கல் எனக்குத் தெரிந்ததே. ஏனென்றால் நானும் முதன் முதலில் இதைப் படித்தபோது இப்படித்தான் உணர்ந்தேன். ஆனால் இந்த நிலவு ஒரு வேற்றுகிரக  விண்கலம் என்ற தியரி சற்று ஆழமாக நோக்கவேண்டிய கருத்துக்களை ஒட்டியே பேசப்படுகிறது.

70களின் துவக்கத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் இருவர் எழுதிய ஒரு புத்தகத்தில் இதைப் பற்றிய முதல் சிந்தனை விதை விதைக்கப்பட்டது. மைக்கல் வாஸின், அலெக்சாண்டர் ஷெசெபர்கவ் என்ற இரண்டு ரஷ்யர்கள் இந்தத் தியரியை உலகத்துக்கு அறிமுகம் செய்தார்கள். இதை ஆங்கிலத்தில் ஸ்பேஸ்ஷிப் மூன் தியரி (The spaceship moon theory)  என்று அழைக்கிறார்கள்.

நிலவு குறித்த சந்தேகங்கள்;

1. பூமியின் ஈர்ப்புச் சக்தியைத் தாண்டிய அளவுக்கு நிலவு மிகப் பெரிய அளவினாலான கோள்.  எனவே பூமியின் ஈர்ப்பின்படி நிலவு இங்கே வந்திருக்க முடியாது.

2. பூமி உருவானபோது அதோடு ஒட்டாமல் தனியே பிரிந்த  ஒரு துகளே நிலவு என்ற பொதுவான கருத்து ஒரு  பொய். நிலவிலிருந்து கொண்டுவரப்பட்ட நிலவுக் கற்கள் பூமியை விட பழமையானவை என்றறியப்பட்டுள்ளன.

3. நிலவுக் கற்களின் தனிமங்கள் பூமியில் இல்லாதவைகள்.

4. ஏன் நிலவானது ஒரு புதிர் போல எப்போதும் ஒரே பக்கத்தை பூமிக்கு காண்பித்தபடி சுற்றிவருகிறது?

இதன்படி  வேற்றுகிரகவாசிகள் நிலவை நமது பூமியின் அருகே கொண்டுவந்திருக்கலாம்  என்றும் அல்லது  இயற்கையாக பூமியின் அருகே நிலை கொண்டுவிட்ட நிலவை வேற்று கிரகவாசிகள் தங்களது விண்கலமாக மாற்றிக்கொண்டார்கள் என்றும் நம்பப்படுகிறது. இதற்கு இவர்கள் காட்டும் காரணம் நிலவின் மேல் காணப்படும் பள்ளங்கள்.

கிரேட்டர்கள் எனப்படும் நிலவுப் பள்ளங்கள் மர்மமான முறையில் தட்டையாக தோன்றுவது ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. உதாரணமாக பூமியில் மில்லியன் வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு விண்கல் மோதலில் உண்டான பள்ளம் மிக மிக ஆழமாக காணப்படுகிறது. (இது அட்லாண்டிக் கடலின் கீழே இருக்கலாம்  சொல்லப்படுகிறது.) இந்த விண்கல் மோதலில்தான் டைனோசர்கள் ஒரேடியாக ஒரே இரவில் மொத்தமாக அழிந்தன என்ற கருத்தும் தற்போது பெரிய அளவில் அங்கீகாரம் பெற்று வருகிறது.

மேலும் பல பள்ளங்கள் நமது பூமியில் விண்கல் மோதலினால் ஏற்பட்டுள்ளன. அவை பல மைல் தொலைவுக்கு ஆழமாக காணப்படும் அதே வேளையில் எந்தவித பாதுகாப்பு வளையங்களும் (ஓசோன் லேயர் போன்று) இல்லாத நிலவில் ஏற்படும் பள்ளங்கள் அதிக ஆழத்தில் இருக்கவேண்டும் ஆனால் வியப்பான வகையில் நிலவுப் பள்ளங்கள் வெகு தட்டையாக தோற்றமளிக்கின்றன. நான்கு அல்லது ஐந்து மைல் அளவிலேயே இவை இருக்கின்றன. இதன் பின்னணியில் என்ன விஞ்ஞான காரணம் இருக்க முடியும் என்று ஆராய்ந்தால் கிடைக்கும் பதில் நம் நிலவு நம்பிக்கையை தகர்த்துப் போடுகிறது.

ஆங்கிலத்தில் Hollow Moon Theory என்றழைக்கப்படும் சதிக்கதையின் படி நிலவின் உட்பகுதி நிஜத்தில் மற்ற கோள்கள் போன்று அடர்த்தியான பாறைகளால் ஆனதல்ல. நிலவின் உட்பகுதி பெரிய குழி போன்றது. மனித இனம் பூமியில் தோன்றும்  முன்னே நிலவில் இறங்கிய வேற்று கிரகவாசிகள் நிலவின் உட்பகுதியில் இருந்த கடிமனான பாறைகளை எதோ காரணங்களுக்காக (வெற்றுப் பகுதியை உருவாக்க அல்லது அந்தப் பாறைகளில் இருந்த தனிமத்துக்காக) முழுவதும் குடைந்து எடுத்துவிட்டதால் உண்டான   பவுடர் போன்ற நுண் துகள்களே   நிலவின் மேலே காணப்படும் நிலவு மண் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு நிலவின் உட்பகுதியை குடைந்து அதைச் சுற்றி மிக மிகத் தடிமனான ஒரு ஏலியன் உலோகத்தால் அதை பூசி அல்லது தடுப்புச் சுவர் அமைத்து உள்ளே அவர்கள் பல சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக சந்தேகர்கள் யூகம் கொள்கிறார்கள். எனவேதான் நிலவின் மீது மோதும் விண்கற்கள் நான்கு ஐந்து மைல் தொலைவைத் தாண்டி ஆழமாக பள்ளங்கள் ஏற்படுத்த முடியவில்லை என்றும்  அந்த தட்டையான பள்ளங்கள் நிலவின் மேற் பகுதியில் உள்ளனதன் காரணம் இதுதான் என்றும் இதன் மர்மத்தை உடைத்துச் சொல்கிறார்கள் அவர்கள்.

எதற்காக வேற்றுகிரகவாசிகள் இப்படியான சோதனைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கான விடை இல்லை. அதை நம்மால் அறிந்துகொள்ள இயலாது. யூகங்கள் மட்டுமே சாத்தியம். மேலும் இந்த சோதனைகள் நடைபெறும் நிலவின் பகுதியானது நம்மால் எப்போதுமே காண முடியாத நிலவின் இருண்ட பகுதி என்றும் (The Dark Side Of The Moon)   நிலவு எப்பொழுதுமே பூமிக்கு தன் ஒரே பக்கத்தையே காண்பித்தவாறு சுற்றிவருவதன் மர்மம் இதுவே என்றும் பொதுவாக நம்பப்படுகிறது.

நிலவில் மனிதன் இறங்கினானா என்ற கேள்வியை சற்று ஒதுக்கிவிட்டு கீழே இருக்கும் கருத்தை ஆராயலாம். நிலவில் அப்போலோ 11 விண்கலம் இறங்கியபோது நீல் ஆர்ம்ஸ்ட்ராங் இந்த வேற்றுகிரகவாசிகளை எதிர்கொண்டாதாக ஒரு கதை நிலவுகிறது.  நீல் ஆர்ம்ஸ்ட்ராங்-ஹூஸ்டனுக்கும் இடையேயான தகவல் தொடர்பு இரண்டு நிமிடங்கள் முற்றிலும் அற்றுப்போனது. அவர் கருத்துப்படி நிலவில் மிக மிகப் பெரிய இரண்டு வேற்றுகிரக விண்கலங்கள் அங்கே ஏற்கனவே இருந்தன.

ஓட்டோ பைண்டர் என்ற ஒரு நாசா விஞ்ஞானியின் கருத்துப்படி அமெரிக்க ஹேம் ரேடியோக்கள் அப்போது நிலவில் நிகழ்ந்த உரையாடலை கிரகித்துக் கொண்டன. அந்த இரண்டு நிமிட வானொலி  அமைதியில் (Radio Silence)  நிகழ்ந்த உரையாடல்:

ஆர்ம்ஸ்ட்ராங்: என்னது அது? அதுதான் எனக்குத் தெரிய வேண்டும்...

மிஷன் கண்ட்ரோல்: அங்கே என்ன? மிஷன் கண்ட்ரோல் அப்போலோ பதினொன்றை அழைக்கிறது...

ஆர்ம்ஸ்ட்ராங்: இந்த இயந்திரங்கள் மிகப் பெரியதாக இருக்கின்றன. மகா பிரம்மாண்டமானவை.. கடவுளே, கண்டிப்பாக நீங்கள் இதை நம்பப்போவதில்லை.. நிலவின் பள்ளங்கள் உள்ள அந்தப் பகுதியில் நான் இன்னும் சில விண்கலங்களை இங்கே பார்க்கிறேன்.. நிலவின் மேலே அவை நின்று கொண்டிருக்கின்றன எங்களை கவனித்தவாறு...

நாசா அப்போலோ 17க்குப் பிறகு தனது நிலவுத் திட்டத்தை திடுமென நிறுத்திக்கொண்டது  வேற்றுகிரகவாசிகளின் எச்சரிக்கையினால்தான் என்று சிலர் நம்புகிறார்கள். லூனா பேஸ் (Luna Base) என்றழைக்கப்படும் இந்த வேற்று கிரகவாசிகளின் சோதனைகள் குறித்து நாசா அறிந்தே இருக்கிறது என்ற கருத்தும் இருக்கிறது.


நிலவு குறித்து மேலும்  பல நம்ப இயலாத கருத்துக்கள் இருக்கின்றன. அதில் ஒன்று டைம் ட்ராவல் சம்பந்தப்பட்டது.  கால பிரயாணம் செய்து பிற்கால நமது சந்ததியினர் ,மனிதன் உருவாகும் முன்னரே இங்கு வந்து நம்முடைய நல் வாழ்வுக்காக நிலவை அமைத்தார்கள் என்ற கருத்தும் பரவலாக எண்ணப்பட்டு வருகிறது.

கொஞ்சம் நிலவு கொஞ்சம் புனைவு என்பதை நிஜமாக்கும் இத்தனை சங்கதிகள் சற்று ஆச்சர்யம் சற்று அதிர்ச்சி அளிப்பவை என்பதை நானறிவேன். ஆனால் இதை நம்புவதும், ஒரேடியாக தூர எறிவதும் அவரவர் விருப்பதிற்க்குரியது.

நிலவைப் பற்றி இன்னும் நாம் பல கவிதைகள் புனைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் நிலவை காணும் பொழுதெல்லாம் இந்த வட்ட வடிவ வெண்ணிற அதிசயம் நம்மை கண்காணிக்கும் ஒரு வான்வெளிக் கண் என்பதை சற்று நினைவில் கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது.





 இசை விரும்பிகள் XXVIII - எம் எஸ் வி :  தீரா இசை.